தப்பியோடத் திட்டம்

பவானி பற்றி அவதூறாகப் பேசியதாகக் கருதி அதற்காகத் தன்னைச் சுடுவதற்காகத் தான் துப்பாக்கி கொண்டு வருகிறார் கோவர்த்தனன் என்று முதலில் கல்யாணம் நினைத்தான். ஆனால் அவரோ, "கல்யாணம்! இன்புளூயன்ஸாவை ஒழித்துக் கட்டினால்தான் பவானிக்கு நல்லது. ஏன், உலக மக்கள் எல்லோருக்கும் நிம்மதி. அதனாலே நான் போய் மிஸ்டர் இன்புளூயன்ஸாவை விரட்டி விட்டு வருகிறேன், ஓகே?" என்று கூறியபடியே தம் காரில் ஏற ஷெட்டை நோக்கி நடந்தார். "அவன் தகராறு பண்ணினால் ஐ வில் ஷூட் ஹிம்!"

குடிபோதையில் இருக்கும் அவரிடம் போய்த்தான் பவானி வீட்டில் பார்த்ததைக் கூறியே இருக்க வேண்டாம் என்று கல்யாணத்துக்கு இப்போது தோன்றியது. 'என்ன விபரீதம் இதனால் நிகழப் போகிறதோ?' என்று பயந்தான். 'ஏதாவது தாறுமாறாக இவர் செய்யாதிருக்க வேண்டுமே' என்று எண்ணியபோது தானும் பின்னோடு செல்வது உசிதம் என்று கருதினான்.

ஷெட் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த அவர் பின்னோடு நடந்தபடியே, "இப்போது என்ன அவசரம்? காலையில் பார்த்துக்கொள்ளலாமே?" என்றான்.

"என்ன! நீதிக்குக் குறுக்கே நிற்கிறாயா? சட்டம் தன் கடமையை ஆற்ற விடாமல் முட்டுக்கட்டை போடுகிறாயா?" என்று முடிந்த மட்டில் குரலில் கம்பீரத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார் கோவர்த்தனன். "இதற்குத் தண்டனை என்ன தெரியுமா? ஐ வில் ஷூட் யூ!"

"அட பாவமே! எல்லாவற்றுக்கும் ஒரே தண்டனை தானா? எதற்கெடுத்தாலும் 'ஐ வில் ஷூட் யூ' தானா?" என்று முணு முணுத்துக் கொண்ட கல்யாணம், அவரைத் தனியே அனுப்ப அஞ்சியவனாக, "அப்படியானால் நானும் பின்னோடு வருகிறேன்; ஐ வில் ஹெல்ப் யூ" என்றான்.

காரோட்ட அவரை அனுமதிக்கக் கூடாது என்று முடிவு கட்டியவனாக, "நான் ஓட்டிக் கொண்டு வருகிறேன், நீங்கள் இப்படி உட்காருங்கள்" என்று அவர் காரின் பின் கதவைத் திறந்து பிடித்தான்.

"தாங்க் யூ மை ஃபிரண்ட்!" என்றார் கோவர்த்தனன். ஆனால் துப்பாக்கி மட்டும் கல்யாணத்தின் தலையைக் குறி பார்த்த படியே இருந்தது. "இன்னும் இரண்டே நிமிஷத்தில் நாம் பவானி வீட்டில் இருக்கணும். இல்லாதபோனால் ஐ வில் ஷூட் யூ" என்றார்!

கல்யாணம் கனத்த இதயத்துடன் கார் ஓட்டிச் சென்றான். பவானிக்கும் கமலாவுக்கும் தான் பெரிய துரோகம் இழைத்து விட்டதாக அவன் மனம் இடித்துக் காட்டியது. அதற்குப் பரிகாரமாகத் தான் என்ன செய்ய முடியும் என்று யோசித்தான். ஒரு வழியும் புலப்படவில்லை.

"சீக்கிரம்! சீக்கிரம்! வேகமாகப் போ!" என்று துப்பாக்கி முனையை அவன் தலையில் தட்டித் துரிதப்படுத்தினார் கோவர்த்தனன்.

பவானி வீட்டு வாசலில் கார் நின்ற சமயம் கோவர்த்தனனுக்கு முன்பாகக் கல்யாணம் பாய்ந்து ஓடினான் பவானியை எச்சரிக்க விரும்பி.

