கடைசி பானம்!
பவானிக்கும் கமலாவுக்கும் தான் இழைத்துவிட்ட நம்பிக்கை துரோகத்துக்குப் பரிகாரமாக ஏதாவது செய்ய நினைத்தான் கல்யாணம். கோவர்த்தனன் உமாகாந்திடம் காட்டும் வெறுப்புக்குப் பின்னணியில் கடமை உணர்ச்சிக்கும் மேலாக ஏதோ அந்தரங்கம் இருக்க வேண்டும் என்று தோன்றிற்று அவனுக்கு. ஏற்கனவே ஸி.ஐ.டி.க்கள் உமாகாந்தின் படத்தை அவனிடம் காட்டியபோது கோவர்த்தனின் முக ஜாடையை அதில் கண்டு அவன் அதிசயித்திருந்தான். உமாகாந்தனைப் பவானி வீட்டில் நேரில் சந்தித்த பிறகு அவன் குழப்பம் அதிகரித்திருந்தது. எனவேதான் ஒரு பாட்டில் விஸ்கியுடன் கோவர்த்தனனைத் தேடி வந்தான் கல்யாணம். அவர் நாவைத் தளர்த்தி ஏதாவது பேசவைக்கலாம் என்ற அபிப்பிராயம் அவனுக்கு இருந்தது.
ஆனால் கோவர்த்தனன் நிறையப் பேசிய போதிலும் கல்யாணம் எதிர்பார்த்ததுபோல் புதிய திருப்பம் ஏதும் ஏற்படக் கூடிய தகவலாக ஒன்றும் தெரிய வரவில்லை. உமாகாந்தனைத் தன் தம்பி என்றே ஒப்புக்கொண்ட கோவர்த்தனன், அதற்காக அவனிடம் கருணை காட்ட முடியாது என்று அழுத்தமாகக் கூறினார்.
இதையெல்லாம் ஒளிந்து கேட்டுக்கொண்டிருந்த சமையல்காரர் மணி நடந்துகொண்டவிதம் மட்டும் கல்யாணத்துக்கு ஆச்சரியம் அளித்தது. 'இந்த மனுஷன் எதற்காக மறைந்திருந்து நான் கோவர்த்தனனிடம் பேசுவதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்? உமாகாந்தன் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் கையைப்பிசைகிறாரே எதற்கு?" என்று எண்ணினான். மணியின் கோபத்தை அல்லது தாபத்தை வேண்டுமென்றே மேலும் தூண்டிவிடத் தீர்மானித்துப் பேசினான்.
"நன்றாகச் சொன்னீர்கள் சார்! மனுநீதிச் சோழன் அல்லது சிபிச் சக்கரவர்த்தி பரம்பரையில் உதித்தவரா யிருக்க வேண்டும் நீங்கள்! சொந்தத் தம்பி என்பதற்காகச் சட்டத்தை மறந்து நீங்கள் காரியம் செய்ய முடியுமா? 'ஐயோ பாவம்! பிழைத்துப் போகட்டும்' என்று பாங்குக் கொள்ளைக் காரர்களையும், ராஜத் துரோகிகளையும் வெளியே நடமாட விட்டால் என்னவாகிறது? அராஜகம் தாண்டவமாடும்! இந்த மாதிரி ஆசாமிகளைச் சிறையில் தள்ளினால் கூடப் போதாது ஸார். நாற்சந்தியில் நிற்கவைத்துத் தண்டிக்க வேண்டும்!"
இத்தருணத்தில் கல்யாணம் எதிர்பார்த்த நற்பலன் கிடைத்தது. இதற்குமேல் பொறுத் திருக்க முடியாதவனாக மணி முன்னால் பாய்ந்து வந்தார். "வாயை மூடுய்யா! ஏதோ போகட்டும் என்று பார்த்தால் மேலே மேலே பேசிக் கொண்டே போகிறாயே!"
