கல்யாணத்தில் கலாட்டா!

கமலாவைப் பாயில் அமரச் செய்து தலைவாரத் தொடங்கினாள் காமாட்சி அம்மாள்.

"அநாவசியமா உனக்குச் சிரமம். தலை சாமானெல்லாம் வைத்துப் பின்ன வேண்டி யிருக்கு. இல்லாத போனால் நானே பின்னிக் கொண்டுவிடுவேன்" என்றாள் கமலா.

"சரி, சரி! ரொம்பத்தான் பிகு பண்ணிக் கொள்ளாதே! நாளைக்குத் தலைவாரிப் பின்ன ஒருத்தி, புடவை கட்டிவிட ஒருத்தின்னு வேலைக்காரிகளை நியமித்துக் கொள்வாய். நான் பின்னுவது இதுதானே கடைசித் தடவை?" என்றாள் காமாட்சி.

'முதல் தடவையும் இதுதானே' என்று கூற நினைத்தாள் கமலா. ஆனால் சொல்ல வில்லை. அவளுக்கு நினைவு தெரிந்து காமாட்சி அம்மாள் அவளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விட்டதோ தலைவாரிப் பின்னியதோ எதுவும் கிடையாது. எனவே இன்றைய திடீர்க் கரிசனம் அவளுக்குப் புரியவும் இல்லை; பிடிக்கவும் இல்லை.

"இந்தா, இப்படிக் குனிஞ்சுண்டா எப்படிப் பின்னுகிறது? தலையை நிமிர்த்து. மணையில் உட்கார்ந்த பிறகு வெட்கப்பட்டுக் கொள்ளலாம்" என்ற காமாட்சி, கமலாவின் முதுகிலே உள்ளங்கையை வைத்து ஓர் அழுத்து அழுத்தினாள். விடுபட்ட ஸ்பிரிங் சுருள் போல் 'விண்'ணென்று நிமிர்ந்தாள் கமலா. எதிரே யிருந்த கண்ணாடியில் அவள் முகம் காமாட்சிக்குத் தெரிந்தது.

"அடி பாவி! நல்ல நாளும் அதுவுமா எதுக்குடி இப்படி அழறே? கண்ணீரை மறைக்கத்தான் அப்படிக் குனிந்த தலை நிமிராமல் இருந்தாயா? அங்கே போய் மணையில் உட்கார்ந்த பிறகு இப்படிக் கண்ணீர் விட்டுக் கலங்கினாயோ தெரியும் சேதி! எதற்கு இப்படி எதையோ பறி கொடுத்து விட்டது போல் முகத்தை வைத்துக் கொள்கிறாய்? உனக்கு என்ன கேடு வந்துவிட்டது? கோடீசுவரன் வந்து குப்பையிலே கிடந்த உன்னை அரண்மனையிலே வைக்கிறேன் என்கிறான். அதற்குக் கசக்கிறதோ? நாளைக்கு அந்த மாளிகையின் எசமானியாக இருக்கும்போது என்னைத் திரும்பிகூடப் பார்க்க மாட்டாய்!"

"நான் ஒன்றும் அப்படி நன்றி கெட்டவள் இல்லை, அம்மா! நாளைக்கு நீங்களே தெரிந்து கொள்வீர்கள்."

"நாளைக்கு எங்களுக்கு நீ சாதிக்கப் போவது கிடக்கட்டும்; இன்றைக்கு எங்கள் மானத்தைக் காப்பாற்று. ஏதாவது ஏறுமாறாக நீ செய்து விட்டால் உன் அப்பாவும் நானும் கல்லைக் கட்டிக் கொண்டு கடலிலே விழ வேண்டியதுதான். அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொள்ளாதே! மாலை மாற்றும் போதிலிருந்தே சிரித்த முகமாகச் சந்தோஷமாக இருக்க வேண்டும். புரிந்ததா?"

"சரியம்மா" என்றாள் கமலா.

கல்யாணப் பந்தலில் ரங்கநாதனும் கமலாவும் பட்டுப் பாயில் உட்கார்ந்திருந்தார்கள். மேளம் முழங்கிற்று. புரோகிதர் உரக்க மந்திரம் சொன்னார்.

"என்னய்யா, கல்யாணப் பெண்ணுக்குமேல் நீர் வெட்கப்படுகிறீரே! நிமிர்ந்து ஜம் மென்று உட்காருமேன்" என்றார் ரங்கநாதனின் நெருங்கிய உறவினர் ஒருவர், உரிமையோடு. "விரைப்பாக உட்காருகிற ஜோரிலேயே ஒரு பத்து வயசைக் குறைச்சுடலாங்கிறேன்!"