"தம்பி! இப்பத்தானே பவானியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டாய்! அரை மணி கூட ஆகவில்லையே! அதற்குள் திரும்பி வந்திருக்கிறாயே?" என்றார் மாமா குணசேகரன்.

"இந்தத் தடவை உன் பாச்சா ஒன்றும் என்னிடம் பலிக்காது. அப்போ கொஞ்சம் ஏமாந்துட்டேன். மறுபடியும் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டு மாடிப் படிகளில் பாய்ந்தேறப் பார்க்காதே!

எனக்கு கொஞ்சம் மல் யுத்தப் பயிற்சி உண்டு. முறுக்கிப் பிழிந்து கொடியிலே உலர்த்திடுவேன்" என்று கோபமாகக் கூறி வந்தவர், மாஜிஸ்திரேட் கோவர்த் தனன் துப்பாக்கி சகிதம் உள்ளே வருவதைப் பார்த்து மௌனமானார்.

"பவானி எங்கே?' என்றார் கோவர்த்தனன் தடித்த குரலில்.

"தூங்குகிறாள். நான் தான் சொன்னேனே உங்களிடம். அவளுக்கு ஜுரம் என்று. அவளைத் தொந்தரவு செய்வதற்கில்லை.

"வேணாம். அவள் ஓய்வாக இருக்கட்டும். ரெஸ்ட் இஸ் குட் ஃபார் ஹர். மிஸ்டர் இன்புளூயன்ஸா எங்கே? அவனை அழைத்துவா!"

"இன்புளூயன்ஸாவாவது? இலுப்பக்காவாவது? யாரை அழைத்து வருவது? என்ன உளறுகிறீர்?" என்றார் குணசேகரன். ஆனால் மாஜிஸ்திரேட் கூறியது அவருக்குப் புரியாமல் போகவில்லை. அவர் கரத்தில் இருந்த துப்பாக்கி அவரை மிரட்டியது. கோவர்த்தனனின் பதவி அவரை அச்சுறுத்தியது.

"மிஸ்டர் குணசேகரன்! என்னை ஏமாற்றப் பார்க்காதீர்!" என்ற மாஜிஸ்திரேட் ஒவ்வொரு அறையாக நோட்டம் விட ஆரம்பித்தார். கல்யாணம் குடி போதையில் அவர் ஏதாவது ஏடாகூடமாகச் செய்து விடப்போகிறாரே என்ற கவலையில் பின்னோடு சென்றான்.

மாடியில் பவானியும் அவள் காதலனும் தங்கியிருந்த அறை காலியாக இருப்பதைப் பார்த்ததும் கல்யாணத்துக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. ஆனால் மாஜிஸ்திரேட் பவானியின் அறையை அனுபவப்பட்ட பாணியில் ஆராயத் தொடங்கினார். டிரெஸ்ஸிங் டேபில் இழுப்பறைகளைத் திறந்து பார்த்தார். மேஜை டிராயர்களைக் குடைந்தார். படுக்கையைப் புரட்டிப் போட்டார். திரைச் சீலைகளுக்குப் பின்னால் கண்ணோட்டம் செலுத்தினார். அறையின் ஒரு மூலையிலிருந்த அழுக்குத் துணிக் கூடையைக் காலால் உதைத்துத் தள்ளி உருட்டினார். திறந்து கொண்ட அதனுள்ளிருந்து பவானியின் புடவை ஒன்றுடன் வெள்ளைக் கதர்த்துணியும் எட்டிப் பார்த்தது. "ஆகா!" என்று வியப்பொலி எழுப்பியவாறு கோவர்த்தனன் அந்த கதர்த் துணியை வெளியே உருவினார். அழுக்குப் படிந்த வெள்ளைக் கதர் ஜிப்பா, பைஜாமா வெளிப் பட்டது. ஜிப்பாவின் ஒரு பக்கத் தோளில் ரத்தக் கறை படர்ந்து படிந்திருந்தது!

"தே ஹாவ் எஸ்கேப்ட்! தே ஹாவ் எஸ் கேப்ட்" என்று திரும்பத் திரும்பக் கூச்சலிட்டபடியே கீழே ஃபோன் இருந்த அறையை நோக்கி விரைந்தார் கோவர்த்தனன்.

