பவானியின் காதலன்
இரண்டு நாட்கள் கழித்துக் கல்யாணசுந்தரம் மறுபடியும் கமலாவின் வீட்டுக்குப் போனான். கமலாவும் விசுவும் மட்டும் இருந்தார்கள். 'நல்ல வேளையாகப் போயிற்று, கமலாவுடன் சற்று மனம் விட்டுப் பேசலாம்' என்று அவன் சந்தோஷப்பட்டது தப்பாகப் போயிற்று. கமலா அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. முகம் காட்டாமல் தலை குனிந்து கொண்டோ அல்லது வெட்கப்பட்டுக் கதவுக்குப் பின் மறைந்திருந்தோ பேசினாளா என்றால் அதுவும் கிடையாது.
"அப்பாவும் அம்மாவும் கோவிலுக்குப் போயிருக்காங்களாக்கும்?" என்றான் கல்யாணம். பதில் இல்லை. "திரும்புவதற்கு நேரமாகுமோ?" என்றான். அதற்கும் பதில் இல்லை. "இப்பத்தான் போனார்களா? அல்லது கிளம்பி ரொம்ப நேரமாச்சா?" என்று மீண்டும் ஒரு கேள்வியைப் போட்டுப் பார்த்தான்.
"என்னவோ கேட்கிறாரே, பதில் சொல்லேண்டா" என்றாள் கமலா விசுவைப் பார்த்து.
"ஓ! பேச வருகிறதே! திடீரென்று ஊமையாகி விட்டாளாக்கும் உன் அக்கா என்று நினைத்தேன்!"
"ஊமையாவது, ஒண்ணாவது! கல்யாணம் மாமா! இன்னைக்குக் காலையிலே அக்கா மறுபடியும் சுத்தியைக் கையில் போட்டுக் கொண்டபோது கொடுத்த சாபங்களையும் வசவுகளையும் கேட்காமல் போயிட்டேளே! மிஷின்கன்லேருந்து குண்டுகள் பறக்கிற மாதிரி சடசடவென்று பொழிந்து தள்ளினா! அம்மாவே அசந்து போயிட்டாள்னா பார்த்துக் கொள்ளுங்களேன்!"
கல்யாணம், விசு பேசி முடிக்கும் வரை காத்திராமல், பதறி, பாய்ந்து, கமலாவின் அருகே சென்று அவள் கையைப் பிடித்துப் பார்த்து, "எங்கே காயம்? எங்கே? எங்கே?" என்று கேட்டான்.
"போதும் உங்கள் கரிசனம்" என்று கமலாகையை உதறினாள். "காயம் கையில் ஒன்றுமில்லை, நெஞ்சில்!"
"ஐயய்யோ! நெஞ்சில் எப்படி அடிபட்டது?"
"உங்களாலேதான். மனத்தில் இருப்பதை முன்னாலேயே சொல்லி யிருந்தால் இப்படி ஊர் சிரிக்கும்படி யாகியிருக்குமா?"
"ஊராரெல்லாம் எதற்குச் சிரிக்கிறார்கள்?"
"விசுவைக் கேளுங்கள்!"
"என்னடா பயலே அக்காவிடம் என்னடா உளறிக் கொட்டினாய்?"
"நான் ஒன்றும் உளரவில்லை; உண்மையைத்தான் சொன்னேன், மாமா! பள்ளிக் கூடப் பசங்கள் உங்களைத் தூரத்தில் பார்க்கிறபோதே, 'கமலாவின் கல்யாணம்' என்று கூறிச் சிரிக்கிறாங்க. அதைச் சொன்னேன். இவளுக்கு அது அவமானமாய் இருக்காம்!"
"இதிலே என்ன அவமானம்? பசங்கள் பேசறதிலேதான் என்ன தப்பு? நான் கமலாவின் கல்யாணம்தான்!"
