பழிக்குப் பழி!

"ரங்கநாத முதலியாரா? என்னைத் தேடி வந்திருக்கிறாரா? இதோ வந்து விட்டேன்" என்றாள் பவானி.

மாடியில் அவள் தன் தனி அறையில் உள் பக்கம் கதவைத் தாளிட்டுக் கொண்டு உமாகாந்துடன் உரையாடிக் கொண்டிருந்தாள். ஏன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தாள் என்று கூடச் சொல்லலாம்! அவள் கட்டிலில் குப்புறப் படுத்திருக்க எதிரே தலையணை மீது உமாகாந்தின் படம் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்தது. ஒருசமயம் அவள் பவானியாக இருந்து கோபிப்பாள். உடனே உமாகாந்தாக மாறிச் சமாதானம் கூறுவாள். மீண்டும் பவானியாக மாறி வம்புக்கு இழுப்பாள். அல்லது அந்தரங்கங்களைப் பறிமாறிக் கொள்வாள்.

பவானியாகவும் உமாகாந்தாகவும் மாறிமாறி விளங்கிய நிலை மாறி ஒரே தருணத்தில் அவளே இருவராகவும் இருப்பாள். அப்புறம் நீ, நான் என்ற பேதமின்றி உமாகாந்தின் நினைவில் தன்னை அடியோடு கரைத்துக் கொண்டுவிடுவாள்.

இப்படி அவள் ஏதோ ஓர் இனம் புரியாத இன்ப உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோதுதான் அவள் மாமா குணசேகரன் கதவைத் தட்டி ரங்கநாதமுதலியார் வந்திருக்கும் விஷயத்தைக் கூறினார்.

பவானிக்கு உடனே அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று புரிந்துவிட்டது. ஏனெனில் அவர் அவள் வீடு தேடி வருவதற்கு முன்பாகவே திருநீர்மலையில் நடந்த கலாட்டா பற்றிய விவரங்கள் எல்லாம் அவளை நாடி வந்து விட்டன. அவளை மட்டுமா? ராமப்பட்டணம் ஊர் முழுவதுமே அதுபற்றித்தான் பேச்சு. எனவே, ரங்கநாத முதலியார் எதற்காக வந்திருக்கிறார் என்பது புரிந்தாலும் அவர் தன்னைத் தேடி வந்தது பவானிக்கு வியப்பாக இருந்தது. 'நியாயமாக அவர் தமது வக்கீல் ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனையல்லவா நாடிப் போயிருக்க வேண்டும்? கோபாலகிருஷ்ணனிடம் தான் கூறி எச்சரித்து அனுப்பியது என்னவாயிற்று? ஏன் அவரால் தமது மகனின் போக்கைத் தடுத்து நிறுத்த முடியவில்லை?' இந்தக் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக மனத்தில் எழ அவள் உமாகாந்தின் படத்தில் அப்போதைக்கு கடைசி முறையாகக் காதல் முத்திரை பதித்துவிட்டு அதனை மேஜையின் இழுப்பறையில் துணிமணிக்கு அடியில் மறைவாக வைத்தாள். கீழே இறங்கி வந்தாள்.

"வாருங்கள், வாருங்கள்!" என்று ரங்கநாத முதலியாரை வரவேற்று ஃபானை இயக்கி விட்டுவிட்டு அவர் எதிரே அமர்ந்தாள் பவானி. அவர் எப்படி ஆரம்பிப்பது, என்ன பேசுவது என்று தயங்குவார் என எதிர்பார்த்தவளாகத்தானே வழிவகுத்துத் தந்தாள். "ரங்கநாதன் ஸார்! திருநீர்மலையில் ஏதேதோ அனுசிதமான காரியங்கள் நடந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். வாஸ்தவம்தானா? என்னை உங்கள் மகள் போல் பாவித்துக் கொண்டு சொல்லுங்கள். பாரம் குறையும்" என்றாள்.