பவானியின் புத்திசாலித்தனத்தை தமக்குள் மெச்சிக் கொண்டார் அவள் மாமா. கல்யாணம் வந்துவிட்டுப் போன மறு கணமே அவள், "மாமா! இந்த மனுஷன் ஏற்கனவே என்னிடம் காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்தவர். போதாக் குறைக்கு இங்கே இப்போது அவமானப்பட்டுத் திரும்புகிறார். அதனால் குயுக்தியாக அவருக்கு ஏதாவது செய்யத் தோன்றும். ஒரு கல்யாணத்தை நிறுத்த பஸ் ஏற்பாடு செய்துகொண்டு போன வராயிற்றே! அதனால் இப்போது என்னை வம்பில் மாட்டி வைக்க அவர் நினைத்தால் வியப்பதற்கில்லை. நானும் உமாவும் நாளைக் காலைவரையில் காத்திருக்க முடியாது. இப்போதே உடனே புறப்பட வேண்டும்" என்று கூறிவிட்டு மளமளவென்று ஒரு ஸூட் கேஸில் அவசியமான பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டாள். வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டாள். குண சேகரனிடம் ஒரு 'செக்' எழுதித் தந்து மறுநாள் பாங்கிலிருந்து டிராஃப்ட் வாங்கி அனுப்புமாறு வெளியூர் வக்கீல் நண்பர் ஒருவரின் விலாசமும் கொடுத்தாள். உமாகாந் தனுக்காகக் குணசேகரனின் துணிமணிகள் சிலவற்றையே பெட்டிக்குள் திணித்தாள். உமாகாந்தனை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள். கல்யாணம் வந்து போன பத்தாவது நிமிஷம் அவள் ஓட்டிக் கொண்டு சென்ற கார் தோட்டத்தைக் கடந்து சுற்றுச் சுவர் வாசலைத் தாண்டிச் சாலையில் ஓடத் தொடங்கிற்று.

அவளது இந்த முன்யோசனையையும் செயல் திறனையும் ஒரு பக்கம் நினைத்துப் பெருமைப் பட்டாலும் கூடவே குணசேகரனைப் பலவித அச்சங்கள் பீடித்தன. 'கோவர்த்தனன் இப்போது என்ன செய்யப் போகிறான்? பவானி போலீஸாரிடம் பிடிபட்டால் நாம் என்ன பண்ணுவது? அகப்பட்டுக் கொள்ளாமல் மலேயாவுக்குக் கப்பலேறி விட்டாளென்றாலும் அவள் பெற்றோருக்கு நாம் என்ன பதில் சொல்வது?' என்றெல்லாம் பல கேள்விகள் அவர் மனத்தைக் குடைந்தெடுத்தன.

சுமார் ஐந்தாறு மணி நேரத்துக்குப் பிறகு 'பவானி போலீஸாரிடம் அகப்பட்டுக்கொள்வாளா, மாட்டாளா?' என்ற கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. பல பலவென்று விடிந்து, சுரிய கிரணங்கள் எங்கும் பரவி இருளை விரட்டி நம்பிக்கை ஒளி பரப்பும் வேளையில், பட்சிகள் எல்லாம் மற்றொரு தினத்தை வரவேற்றுக் கீதமிசைக்கும் தருணத்தில் 'பவானியும் உமாகாந்தனும் பிடிபட்டார்கள்' என்ற செய்தி வந்து சேர்ந்தது.

ரத்தக்கறை படிந்த துணியைப் பார்த்ததும் "தப்பிவிட்டார்கள், தப்பி விட்டார்கள்" என்று கூறிக் கொண்டே கீழே ஃபோன் இருந்த இடத்தை நோக்கிச் சென்ற மாஜிஸ்திரேட் கோவர்த்தனன், தமது பதவி அளித்த செல்வாக்கைப் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பிரயோகித்ததில் அவர் விரும்பிய நல்ல பலன் கிடைத்துவிட்டது. ராமப் பட்டணத்திலிருந்து செல்லும் பிரதான சாலைகள் ஒவ்வொன்றிலும் ஆங்காங்கே உள்ள ஊர்களில் போலீஸ் ஸ்டேஷன்களுக்குத் தகவல் கொடுத்து கார் நம்பரையும் கூறியதில், பாதைக்குக் குறுக்கே தடுப்பு ஏற்படுத்தி, பவானியையும் உமாகாந்தனையும் பிடித்து விட்டார்கள். போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் திரும்பவும் ராமப்பட்டணத்துக்கே வந்து கொண்டிருக்கிறார்கள்!