"நீங்கள் முதலிலேயே உங்கள் மனத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு பேசியிருந்தால் இவ்வளவும் நடந்திருக்காதல்லவா? ஒன்றிலிருந்து ஒன்றாக எவ்வளவு தப்பபிப்பிராயங்கள், எவ்வளவு வேண்டாத நிகழ்ச்சிகள் எத்தனை ஏச்சுப்பேச்சுக்கள் கோபதாபங்கள்?"
"நீயும்தான் அவசரப்பட்டு அசட்டுக் காரியம் செய்தாய்! அந்தக் கிழவரைக் கல்யாணம் செய்து கொள்ள ஏன் சம்மதித்தாய்?"
"நீங்கள் அந்தப் பவானியின் மோக வலையிலே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தீர்கள். என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டீர்கள் என்று நினைத்தேன்."
"இதோ பார், கமலா! நீ என்ன வேணுமானாலும் சொல்லு. ஆனால் மிஸ் பவானியைப் பற்றி மட்டும் தப்பாக எதுவும் பேசாதே!"
"அடேயப்பா! பவானி என்கிற பெயரைச் சொல்வதற்குள்ளே இத்தனை கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே! நான் அப்படி என்ன தகாத வார்த்தை சொல்லிட்டேன்?"
"இன்னும் என்ன கூற வேண்டும்? மோகவலை வீசினாள், மயக்கு மொழி பேசினாள் என்றெல்லாம் ஊரிலே இருக்கிற காலிப் பசங்கள் தான் ஏதோ உளறுகிறார்கள் என்றால் அத்தகைய சொற்களை நீயும் பயன்படுத்தலாமா? என் மனத்தையே நான் சரியாகப் புரிந்து கொள்ளாதது என் தவறு. அதற்காகப் பவானியின் நடத்தைக்குக் களங்கம் கற்பிப்பது போல் எதுவும் சொல்லக் கூடாது! அது மகாபாவம்! அவளைப் போல் ஒண்டர்ஃபுல் லேடியை நான் பார்த்ததே இல்லை! என்ன படிப்பு. என்ன அறிவு! அவ்வளவு ஞானம் இருந்தும் எத்தனை அடக்கம்! எவ்வளவு இனிய சுபாவம்!"
"ஒரேயடியாக வர்ணிக்கிறீர்களே!"
"உண்மையைத்தான் கூறுகிறேன். உன்னைப் பற்றிப் பவானி எவ்வளவு உயர்வாகப் பேசுகிறாள் தெரியுமா? நீ இப்படிச் சொன்னாய் என்று தெரிந்தால் எவ்வளவு வருத்தப் படுவாள்!"
"அடடா! நான் அக்காவைப் பற்றி என்ன தகாத விஷயமாகக் கூறிவிட்டேன் என்று இப்படிப் பதறுகிறீர்கள்? உங்களைப் பற்றித்தானே நான் சொன்னேன்? நீங்கள் பவானியிடம் மோகம் கொண்டிருக்கலாம்; பவானி அக்கா வேறு ஒருவரிடம் மோகம் கொண்டிருக்கலாம்...."
வாக்கியத்தை முடிப்பதற்கு முன்பே, 'ஐயோ! தவறு செய்து விட்டோமே; பவானி அக்காவுக்குக் கொடுத்த வாக்கை மீறிவிட்டோமே!' என்று கமலாவுக்குத் தோன்றியது. அதே கணத்தில் சுளீரென்று அவள் கன்னத்தில் வலி தெரிந்தது!
வலியை உணர்ந்து கண்களில் கண்ணீரும் பீறிட்ட பிறகுதான் வலியின் காரணத்தை உணர்ந்தாள் கமலா. 'கல்யாணம் தன்னைக்கை நீட்டி அடித்திருக்கிறான்!' விண் விண் என்று இன்னமும் வேதனை தரும் அளவுக்குப் பலமாக விழுந்த அறை!
'தம்பி விசுவுக்கு எதிரே இப்படி அவமானப்படுத்துமளவுக்கு நாம் என்ன அப்படிப் பெரிய தவறு செய்துவிட்டோம்? உண்மை பேசியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' கமலா பிரமித்து நின்றாள்.
