கமலாவின் கல்யாணம்
திருநீர்மலையிலிருந்து கிளம்பிய நாளாகக் கல்யாணத்தின் மனம் நிலை கொள்ளாமல் தவி்த்தது.சதா சர்வ காலமும் இரவும் பகலும், தூக்கத்திலும் விழிப்பிலும் ஒரு முகம் அவன் மனக்கண் எதிரே தோன்றி அவனை அலைக்கழித்தது. ஒரு வேலையும் செய்யாமல் ஒன்றிலும் ஈடுபடாமல் அந்த ஒரு முகத்தை அகக் கண்ணால் பார்த்துக்கொண்டிருப்பதே காரியமாகக் காலத்தை ஓட்டினான் அவன்.
அந்த ஒரு முகம் பவானியின் அறிவொளி வீசும் அழகிய முகமாக இருந்திருந்தால் அவன் அதிசயப்பட்டிருக்கமாட்டான். ஆனால் அந்த முகம் கமலாவின் முகமாக இருந்ததுதான் அவனை வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியது. அதிலும் வேதனையும் கோபமும் தாபமும் மிக அவனைப் பார்த்து, "சீ! நீயும் ஓர் ஆண்பிள்ளையா?" என்று கேட்டாளே அப்போது அவள் எப்படித் தோற்றமளித்தாளோ அதே பாவத்துடன் கூடிய வதனம்!
'கமலாவின் முகம் என்னை இப்படிப் பாடாய்ப் படுத்துகிறதென்றால் அதற்கு என்ன அர்த்தம்? என்னுடைய குற்ற உணர்ச்சியின் பிரதி பலிப்பா? அவளிடம் ஏற்பட்ட கருணையா அல்லது அதற்குப் பெயர்தான் காதலா?
'அப்படியானால் பவானியைத் தான் இத்தனை நாட்களாக விரும்புவதாக எண்ணிக் கொண்டிருந்தேனே? அது தவறா? வெறும் மோகம்தானா அது, காதல் என்பது வேறா? கல்யாணம் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்தான்.
இரண்டு தினங்களாக நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வந்தபோதெல்லாம் அவன் இதயத்தில் இதே போராட்டம்தான். மூன்றாவது தினம்--ஸம்மிங் அப் நடந்த அன்று காலை அவனால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கமலாவை அவள் வீட்டில் போய்ப் பார்த்து இரண்டு வார்த்தைகளாவது பேசாவிட்டால் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது.
ஆனால் கமலாவின் பெற்றோர் அவனிடம் முகம் கொடுத்துப் பேசாதது மட்டுமல்ல; 'எதற்கு வந்தாய்?' என்பது போல் கேட்டும் விட்டார் மாசிலாமணி. உள்ளே சமையலறையில் இருந்த கமலாவை அவனால் பார்க்கக் கூட முடியவில்லை.
ஏமாற்றமும் வெட்கமும் அவமானமும் பொங்க அவன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான். காரில் ஏறி அதனைக் கிளப்பினான். கை போன போக்கில் கார் திரும்பிச் சென்றது. வெகு நேரத்துக்குப் பிறகு அப்புறம்தான் அவனுக்கு ஏலமலை எஸ்டேடேடுக்குப் போகும் மலைப்பாதையில் கார் ஏறிக்கொண்டிருப்பது அறிவுக்கு எட்டியது.
கமலாவும் தானும் அடிக்கடி சந்தித்து உரையாடும் பாறையை பவானி ஒரு சமயம் அவனுக்குச் சுட்டிக் காட்டி யிருந்தாள். பவானியும் கமலாவும் தனித் தனியேயும் அங்கு வருவதுண்டாம்; சேர்ந்தும் வருவார்களாம்: தனித் தனியே வந்த பிறகு ஒருவர், மற்றவர் அங்கே ஏற்கனவே இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைவதுண்டாம். 'அந்தப் பெண்ணை அவ்வளவு தூரம் கவரும்படி இங்கே என்னதான் இருக்கிறது, பார்த்துவிடுவோமே' என்று தீர்மானித்துக் காரை விட்டு இறங்கினான் கல்யாணம். குடை விரித்தாற்போல் நிழல் பரப்பிய சரக்கொன்றை மரம். பாறையின் மேல் பரப்பு தண்ணென்று இருந்தது. காலைச் சூரியனின் ஒளியில் கொன்றைப் பூக்கள் சிறிய சிறிய பசும்பொன் மணிகளாக ஜொலித்தன. மரத்தின் அடியில் பாறை மேல் அமர்ந்தான் கல்யாணம்.
'புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானோதயம் ஏற்பட்டதாம். எனக்கு இந்தச் சரக் கொன்றை மரத்தடியில் தெளிவு பிறக்கக் கூடாதோ?'