கோவர்த்தனன் திடுக்கிட்டார். மணி அங்கே மறைவிலிருந்து உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார் என்பது அவருக்கு அப்போதுதான் தெரிந்தது. "மணி உள்ளே போ!" என்று அதட்டினார்.
"முடியாது!" என்றார் மணி! "முடியவே முடியாது. இத்தனை நாட்களாக எனக்கு மூக்கணாங் கயிறு போட்டு வைத்திருந்தாய். இப் போது நான் அதை அறுத்துக் கொண்டு விடுதலை பெற்று விட்டேன். இனி என்னால் சும்மா இருக்க முடியாது! உமாகாந்துக்கு மறுபடியும் நீ கடுமையான தண்டனை விதிக்கப்போவதைப் பார்த்துக் கொண்டு நான் பேசாமல் இருக்க மாட்டேன்."
"மணி! நீ எனக்குக் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று? சத்தியத்தை மீறலாமா நீ!"
"இத்தனை நாட்களாக அதற்குக் கட்டுப் பட்டுத்தான் இருந்தேன். ஆனால் இப் போது உன் நடத்தை எல்லை மீறிப் போகிறது. நான் பொறுமை இழந்து நிற்கிறேன்."
"அப்படியானால் சரி, நடந்ததை யெல்லாம் விவரமாகச் சொல்லு" என்று அமைதியாகக் கூறினார் கோவர்த்தனன். பிறகு கல்யாணம் பக்கம் திரும்பி, "அப்பனே! நீயும் பவானி போலவே உமாகாந்தனை விடுவிக்க மிகவும் ஆவலுள்ளவனா யிருப்பது எனக்குத் தெரியும். சற்று நேரமாகச் சும்மா என்னிடம் நடித்துக் கொண்டிருந்தாய் இல்லையா? உமாகாந்தனை விடுவிக்க ஏதாவது சாட்சியம் அகப்படுமா என்று பார்க்கத்தானே என் வாயைக் கிளறிக் கொண்டிருந்தாய்? இதோ கிடைத்து விட்டது. மணியைச் சாட்சிக் கூண்டில் ஏற்று; உமாகாந்தனை விடுவித்து விடலாம் நீ!"
அளவற்ற வியப்பும் திகைப்பும் அடைந்தவனாகக் கல்யாணம் மணியையும் கோவர்த்தன்னையும் மாறி மாறிப் பார்த்தான். கோவர்த்தனன் மணியை நோக்கி, "சொல்லேனப்பா ஏன் தயங்குகிறாய்? சொல்லு!" என்றார்.
"கூறுகிறேன்! கல்யாணம் ஸார், கேளுங்கள்!" என்ற மணி ஆவேசம் வந்தது போல் படபடவென்று பல வருஷங்களுக்கு முன் ஒரு நாள் இரவு நடந்தவற்றைச் சொல்லலானார்.
மணி ரொம்பக் காலமாகக் கருணாகரன் வீட்டில் சமையல்காரராக வேலை பார்ப்பவர். கோவர்த்தனனையும் உமாகாந்தனையும் தோளில் தூக்கி வளர்த்தவர். உமாகாந்தன் தன் தகப்பனாருடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அன்றிரவு மணிக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. புரண்டு புரண்டு படுத்தார். நள்ளிரவு சுமாருக்கு ஏதோ அரவம் கேட்க, எழுந்து போய்ப் பார்த்தார். கருணாகரன் பாங்குச் சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் தேடிவிட்டு அது காணாமல் பரக்கப் பரக்க ஓடுவதைக் கவனித்தார். உடனேயே அவர் மனமும் கருணாகரன் உள்ளத்தைப் போலவே முதலில் பாங்குச் சாவிக்கும் உமாகாந்தனுக்கும்தான் முடிச்சுப் போட்டது. என்றாலும் ஏதோ சந்தேகம் உதித்தது. கருணாகரன் வாசல் கதவைப் பரபரப்புடன் திறந்து ஓடினாரே தவிர தாழ்ப்பாளை நீக்கவில்லை. ஆகவே அவருக்கு முன்பாகவே யாரோ வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியேறியிருக்கிறார்கள்! யார் அது? மணி கோவர்த்தனன் அறையில் எட்டிப் பார்த்தார். அவனைக் காணோம். வீடு முழுக்கத் தேடினார். எங்கும் அவன் இல்லை. கருணாகரனின் மனைவி, தன் பிள்ளை உமாகாந்தனுக்குக் கடைசியாக ஒரு முறை தன் கையால் சாப்பாடு போடவேண்டும் என்ற ஆசைப்பட்டு அவனைத் தன் கணவருக்குத் தெரியாமல் வரச் சொல்லி யிருந்தாள். அவனுக்காகக் கொல்லைக் கதவைத் தாழ்ப்பாள் போடாமல் சாத்தி வைத்து விட்டுச் சமையலறையில் படுத்தவள் இலேசாகக் கண் அயர்ந்துவிட்டாளோ என்னமோ மணிக்குத் தெரியாது. எட்டிப் பார்ப்பதுகூட மரியாதைக் குறைவாக அவருக்குத் தோன்றியது.
