அடிபட்ட புலி!

நிறைய இரத்தம் இழந்திருந்த போதிலும் கடுமையான ஜுரம் அடித்தபோதிலும் உமாகாந்த் இரண்டு மூன்று தினங்களில் குணமடைந்தான். டாக்டரின் மருந்தைவிடப் பவானியும் அவளிடம் மிகவும் பிரியமுள்ள மாமா குணசேகரனும் பார்த்துப் பார்த்துச் செய்த பணிவிடைகளினால்தான் பிழைத்தான் உமாகாந்த்.

முதன் முதலாக அவன் கண் இமைகள் படபடத்தபோது பவானி அருகில் இருந்தாள். அவளைக் கண்டதும் முகமலர்ச்சியுடன் எழுந்திருக்க முயன்றான். அந்த முயற்சியிலேயே அவன் மறுபடியும் பலவீனமடைந்து மூர்ச்சையானான். பவானி பதறினாள், விம்மினாள், துடித்தாள்.

மாமா குணசேகரன், "நீ இப்படித் தவிப்பதால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. எவ்வளவோ படித்த பெண்ணாகிய உனக்கு இது ஏன் புரியவில்லை?" என்று கடிந்துகொண்டார். "'நாட்டுப் பற்று என்ற நங்கையை மணந்து, மாமியார் வீடே கதி என்று இருக்கிறான் என் காதலன்' என்றாயே, இவன்தானா?" என்று கேட்படியே சிறிது தண்ணீரை உள்ளங்கையில் எடுத்து அவன் முகத்தில் தெளித்தார்.

உமாகாந்தனுக்குப் பிரக்ஞை வந்தது. பவானியைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.

பவானி அவன் மறுபடியும் மயக்கம்போட்டுவிடப் போகிறானோ என்ற கவலையுடன் சொர சொரவென்று முரட்டுத்தனமாக இருந்த அவன் கரத்தை எடுத்துத் தன் பளிங்குக் கன்னத்தில் ஒற்றிக் கொண்டாள். கண்ணீரால் அந்த விரல்களைக் குளிப்பாட்டினாள்.

"பவானி! உன்னிடம் ஓர் உண்மையைச் சொல்லிவிட்டுப் போவதற்காக வந்தேன்" என்றான் உமாகாந்தன், ஈன சுரத்தில்.

"நீங்கள் ஓர் உண்மையையும் கூற வேண்டாம். நாலு வருஷங்களுக்குப் பிறகு நீங்கள் என்னிடம் திரும்பி வந்து சேர்ந்துவிட்டீர்கள். எனக்கு இந்த உண்மை ஒன்றே போதும்!" என்றாள் பவானி.

அப்படியில்லை பவானி, என்னைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாயோ என்று எனக்கு ஒரே கவலை. இந்த நாலு ஆண்டுகளும் அதே சிந்தனை!"

"என்ன எண்ணினேன்? தேச பக்த தியாகி என்று பெருமைப்பட்டேன். படிப்பையும் பட்டத்தையும் தொடர்ந்து கிடைக்கக்கூடிய பெரிய உத்தியோகத்தையும் துரும்பாக மதித்து உதறிவிட்டுப் போன வீரர் என்று நினைத்து நினைத்துப் பூரித்தேன். என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லிக் கொள்ளாமல் என்னை விட்டுப் பிரிந்து போனது எனக்கு ஒரே கோபமாகவும் வருத்தமாகவும் இருந்தாலும் அதே சமயம் என்னிடம் சொல்லியிருந்தால் நான் உங்களைத் தடுத்திருக்க மாட்டேனா என்றும் எண்ணிப் பார்த்தேன். எனவே என்னிடம் சொல்லாமலே நீங்கள் சுதந்திர தேவிக்குப் பணிவிடை செய்ததும் நியாயமே என்ற முடிவுக்கு வந்தேன். கடமைக்காகக் காதலையும் துறந்த உங்கள் திட சித்தம் என் னைப் புளகாங்கிதம் அடையச் செய்தது. நீங்கள் விடுதலை பெற்றுத் திரும்பி வரும்தினத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டு பொறுமையோடும் ஆவலோடும் காத்திருந்தேன்."