கல்யாணத்துக்கும் கஷ்டமாகப் போய்விட்டது. என்னதான் தனக்குப் பவானி மீது மதிப்பிருந்தாலும் கமலாவைக் கைநீட்டி அடிக்கத் தனக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்தான். "மன்னிச்சுடு, கமலா! உன்னை அடித்த இந்தக் கையை வெட்டிவிடலாம் என்று ஆத்திரமாக வருகிறது எனக்கு. இருந்தாலும் நீ மற்றவர்களைப் பற்றி, அதுவும் பவானியைப் பற்றி அவதூறாகப் பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை" என்றான்.
"நான் ஒன்றும் கற்பனை செய்து கதை அளக்கவில்லை; நிஜத்தைத்தான் கூறினேன். வேண்டுமானால் பவானியின் வீட்டுக்கே நேரில் போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்!" என்றாள் கமலா. பவானியிடம் கொடுத்த வாக்கைக் காப்பதைவிடக் காதலனிடம் தான் பொய் பேசாதவள் என்பதை நிரூபித்துக் கொள்வது அவசரமாகவும் முக்கியமாகவும் பட்டது அவளுக்கு.
"என்னத்தைப் பார்க்கிறது?" என்றான் கல்யாணம், ஆத்திரத்துடன்.
"பவானியின் காதலனை" என்றாள் கமலா ரோஷத்துடன்.
"சீச்சி! பைத்தியம் முற்றிப் பிதற்றுகிறாய்! நான் வருகிறேன். உன்னை மதித்து உன் வீட்டு வாசலை மிதித்ததே தவறு!" கல்யாணம் கோபத்துடன் திரும்பி வாசல் பக்கம் போனான். கமலா ஓடிப் போய் வழி மறித்து நின்று, அவன் கரங்களைப் பற்றிக் கொண்டாள். கண்களில் நீர் பெருகித் தாரை தாரையாகக் கன்னங்களில் வழிந்தோட, "நான் பெரிய தவறு செய்து விட்டேன்; கோபத்தில் ஏதோ பேசிவிட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பவானி அக்கா எனக்குத் தெய்வம் மாதிரி பல சந்தர்ப்பங்களில் உதவியிருக்கிறார்கள். அக்காவிடம் போய் எதையும் கேட்டு விடாதீர்கள்! உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்" என்றாள்.
"கண்டிப்பாக இதைப் பற்றிக் கேட்டு விட்டுத்தான் மறு காரியம் பார்க்கப் போகிறேன்! இப்போதே நேரே பவானி வீட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்!" என்றான் கல்யாணம்.
"ஐயோ! நான் அக்காவுக்குச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேனே; ஆத்திரத்தில் ஏதோ உளறி விட்டேன். அதை மறந்து விடுங்களேன்; பிளீஸ்!" என்றாள் கமலா.
"ஒரு நாளும் மறக்க முடியாது! எப்படி மறக்கும்? சாமானிய விஷயமா இது?"
"இதோ பாருங்கள், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு ரகசியம் இருக்கும். அதற்காக அவர்களைத் தவறாக எண்ணக் கூடாது. இப்போ என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். என் வாழ்க்கையிலும் கூட ஒரு ரகசியம் இருக்கத்தான் செய்கிறது."
கல்யாணம் தூக்கிவாரிப் போட்டதுபோல் அவளைத் திரும்பிக் கூர்மையாகப் பார்த்தான். "ஆ! என் அம்மா கூறியது நிஜம்தானா? 'வாயைக் கழுவிக் கொண்டு வா' என்று அவளிடம் சீறினேனே நான்; அது தான் தப்பா?"