கொஞ்ச நேரம் கழித்து வாசல் பக்கமாக வியர்க்க விறுவிறுக்கச் சந்தடியின்றி ஓடிவந்து தன் அறைக்குள் கோவர்த்தனன் நுழைந்து இழுத்துப் போர்த்துக் கொண்டு படுப்பதை மணி பார்த்தார். அவனை உலுக்கி எழுப்பி உட்கார வைத்து, "எங்கே போயிருந்தாய்?" என்று அதட்டலாகக் கேட்டார். கோவரத்தனன் அரண்டு போய்விட்டான். "உனக்குப் புண்ணியமாகப் போகட்டும். இன்றிரவு நான் வீட்டைவிட்டு வெளியேறியதாக யாரிடமும் சொல்லாதே" என்று கெஞ்சினான். மேலும் துருவி விசாரித்தபோது கோவர்த்தனனுக்கு உண்மையை ஒப்புக் கொள்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. உமாகாந்தன் தக்க சமயத்தில் வந்து குற்றத்தைத் தான் ஏற்றுக் கொண்டு இவனைத் தப்புவித்ததைக் கூறினான்.
தொடர்ந்து சொன்னான். "உமாகாந்தன் எப்படியானாலும் இந்த வீட்டில் இனி அடி எடுத்து வைக்க மாட்டான். அதிலேயே அப்பா மனமுடைந்து போயிருக்கிறார். இப்போது நானும் திருட்டுப் பட்டம் சுமந்து சிறை சென்றால் அப்பாவின் இதயம் வெடித்து விடும். அவரை உயிரோடு கொன்ற பாபத்தைக் கட்டிக் கொள்ளாதே. நான் வீட்டை விட்டு வெளியேறியதை வெளிவிடாதே! எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடு!"
மணி மானஸ்தரான கருணாகரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடும் என்ற பயத்தில் சத்தியம் பண்ணிக் கொடுத்தார். ஆனால் எமன் வேறு உருவத்தில் வந்து கருணாகரனை அழைத்துப் போய்விட்டான். சில நாட்களுக்குப் பிறகு கோவர்த்தனன் கடன்பட்டிருந்த மார்வாடி வந்து அட்டகாசம் செய்தபோது கருணாகரன் படுக்கையில் விழுந்தார். பிறகு அவர் எழுந்திருக்கவே யில்லை.
இந்த நிகழ்ச்சிகளை விவரித்த மணி, கடைசியில் சொன்னார்; "நாலு வருஷங்களாகப் பல்லைக் கடித்துக் கொண்டு இவனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி வருகிறேன். இன்னும் இரண்டு வருஷங்கள்தான்; உமாகாந்தன் விடுதலை பெற்று வந்துவிடுவான் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவனைச் சந்தித்து மன்னிப்புக் கேட்கும் தினத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சற்று முன் நீங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதிலிருந்து இவன் மேலும் ஏழெட்டு வருஷம் உமாவுக்குச் சிறைத் தண்டனை கொடுத்துவிட உத்தேசித்திருப்பது தெரிகிறது. இந்தச் சூழ்ச்சியை நான் முறியடித்தே ஆகவேண்டும்."