பவானி பேசப் பேச உமாகாந்த் முகத்தில் ஏதோ புதிரை விடுவிக்க முடியாத பாவம் படர்ந்தது!

"பவானி! தேச பக்தத் தியாகியாக நான் சிறைசென்றதை யார் உனக்குச் சொன்னது?"

"வேறு யார்? உங்கள் தகப்பனார்தான்!" என்றாள் பவானி. "நீங்கள் கல்லூரிக்குச் சில நாட்கள் வராமலிருக்கவே என்னால தாங்கிக்கொள்ள முடியவில்லை. கூச்சத்தை விட்டு உங்கள் வீட்டில் என்னை யாராவது தப்பாக நினைத்துக் கொண்டாலும் பாதகமில்லை என்ற தீர்மானத்துடன் போய் விசாரித்தேன். உங்கள் தகப்பனார் அன்பொழுக என்னிடம் பேசினார். 'உன் கல்லூரி நண்பர்கள் எல்லாருமே பெருமைப்படக் கூடிய விஷயத்தைச் சொல்லப் போகிறேன்' என்று ஆரம்பித்து நீங்கள் கைதான விஷயத்தைச் சொன்னார். குடும்பத்தினரில் கூட யாருக்குமே தெரியாமல் நீங்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சில சதிச் செயல்களில் ஈடுபட்டிருந்தீர்களாமே! அண்டர்கிரவுண்ட் பேர்வழிகள் சிலருக்கு உதவினீர்களாமே! ஸி.ஐ.டி.கள் அதைத் தெரிந்து கொண்டு உங்களை அரெஸ்ட் செய்து ஓர் ஆங்கிலேய மாஜிஸ்டிரேட் முன் கொண்டுபோய் நிறுத்தினார்களாம். அவன் ஒரேயடியாக ஆறு ஆண்டுகள் தீட்டி விட்டான். 'அப்பீல்' செய்திருந்தால் தண்டனை குறைந்திருக்கும். ஆனால் நீங்கள் மேல் கோர்ட்டுக்குப் போவது தேச பக்தனுக்கு இழுக்கு என்று கூறிவிட்டீர்கள். எத்தனை வருஷங்களானாலும் தண்டனையை இன்முகத்துடன் ஏற்பேன் என்று அடித்துச் சொன்னீர்கள். இதையெல்லாம் விவரித்தபோது உங்கள் அப்பா கருணாகரன் கண் கலங்கி விட்டார்!"

புதிர் நீங்கிய பாவத்தில் புன்னகை மலர்ந்தது உமாகாந்தின் முகத்தில். நிம்மதி பெற்றவனாகக் கண்களை மூடிக் கொண்டான். அவன் நெற்றியை இலேசாக வருடினாள் பவானி. "எவ்வளவோ கேட்க வேண்டும்; எத்தனையோ பேச வேண்டும்" என்றான். "இப்போது என்ன அவசரம்? மெல்லப் பேசலாம்; ஓய்வாக இருங்கள்" என்று அவன் புருவங்கள் மீதாக ஒரு விரலால் கோடு இழுத்தாள். அவன் தூங்கிவிட்டதாக எண்ணி நெற்றியில் இதழ் பதித்தாள்.

"அவ்வளவுதானா? கன்னத்தில் ஒன்று?"

"அதற்கு இன்னும் சிறிது காலம் காத்திதிருக்க வேண்டும் நீங்கள்! முதலில் இந்த எட்டு நாள் தாடியை வழித்தெடுங்கள்! கிட்ட நெருங்க விடேன் என்கிறது" என்று கூறிச் சிரித்தாள் பவானி.

மாறாத புன்னகையுடன் கண்ணயர்ந்தான் உமாகாந்தன்.