ரங்கநாதன் முகத்தில் வாட்டம் படர்ந்தது. 'வயது விஷயத்தை இத்தருணத்தில் அந்த உறவினர் வேண்டும் என்றே நினை வூட்டினாரா அல்லது மனப்பூர்வமான நல் லெண்ணத்தில் பேசினாரா? இந்தச் சொல்லம்பு கமலாவை எப்படிப் பாதித்திருக்குமோ? அவர் கவலையோடு கமலாவை ஒரு முறை திரும்பிப் பார்த்தார். அவள் தலை குனிந்திருந்ததால் முகத்தைப் பார்க்க முடியவில்லை. என்றாலும் அவள் அமர்ந்திருந்த நிலையிலும் அழகை ரசிக்க முடிந்தது. தலைகொள்ளாத ஆபரணங்கள். புஷ்பம்; புதுப் பட்டு ரவிக்கையின் 'பஃப்' மடிப்புக்குக் கீழிருந்து புறப்பட்டு முழங்காலைச் சுற்றி வளைத்த வாழைத் தண்டுக் கரங்கள். புடவைக் கொசுவங்களுக்கு இடையிலிருந்து நீண்ட செம் பஞ்சுக் குழம்பு பூசிய பாதங்கள். அவற்றின் ஐந்து விரல்களையும் தனித் தனியே தொட்டுப் பார்த்து அவற்றின் மென்மையை ரசிக்க வேண்டும் என்று எண்ணினார் ரங்கநாதன். 'விரல்களை மட்டும்தானா?' என்று எண்ணியபோது அவருக்கு மேனி சிலிர்த்தது. கமலா தன்னிடம் மனப்பூர்வமாகத் திருமணத்துக் குச்சம்மதம் தெரிவித்த தினத்தை எண்ணிப் பார்த்தார் அவர்.

"ஒட்டும் தையலுமாக இருந்த அந்தப் பழம் புடவையிலேயே அவள் எத்தனை அழகாகக் காட்சி அளித்தாள்! இனி அவளை எப்படியெல்லாம் அலங்கரித்து ஆசை தீரப் பார்க்கலாம்!"

"திருமாங்கல்யதாரணம் ஆகலாமா?" என்று மாப்பிள்ளையையும் அருகிலிருந்த வேறு இரு பெரியவர்களையும் கேட்டு அனுமதி பெற் றுக் கெண்டார் புரோகிதர். அச்சமயத்தில் சத்திரத்தின் வாசலில் பஸ் வந்து நின்றது. கல்யாணமும் அவர் நண்பர்களும் இறங்கித் திபுதிபுவென்று ஓடி வந்தார்கள். சிலர் நேரே மேளகாரரிடம் போய் நாயனத்தையும் தவிலையும் பிடுங்கிக் கொண்டு தெருப்பக்கம் சென்றார்கள். ஒருவன் சர்க்கரைத் தட்டை எடுத்துத் தரையில் சிதறினான். இன்னொருவன் சந்தனக் கிண்ணத்தைக் கவிழ்த்தான். வேறு ஒரு திடகாத்திர தேகம் உள்ளவன் புரோகிதரைத் தூக்கி நிறுத்தி மண்டபத்துக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனான். ஒருவன் ரங்கநாதன் கரத்திலிருந்த தாலியை வெடுக் கென்று பிடுங்கிக்கொண்டான். மற்றொருவன் விரித்திருந்த ஜமக்காளம் ஒன்றை இழுத்து ரங்கநாதனின் மீது போட்டான்.

பந்தலில் இருந்தவர்கள் எழுந்து இரைச்சலும் கூச்சலும் இட்டுக் கொண்டு அங்குமிங் கும் ஓடினார்கள். பந்தல் ஒரு மூலையில் சரிந்து விழுந்தது. ஒருவன் "நெருப்பு! நெருப்பு!" என்று கத்தினான். "ஜப்பான்காரன் வந்து விட்டான்" என்றுகூட ஒரு கேலிக் குரல் எழுந்தது! ஜப்பான்காரன் வந்து விட்டதாக நம்பினார்களோ இல்லையோ, வாலிபர்கள் சிலர் 'ரௌடி' களாக மாறிக் கல்யாணத்தைக் கலைப்பதை எல்லாரும் புரிந்து கொண்டார்கள். ரங்கநாத முதலியாரின் அழைப்பை ஏற்று வந்திருந்த சொற்ப விருந்தினரும் பரபரப்படைந்து கிளம்பினார்கள். அந்த வாலிபக் கூட்டத்தை எதிர்க்கவும் அச்சம்; அங்கே இருக்கவும் பயம். தப்பினால் போதும் என்று சத்திரத்தைவிட்டு, வாசல் பந்தலைவிட்டு தெருவைவிட்டு, ஊரைவிட்டேகூட ஓடினார்கள். ஊர் எல்லை தாண்டிய பிறகுதான் நின்று திரும்பிப் பார்த்தார்கள்.