"கேட்டுக் கொண்டாயா கல்யாணம்?" என்றார் கோவர்த்தனன். இதுவரை உமா காந்தனை விடுவிக்க உனக்கோ பவானிக்கோ சாட்சியமே இல்லாதிருந்தது. இப்போது அது அகப்பட்டு விட்டது" என்று கூறிச் சிரித்தபடியே தமது சட்டைப் பையிலிருந்து இரண்டு உறைகளை எடுத்து மேஜையின் மீது போட்டார். "இவற்றை இன்றே தபாலில் சேர்க்க வேண்டும் என்று எண்ணி யிருந்தேன். ஆனால் தபாலுக்கு நேரமாகி விட்டது. உன்னிடம் ஒப்படைக்கிறேன் கல்யாணம், நீயே உரிய அதிகாரிகளிடம் சேர்ப்பித்துவிடு!"
"என்ன இவை?" என்றான் கல்யாணம் திகைப்புடன்.
"ஒன்று என் ராஜிநாமாக் கடிதம். மற்றொன்று என் குற்றத்தை நானே ஒப்புக் கொண்டு எழுதிய வாக்குமூலம்."
"மாஜிஸ்திரேட் ஸார்! இது என்ன தாக்குதலுக்கு மேல் தாக்குதலா யிருக்கிறதே!" என்றான் கல்யாணம் நாத் தழுதழுக்க.
மணி நின்றபடியே விசும்பி அழுதார்.
"கல்யாணம், நான் சொல்வதைக் கவனி. மணி, நீயும் கேட்டுக் கொள்!" என்றார் கோவர்த்தனன். "இந்த வாக்குமூலத்தையும் ராஜிநாமாக் கடிதத்தையும் கல்யாணம் இங்கு வந்த பிறகு நான் எழுதவில்லை. அதற்கு முன்பே எழுதி என் பாக்கெட்டில் வைத்திருந்தேன். அந்த மட்டில் ஒப்புக்கொள்வீர்களல்லவா?"
"உண்மைதான் ஸார், நான் இங்கே வந்த பிறகு, நீங்கள் விஸ்கி டம்ளரைத் தவிர பேனாவையோ தாளையோ கையால் தொடவில்லையே?" என்றான் கல்யாணம்.
"கரெக்ட்! ஆக, மணியின் சாட்சியம் உனக்கு அகப்பட்டு விட்டபடியால் இனி நான் தப்ப முடியாது என்ற நிலையில் இவற்றை நான் எழுதவில்லை. அதற்கு முன்பே எழுதி விட்டேன். எழுதத் தூண்டியது என்ன தெரியுமா?"
"தெரியவில்லையே ஸார்!"
"என் தம்பி உமாகாந்தனின் தியாகம்தான்! இப்போது அவன் பிடிபட்டதும் பவானி அவனை வழக்காடுமாறு வேண்டினாள். அவன் மறுத்து விட்டான். இரண்டாவது தடவையாகத் திருட்டுக் குற்றத்தைத் தன்மீதே சுமத்திக் கொண்டான். அதுமட்டுமில்லை. பவானியை விடுவிக்க வேண்டும் என்பதற்காக மறுபடியும் புதிய குற்றச்சாட்டுக்களை தன்மீதே சுமத்திக் கொண்டான். அவளுக்குத் தன்னை யார் என்று தெரியாது என்றும் தப்பிச் செல்லத் தனக்கு உதவுமாறு அவளைத் தான்தான் நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் வாக்குமூலம் எழுதிக் கொடுத்தான். இந்த வாக்குமூலம் அவனுக்குக் கிடைக்கக்கூடிய தண்டனையை மேலும் அதிகரிக்கும் என்பதை பவானியோ அவனுக்காகத் தன் இளமையை உணர்ந்திருந்தும் இப்படிச் செய்தான்.யெல்லாம் தியாகம் புரியத் தயாரானாள்.