'என்னதானிருந்தாலும் என்னிடம் மட்டுமாவது உங்கள் ரகசிய நடவடிக்கைகளை விவரித்திருக்கலாம்' என்று அவன் முகத்தைப் பார்த்தவாறே தனக்குத் தானே பேசிக் கொண்டாள் பவானி. 'எந்தச் சிறையில் இருக்கிறீர்கள் என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்று உங்களைப் பார்க்க வந்திருக்க மாட்டேனா? யாரும் உங்களைச் சிறையில் வந்து பார்க்கக் கூடாது என்று கூறி விட்டீர்களாம். அப்படி வந்தால் உங்கள் மன உறுதி தளர்ந்துவிடும் என்று அஞ்சினீர்களாம். எனவே உங்கள் அப்பா நீங்கள் சிறைப் பட்டிருக்கும் ஊரைக் கூற மறுத்துவிட்டார். உங்கள் கோரிக்கைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியவளானேன் நான். நீங்கள் அடைந்து கிடக்கும் சிறைச்சாலை எது என்று கண்டுபிடிக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஒரு கடிதமாவது நீங்கள் எனக்குப் போட்டிருக்கக் கூடாதா? அப்போது நீங்கள் இருக்குமிடம் எனக்குத் தெரிந்து போய்விடுமே என்றா?

'ஆனால் அப்படிப்பட்ட கடுமையான தவத்தை மேற்கொண்ட நீங்கள், பிறகு அத்தவத்தைக் காப்பாற்ற முடியாமல் தண்டனைக் காலம் முடியு முன்னரே சிறையிலிருந்து தப்பி ஓடி வருவானேன்? அது உங்கள் இயல்புக்கு ஒத்து வருவதாக இல்லையே? மகிழ்ச்சியுடன் சிறை வாசத்தை ஏற்கும் கர்ம வீரன் செய்யும் காரியமா இது? சிறையிலிருந்து தப்பி ஸி.ஐ.டி.களால் பின் துரத்தப்பட்டு, அலைந்து துப்பாக்கித் தோட்டா பாய அடிபட்டு, ஓடி ஒளிந்து சாவுடன் போராடுகிற நிலையில் என்னிடம் வந்து சேருவானேன்?

'உமாகாந்த்! உங்கள் சிறைவாசத்துக்குப் பின்னால் எனக்குத் தெரியாத விவரங்கள் ஏதேனும் இருக்கிறதா? அவை என்ன?... மெல்லத் தெரிந்து கொள்கிறேன்... அவசரமில்லை. இப்போது நீங்கள் ஆழ்ந்த நிம்மதியுடன் உறங்குங்கள். இழந்த தெம்பைப்பெறுங்கள். அதுதான் முக்கியம்.'

இத்தருணத்தில் கீழே வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. பவானி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். மாஜிஸ்டிரேட் கோவர்த்தனன் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்!

'இவர் எங்கே இப்போது வந்து சேர்ந்தார்? பூஜை வேளையில் கரடி நுழைந்த மாதிரி?' என்று நினைத்து கொண்ட பவானி அவசரம் அவசரமாகத் தன் அறைக் கதவைச் சாத்தித் தாளிட்டுவிட்டு மாடிப்படி இறங்கிச் சென்றாள். இயல்பான் முகத் தோற்றத்தைச் சிரமப்பட்டுத் தருவித்துக் கொண்டு அவரிடம் பேசினாள்.

"வாருங்கள்! என்ன, இரண்டு வாரங்கள் கழித்து வருவதாகச் சொல்லிவிட்டு அதற்குள் வந்து நிற்கிறீர்களே? என் முடிவைத் தெரிந்து கொள்ள இவ்வளவு அவசரப்பட்டால் எப்படி?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

"நான் அதற்காக வரவில்லை, பவானி! ஒரு முக்கிய செய்தியைச் சொல்லி உன்னை எச்சரித்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். அடிபட்ட புலி ஒன்று இந்த ஏலமலைச் சாரலில் உலவி வருகிறதாம். நீ அடிக்கடி அந்தப் பெண் கமலாவுடன் அங்கே யெல்லாம் போகிறாயல்லவா? அதை இனிமேல் நிறுத்திக் கொள்!" என்றார் கோவர்த்தனன்.

'அடிபட்ட புலி' என்றதுமே மாடியிலிருந்த உமாகாந்தனை நினைத்து உள்ளம் நடுங்கினாள் பவானி. இந்த மாஜிஸ்டிரேட் பொல்லாதவர். 'அடிபட்ட புலி' என்று உமாகாந்தனைத்தான் வர்ணிக்கிறார் என்று அவள் மனம் உணர்த்தியது.

(தொடரும்)