கோவர்த்தனன் உறக்கத்தால் கனத்த கண்ணிமைகளைச் சிரமப்பட்டுத் திறந்து குணசேகரனிடம் கூறினார்;

"மிஸ்டர்! என் வேலை முடிந்தது. நான் இதோ வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு முன் உங்களுக்கு ஒரு 'டிப்' கொடுத்துவிட்டுப் போகிறேன். பவானி இரண்டு வருஷங்கள் சிறை வாசம் அனுபவிக்காமல் இருக்க வேண்டுமானால் ஒரே ஒரு உபாயம்தான் இருக்கிறது.

அந்தப் பயல் - அதாவது மிஸ்டர் இன்ஃபுளூயன்ஸா - ஒரு தேசத் துரோகி, சிறையிலிருந்து தப்பி வந்தவன் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது என்றும் அவனை இதற்கு முன் தன் வாழ் நாளில் தான் பார்த்ததே இல்லை என்றும் பவானி எழுதித் தரவேண்டும். காயம் பட்டிருக்கும் ஒருவனுக்குக் கருணை காட்டும் எண்ணம் தவிர தனக்கு வேறு ஓர் உள் நோக்கமும் இல்லை என்று வாக்குமூலம் தரவேண்டும். அவன் தன்னைப் பலவந்தமாகக் கார் ஓட்டி வருமாறு பணித்தான். தப்பிக்க உதவவில்லையானால் கொன்று விடுவதாக மிரட்டினான் என்று எழுத வேண்டும். புரிந்ததா? இப்படி ஒரு 'ஸ்டேட்மெண்ட்' எழுதி மேன்மை தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியிடம் மன்னிப்புக் கோரினால் அவளை உடனே விடுவித்துவிட நான் ஏற்பாடு செய்கிறேன். அப்படி ஒரு வாக்குமூலம் எழுதி வாங்கும் பொறுப்பு உம்முடையது. இதைச் செய்யாமல் சட்டப்படி காரியம் நடக்கட்டும் என்று பேசாமல் இருந்தீரானால் உமது மருமகளை மறுபடியும் இரண்டோ மூணோ வருஷங்களுக்குப் பிறகுதான் கண்ணால் பார்க்க முடியும். புரிந்ததா? எவ்வளவு சீக்கிரம் அந்த வாக்குமூலத்தைப் பெற்று வருகிறீரோ, அவ்வளவுக்கு நல்லது!"

இவ்விதம் கூறிவிட்டு மாஜிஸ்திரேட் வாசலில் நின்ற தமது காரில் ஏறிச் சென்று விட்டார். வரும்போது தம்முடன் வந்த கல்யாணத்தை அவர் அடியோடு மறந்துதான் விட்டாரோ அல்லது வேண்டுமென்றே அலட்சியம் செய்தாரோ, உபசாரத்துக்குக்கூட அவன் தம்முடன் வருகிறானா என்று கேட்காமல் போய்விட்டார்.

அவர் போனதும் கல்யாணம் குணசேகரன் பக்கம் திரும்பி "ஸார்.....!" என்று ஆரம்பித்தான்.

"யூ ராஸ்கல்! நீ ஏண்டா இன்னும் இங்கே நிற்கிறாய்!" என்று எரிந்து விழுந்தார் அவர்.

கல்யாணம் பேசாமல் திரும்பி வருத்தத்தோடும் ரோஷத்தோடும் விடுவிடுவென்று நடந்து சாலைக்கு வந்து சேர்ந்தான். அங்கே அவன் விட்டுச் சென்ற டப்பாக் கார் பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. உலகின்மீதே தனக்கு ஏற்பட்ட வெறுப்பையெல்லாம் ஒன்று திரட்டி அதன் மீது காட்டுகிறாற்போல 'பானெட்' மீது ஒரு குத்து விட்டான். அதில் ஒரு சொட்டை விழுந்தது. வலித்த கையைத் தடவி விட்டுக் கொண்டவன் என்ன நினைத்தானோ, ஏறி அமர்ந்து, 'ஸ்டார்ட்' செய்தான். அது 'மக்கர்' பண்ணாமல் உடனே உறுமிக்கொண்டு புறப்பட்டது!

'நல்ல சகுனம்தான்' என்று எண்ணிக் கொண்டான் கல்யாணம்.