சிறைத் தண்டனைகளை முழுமையாக அனுபவித்துவிட்டு அவன் திரும்பும்வரை தான் காத்திருக்கத் தீர்மானித்தாள். இந்தத் தியாகப் போட்டியை அறிய வந்தபோது எனக்கு என்னுடைய நீசத்தனத்தின் பயங்கரம் புரிந்தது. அந்தக் காதலர்களைப் பிரித்து வைப்பது மாபாதகம் என்று பட்டது. அதனால்தான் இந்தக் கடிதங்களை எழுதினேன். கல்யாணம்! இதை நன்றாக நினைவில் வைத்துக்கொள். பவானியிடமும் உமாகாந்தனிடமும் மறக்காமல் சொல்லு! என் மனம் மாறியது உமாகாந்தன் - பவானியின் பரஸ்பரத் தியாகங்களால்தான்; மணி சாட்சியம் கூற முன் வந்ததால் அல்ல."
கல்யாணம் கண் கலங்கக் கனத்த இதயத்துடன் கடிதங்களை எடுத்துப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளப் போனான்.
"என் எதிரிலேயே ஒரு முறை படித்துப்பார்த்துவிடு கல்யாணம்; அப்புறம் வேறு உறைகளில் வைத்துக்கொள்ளலாம்" என்றார் கோவர்த்தனன்.
கல்யாணம் உறைகளைக் கிழித்துப் படித்தான். சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தன இரு கடிதங்களும்.
பாக்கெட்டில் அவற்றை வைத்துக்கொண்டு கோவர்த்தனன் கரங்களைப் பற்றினான் அவன். அவரோ அவனைத் தம் மார்புற இறுகித் தழுவிக்கொண்டார். "கல்யாணம்! நான் உன்னிடம் பல தடவைகளில் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறேன். அதையெல்லாம் மறந்துவிடு" என்றார்.
"ஆகட்டும் ஸார், வருகிறேன்" என்று கூறி விடைபெற்றான் கல்யாணம்.
கோவர்த்தனன், தாரை தாரையாகக் கண்ணீர் உகுத்தபடி நின்ற மணி பக்கம் திரும்பிச் சொன்னார்: "மணி! நான் குடிக்கக் கூடாது என்று அடிக்கடி வற்புறுத்தி வந்தாயல்லவா? நாளை நான் ஜெயிலுக்குப் போனால் எப்படிக் குடிக்க முடியும்? அதனால் திஸ்வில் பி மை லாஸ்ட் டிரிங். இந்தக் கடைசி பானத்தை நீயே உன் கையால் ஊற்றிக் கொடு, பிளீஸ்!" என்றார்.
கேட்டை நோக்கி நடந்த கல்யாணத்தின் காதில், "திஸ் வில் பி மை லாஸ்ட் டிரிங்" என்று கோவர்த்தனன் கூறியது விழுந்தது. ஆனால் அதை அவன் அப்போது சரியாக அர்த்தம் பண்ணிக் கொள்ளவில்லை. அந்தக் கடைசி மதுபானத்தை மணி ஊற்றிக் கொடுத்துவிட்டு அப்பால் போன பிறகு, கோவர்த்தனன் அதில் விஷத்தைக் கலந்த விஷயம் அவர் மூச்சுப் பிரிந்த பிறகுதான் பரவியது.
அது சம்பந்தமாகவும் யாதொரு சந்தேகமும் யாருக்கும் ஏற்படாதிருக்க மூன்றாவதாக ஒரு கடிதத்தையும் முன்னேற்பாடாக எழுதித் தமது சட்டைப் பையில் வைத்திருந்தார் கோவர்த்தனன்.