அமர்ந்த நிலையில் இருந்த, ரங்கநாத முதலியார் மீது விழுந்த ஜமக்காளம் அவரை நாலா புறமும் நன்றாக மூடியது. நாலு பேராகச் சேர்ந்து அவரைக் குண்டுக் கட்டாக மூட்டை தூக்குவதுபோல் தூக்கிக் கொண்டு வாசலுக்குப் போனார்கள். பஸ்ஸின் உள்ளே உருட்டி விட்டார்கள். பின்னோடு தாங்களும் ஏறிக்கொண்டு ஜமக்காளத்தின் முடிச்சை இறுக்கினார்கள்.

காமாட்சி அம்மாள் கமலாவைத் தோளில் சார்த்தியபடி ஒரு மூலையில் பயந்து நடுங்கியவாறு நின்றாள். கமலா விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். விசு, "அப்பா! எனக்குப் பயமாக இருக்கு, அப்பா!" என்று திரும்பத் திரும்பக் கூறியபடி மாசிலாமணியின் கால்களைக் கட்டிக் கொண்டு நின்றான். அவரோ ஏதொன்றும் புரியாமல் பிரமித்துப் போயிருந்தார்.

கல்யாணம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் திட்டம் சரி வர நிறைவேறியதைத் தெரிந்து கொண்டு மூலையில் இருந்த கமலாவையும் அவள் தாயாரையும் நெருங்கினான்.

"கமலா! நான் இப்போது இங்கே தாமதிப்பதற்கில்லை. உடனே ராமப்பட்டணம் திரும்ப வேண்டும். இன்னும் சற்று நேரத்தில் என் அப்பா இங்கே வருவார். உங்களையெல்லாம் பத்திரமாக ஊருக்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பார். நீ கவலைப் படாதே! உனக்கு இனி அந்தக் கிழக் கோட் டான் ரங்கநாதன் ஒரு தொந்தரவும் தராது. நன்றாக அவருக்குப் பாடம் கற்பித்து விட்டோம்!"

விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்த கமலாவுக்குத் திடீரென்று எங்கிருந்துதான் அத்தனை துணிச்சலும் ஆவேசமும் வந்ததோ தெரியாது. கண்ணீர் வடிந்து கரை படிந் திருந்த முகத்தை விருட்டென்று நிமிர்த்தினாள். கோபமும் தாபமும், ஏக்கமும் ஏமாற்றமும் பிரதிபலிக்கக் கல்யாணத்தை நேருக்கு நேர் பார்த்தாள். பிறகு, "சீ! நீயும் ஓர் ஆண்பிள்ளையா?" என்றாள்.

கல்யாணத்துக்குத் தன் தலையில் இடியே விழுந்துவிட்டது போல் இருந்தது. அவன் என்ன பதில் சொல்வது. எப்படி நடந்து கொள்வது என்று புரியாமல் திகைத்தான்.

இதற்குள் வாசலில் பஸ் ஹாரன் ஒலி கேட்டது. பஸ்ஸில் ஏறாமல் அவனுடன் நின்ற வாலிப நண்பர்கள் ஓரிருவர், "கல்யாணம்! சீக்கிரம் வாப்பா! விளக்க உரையெல்லாம் அப்புறம் நடக்கலாம்" என்று துரிதப் படுத்தினார்கள். அங்கே காலதாமதம் செய்வது ஆபத்து என்று நினைவூட்டினார்கள்.

கல்யாணம், கமலாவை, 'என்னை மன்னித்துவிடு' என்பது போல் ஒரு முறை பார்த்தான். "எல்லாம் உன்னுடைய நன்மைக்குத்தான் செய்தேன், கமலா! இப்போதில்லை யானாலும் என்றாவது ஒருநாள் இதை நீ புரிந்து கொள்வாய்" என்றான். பிறகு 'விருட்டென்று திரும்பிச் சென்று வாசலில் புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டான்.

திருநீர்மலையிலிருந்து கிளம்பி ராமப்பட்டினம் நோக்கிச் சுமார் அரை மணி நேரம் பயணப்பட்ட பிறகுதான் பஸ்ஸுக்குள் இருந்த மூட்டையை இளைஞர்கள் அவிழ்த்தார்கள். ரங்கநாத முதலியார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மெல்ல எழுந்து அவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை அவர். அவர் கோபமாய்ச் சீறியிருந்தால் வாலிபர்களுக்கும் பதிலுக்கு ஏச வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், அவரோ பாய்வதற்கு முன் பதுங்கும் புலியாகக் காணப்பட்டார். 'கிழட்டுப் புலியானாலும் புலி புலிதான்' என்பது போல் இருந்தது அவர் நடந்து கொண்டவிதம்.