"ஐயோ! நான் அதைச் சொல்லவில்லை. அது முழுப் பொய்!" என்று அலறினாள் கமலா. "ஊரிலே வேலையற்ற விடலைகள் நாலு பேர் கட்டிவிட்ட கதை. என்னைப் பார்த்தால் அவ்வளவு கேவலமானவளாகவா தோன்றுகிறது, உங்களுக்கு?" நெஞ்சு வெடித்துவிடும் போல் அவன் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள் கமலா.
கல்யாணத்தின் உள்ளத்தில் கருணை பொங்கியது. "இல்லை, கமலா! நான் அதை நம்பவேயில்லை. 'பணத்துக்கு ஆசைப்பட்டு ஊர் ஊராகப் போய்க் கிழவர்களாகப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்வதே உனக்குக் காரியம்' என்று கடவுளே என் எதிரில் வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்." அவன் குனிந்து அவள் தோள்களைப் பற்றி எழுப்பிக் கைக் குட்டையால் அவள் கண்ணீரைத் துடைத்தான். "கபடமில்லாத இந்தக் கண்கள், மாசு மறுவற்ற இந்த முகம், அவமானம் தாங்காமல் துவளும் இந்த உடல் எல்லாம் எனக்கு உண்மையை உணர்த்து கின்றன கமலா....ஆனால்......வேறு என்ன ரகசியம் இருக்கமுடியும் உன் வாழ்க்கையில்?"
"வந்து....வந்து...." விசும்பலுக்கிடையில் வார்த்தைகள் வெளிப்பட மறுத்தன.
"சொல்லு, கமலா!" அவன் ஆதரவாக அவள் முதுகைத் தடவினான்.
"நான் ....நான்....எனக்கு...."
கல்யாணத்துக்குச் சிரிப்பு வந்து விட்டது.
"நான்.... நீ...... எனக்கு.....உனக்கு! என்ன ரகசியம் பொதிந்து கிடக்கிறது இதற்குள்ளே?"
"அப்பாவும் அம்மாவும் என்... சொந்தப் பெற்றோர்கள் இல்லை.... அநாதையான என்னை எடுத்து வளர்த்தார்கள். எனக்கே இந்த விவரம் சமீபத்தில்தான் தெரியும்.
"ஓ! இவ்வளவுதானே!" என்றான் கல்யாணம். "இதை நானும் பவானியும் என் றைக்கோ ஊகித்துவிட்டோம். அவர்கள் உன்னை நடத்தும் விதத்திலிருந்து இதைத் தெரிந்து கொண்டு பல தடவை எங்களுக் குள் பேசிக் கொண்டிருக்கிறோம்."
"இதை அறிந்தால் நீங்கள் என்னை வெறுத்துவிடுவீர்களோ என்றுதான் பயந்தேன். 'யாருக்குப் பிறந்தவளோ, என்ன ஜாதியோ?' என்று அருவருப்படைவீர்களே என்று ஒரே கவலை."
"சேச்சே! அப்படியெல்லாம் எண்ணுகிறவனாயிருந்தால் சமூக சேவா சங்கம் என்று எதற்காக நடத்துகிறேன்? சீர்திருத்த நாடகம் ஏன் போடப் போகிறேன்? அசடே! அதையெல்லாம் நினைத்து நீ இனியும் கவலைப் பட்டுக் கொண்டிராதே! எங்கே, சிரி பார்க்கலாம்?" கல்யாணம் கமலாவின் முகவாயைப் பற்றினான். அவள் நாணிக் கோணித் தன் முகத்தை எங்கே புதைத்துக் கொள்வது என்று புரியாமல் 'களுக்' கென்று சிரித்தபடி அவன் நெஞ்சிலேயே சாய்ந்தாள்.
"ஆல் இஸ் வெல், தட் எண்ட்ஸ் வெல்!" என்று விசு தன் ஆங்கிலப் பாடம் ஒன்றின் கடைசி வரியைக் கூறிய போதுதான் அவன் அங்கிருப்பது அவர்கள் நினைவுக்கு வந்தது. திடுக்கிட்டு விலகிக் கொண்டார்கள்!