இதற்காகவே காத்திருந்தவர் போல் ரங்கநாத முதலியார் மடை திறந்தவெள்ளமாக அங்கு நடந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்த்தார். முறையீடுகளுக்கிடையில் கல்யாணத்தையும் அவன் தோழர்களையும் ஐந்தாறு முறை வைது வைத்தார். "அந்த விடலைகள் உங்களைக்கூடப் பின்னோடு வருமாறு அழைத்தார்களாமே? கேள்விப்பட்டேன். ஆனால் இது தகாத செயல் என்று கூறி அவர்களுடன் போக மறுத்து விட்டீர்களாம். அதற்காக உங்களைப் பாராட்டிவிட்டு அப்படியே எனக்காக நீங்கள் கேஸ் நடத்தி என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் வந்தேன்" என்று முடித்தார் ரங்கநாதன்.

"அது எப்படி சாத்தியம், மிஸ்டர் ரங்கநாதன்? நேற்று வரை ஹோம்ரூல் கோபால கிருஷ்ணன் தாமே உங்களுக்கு வக்கீல்! அவரையே கேஸ் நடத்தச் சொல்லலாமே? அவர் மகன்தான் இந்தக் கலாட்டாவில் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்றாலும் கோபாலகிருஷ்ணன் நேர்மையானவர். சொந்த விருப்பு வெறுப்புக்கள், பாசங்கள் தமது தொழிலைப் பாதிக்க விடமாட்டார்."

"அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று பவானியின் கருத்தை மறுத்தார் ரங்கநாதன். "அவரே இவர்களைக் கிளப்பி விட்டுவிட்டுப் பின்னணியில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறார். பஸ்ஸில் அவரும் கூடவே ஏறி வந்தாராம். ஆனால் திருநீர்மலையை நெருங்கியதும், 'நான் வந்தால் நன்றாயிராது. ரங்கநாதன் என் நெருங்கிய நண்பன். அதனால் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்ல். நீங்கள் போய்க் காரியத்தை முடியுங்கள்' என்றாராம்.

"அப்புறம் இவர் வேறு பஸ் பிடித்துப் போயிருக்கிறார். அதற்குள் இந்தக் கலாட்டா வெல்லாம் நடந்து முடிந்து விட்டது. கோபால கிருஷ்ணன், மாசிலாமணி குடும்பத்தை ராமப் பட்டணத்துக்குப் பத்திரமாகத் திருப்பி அழைத்துக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்."

"என்னால் இதை நம்பவே முடியவில்லை" என்றாள் பவானி. "கோபாலகிருஷ்ணனுக்கு இவர்கள் திட்டத்தைப் பற்றி நான்தான் கூறினேன். 'இந்த வாலிபர்களின் விபரீதப் போக்கைத் தடுத்து நிறுத்த உங்களால்தான் முடியும்' என்றேன். அவரும் அவர்களோடு கல்யாணத்துக்குக் கிளம்புவது போல் சென்று கண்காணித்துக் கொள்வதாக வாக்களித்தார்."

"அப்படிக் கூறி உங்களை ஏமாற்றினாரோ அல்லது வழியில் மனம் மாறி அந்த உதவாக்கரைகளுடன் சேர்ந்து கொண்டாரோ, எப்படியானாலும் அவர் கலாட்ட நடந்த சமயம் திருமண மண்டபத்துக்கு வரவேயில்லையே. ஏன்? என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றே தகம்பனாரும் மகனும் எத்தனை காலமாகத் திட்டம் போட்டிருந்தார்களோ, எனக்குப் பழிக்குப் பழி வாங்கியாக வேண்டும்" என்றார் ரங்கநாதன்.

பவானி சற்று நேரம் யோசித்துவிட்டு, "நீங்கள் கேஸ் போடுவதற்குப் பதிலாக கமலா வீட்டார் போட்டால் நன்றாயிருக்குமே" என்றாள்.

"எப்படியோ பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தாகி விட்டது" என்று தீர்மானமாகச் சொன்னார் ரங்கநாத முதலியார்.

(தொடரும்)