எத்தனை நேரம் அப்படி அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தானோ? சூரியன் உச்சி் வானத்தை நெருங்கியபோது கிளைகளினூடே இருந்த இடைவெளியில் ஒரு கிரணம் இடம் மாறிப் புகுந்து நேராக அவன் முகத்தைத் தாக்கிக் கண்களைக் கூசவைத்தது. சட்டென்று நகர்ந்துகொண்ட அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்து ஐம்பது! ' அடடா இன்னும் பத்து நிமிஷங்களுக்குள் கோர்ட்டில் இருக்க வேண்டுமே.
இல்லாத போனால் நீதிமன்றத்தை அவமதித்ததாகி விடுமே' என்று எண்ணியவனாகப் பரபரப்புடன் எழுந்து ஆடையிலிருந்து தூசி, இலைச் சருகுகளைத் தட்டினான். கைக்குட்டை, கார் சாவி எதையாவது விட்டு விட்டுப் போய்விடப் போகிறோம் என்று சுற்று முற்றும் நோக்கிய சமயம் ஓர் எழுத்து பாறையோரமாகத் தென் பட்டது. 'பாறையின் மேற்குப் பக்கம் சட்டென்று யார் கண்ணிலும் படாதபடிக்கு யாரோ என்னமோ செதுக்கி யிருக்கிறார்கள்.அது என்னவாக இருக்கும்!"
கல்யாணம் இரண்டடி எடுத்து வைத்துப் பாறையின் மறைவான பக்கத்தை அடைந்தான். இப்போது எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன. இரண்டே வார்த்தைகள்தாம். கமலாவின் கல்யாணம்.
கல்யாணத்தின் மேனி சிலிர்த்தது. அவளைத் தான் விரும்புவதாகக் கொஞ்சம் கூடக் காட்டிக் கொள்ளாத போதிலும் பவானியிடம் தன் மனம் ஈடுபட்டிருப்பதை அவளிட மிருந்து மறைக்காத போதிலும் இப்படி அழுத்தம் திருத்தமாகப் பாறையில் செதுக்குவதென்றால் அவள் எவ்வளவு உறுதியோடு இருந்திருக்க வேண்டும்? எத்தனை ஆசைகள் எத்தனை எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டு அவள் நாள் கணக்கில் செயல்பட்டுக் கூரிய கல்லால் அந்தப் பாறையில் ஆழச் செதுக்கியிருக்க வேண்டும்! அழியாத் தன்மை எழுத்தில் மட்டுமா இருந்தது? அதன் அர்த்தத்திலும் அல்லவா தொனிக்கிறது! 'கமலாவின் கல்யாணம்.' 'வின்' என்ற விகுதியிலே எத்தனை உறுதி!
அத்தனை உறுதியோடு இருந்தவள் கிழவனை மணக்கச் சம்மதிப்பானேன்? தற்கொலை செய்து கொள்வது பாபம் என்பது மட்டுமல்ல அதனால் கல்யாணத்துக்குக் கெட்ட பெயர் வரும் என்ற காரணமாகத்தான் இருக்கும். 'கல்யாணத்தை நம்பி மோசம் போனாள்' உயிரை விட்டாள்' என்று ஊரார் கதை பேசாமலா இருப்பார்கள்?
கல்யாணத்தைக் கரம் பிடிக்கவும் முடியாது; தற்கொலையும் சாத்தியமில்லை என்று நிச்சயமாகி விட்டபிறகு அவள் தன் எதிர்காலப் பாதுகாப்புக்காக மட்டுமே திருமணம் புரிந்து கொள்ளச் சம்மதித்திருக்கிறாள். மனத்தால் கல்யாணத்தை வரித்த பின்னர் அவள் வேறு ஓர் இளைஞனுடன் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? அதைவிட ரங்கநாத முதலியாரை மணப்பதே மேலல்லவா?
இதையெல்லாம் உத்தேசித்தே 'கமலா மனப்பூர்வமாகச் சம்மதித்துத்தான் இந்தக் கல்யாணம் நடக்கிறது' என்று பவானியும் தன்னிடம் கூறியிருக்கிறாள். தனக்குத்தான் புரியாமல் போய்விட்டது.
திருமணத்தை நிறுத்தியபோது கமலாவின் நன்றிக்குப் பாத்திரமாவதற்குப் பதில் கோபத்துக்குத் தான் உள்ளானதற்குக் காரணம் தெளிவாயிற்று கல்யாணத்துக்கு. கடந்த இரண்டு மூன்று தினங்களாகத் தன்னைச் சதா சர்வ காலமும் வட்டமிட்டு வந்தமுகத்தின் பாவம் அர்த்தமாயிற்று.
ஒரு முடிவுக்கு வந்தவனாகத் திரும்பிக் காரில் ஏறினான் கல்யாணம். கார் வேகமாக நீதிமன்றத்தை நோக்கி விரைந்தது என்றாலும் காலதாமதமாகித்தான் விட்டது. அவன் நீதிபதி கோவர்த்தனன் தன்னைக் கண்டிப்பதைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்து தன் தகப்பனார் அருகே அமர்ந்தான்.

