மலைப் பாதை

ராமப்பட்டணத்திலிருந்து ஏல மலையின் உச்சி இருபது மைல் தூரம் தான். மொத்தம் மூவாயிரத்து ஐந்நூறு அடி உயரம் தான். ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியாரின் ஹிமகிரி காப்பி எஸ்டேட் இன்னும் கிட்டத்திலேயே மூவாயிரத்து இருநூறு அடி உயரத்தில் அமைந்திருந்தது. அந்த எஸ்டேட்டை நோக்கிக் கல்யாணம் உற்சாகமாகக் காரோட்டிப் போய்க் கொண்டிருந்தான்.

சாலையின் இருபுறமும் காப்பிச் செடிகளில் வேணி தொடுத்தாற் போல் வெண்மை நிறத்தில் காப்பிப் பூக்கள் மலர்ந்திருந்தன. காலைச் சூரியனின் ஒளியில் வெள்ளித் தகடுகளாக ஸில்வர் ஓக் மரங்களின் இலைகள் தகதகத்து மலையமாருதத்தில் சலசலத்தன. அவை காப்பிச் செடிகளுக்கு நிழல் கொடுத்தன. ஆனால் குடை விரிந்தாற்போன்று சூரிய ஒளியை மறைத்து விடாமல் தேவையான அளவில் வடிகட்டிக் கொடுத்தன. இப்படி ஒரு தாயின் பரிவுடன் காப்பிச் செடிகளைக் கவனித்துக் கொள்ளும் பணியைக் காப்பித் தோட்டங்களின் இதர சில பகுதிகளில் ஆரஞ்சு, பேரி, கொய்யா போன்ற வேறு சில மரங்கள் செய்து பழங்களும் ஈந்து கொண்டிருந்தன. உயரமான மரங்களில் உருவாகியிருந்த தேன் கூடுகளின் மணமும் பல்வேறு மலர்களின் நறுமணங்களும் பட்சி ஜாலங்களின் இனிய கானங்களும் காற்றில் கலந்து வந்து மலை வாசஸ்தலம் உடலுக்குத் தந்த குளுகுளுப்புடன் மனத்துக்குக் கிளுகிளுப்பையும் ஊட்டின.

கல்யாணம் அடிக்கடி பார்த்துப் பழகிய காட்சிகள்தாம் இவை என்றாலும் ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் புதுப்புது குதூகல உணர்வுகளை அவன் அடைவது வழக்கம். இன்றோ இந்த எழிலையெல்லாம் தன்னுடன் சேர்ந்து பவானியும் அனுபவிக்கிறாள் என்ற எண்ணமானது அவனை எங்கோ சொர்க்க வானில் உயரே உயரே கொண்டு சென்றது! அந்த அளப்பரிய ஆனந்தத்தைக் காரின் பின் ஸீட்டில் பவானியின் மாமா குணசேகரன் உட்கார்ந்திருக்கிறார் என்ற நினைப்பு கூடக் குறைத்துவிடவில்லை.

குணசேகரன், "பவானி! இத்தனை வருஷமா நான் ராமப் பட்டணத்தில்தானே இருக்கேன். இவ்வளவு அழகான மலைகளும் நந்தவனங்களும் இங்கே இருப்பதை அறியாமலேயே காலத்தை ஓட்டியிருக்கிறேன்! கல்கத்தாவிலிருந்து நீ வந்து அழைத்துப் போய்க் காட்டுகிறாய்! நல்ல வேடிக்கை" என்றார்.

"ஆமாம், சென்னையிலேயே இருப்பவர்கள் மகாபலிபுரம் போயிருக்க மாட்டார்கள்; ஏன், லைட் ஹவுஸ்கூட ஏறியிருக்க மாட்டார்கள்" என்றான் கல்யாணம்.

"நான் அப்படியில்லை; எல்லா இடங்களையும் பார்க்க ஆசைப்படுவேன். சந்தர்ப்பம் கிடைக்கா விட்டால் ஏற்படுத்திக் கொள்ளவாவது செய்வேன்" என்றாள் பவானி.

இந்தப் பயணத்தைக்கூட மேற்கொள்ள அவள் தானாகவேதான் முயற்சி எடுத்துக் கொண்டாள். மாஜிஸ்திரேட் கோவர்த்தனன், 'ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணனுக்கு ஏலமலையில் எஸ்டேட் உண்டு. அங்கிருந்து சில குண்டர்களை அனுப்பி என்னைத் தாக்கப் போவதாகக் கல்யாணம் மிரட்டினான்' என்று சொன்னதிலிருந்து இங்கே மலை ஏறிப் பார்த்துவிட அவள் ஆவலா யிருந்தாள். அதோடு மாஜிஸ்திரேட்டின் குற்றச்சாட்டைச் சற்று ஆராய்ந்து பார்த்து வரும் எண்ணமும் ஏற்பட்டிருந்தது.

எனவே இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு சமயம் கல்யாணம் வழக்கம்போல் அவளுக்குத் தன் காரில் லிஃப்ட் தருவதாகக் கூறியபோது, அவள் இனியும் ஆவலை அடக்க முடியாதவளாக, "நான் உங்கள் காரில் இன்று முதல் ஏறப் போவதில்லை; உங்கள் மேல் எனக்குக் கோபம்" என்று பேச்சை ஆரம்பித்தாள்.

"அடடா! நான் என்ன தப்பு பண்ணி விட்டேன்?" என்றான் கல்யாணம்.

"உங்களுக்கு இங்கே ஏலமலையில் எஸ்டேட் இருப்பதாக என்னிடம் சொல்லவே இல்லையே?" என்றாள் பவானி.

"சொல்லிக் கொண்டிருப்பார்களா? அழைத்துப் போக வேண்டும். கோடை விடுமுறையில் ஒரு மாதம், இரண்டு மாதம் என்று எங்கள் குடும்பம் அங்கே போய்த் தங்குவதுண்டு. ஆனால் இந்தத் தடவை அப்பா அம்மாவை மட்டும் அனுப்பி விட்டு நான் இங்கேயே இருக்கத் தீர்மானித்துவிட்டேன்."

"ஏன்? நாடக ஒத்திகை, சமூக சேவை எல்லாம் தடைப்படுமே என்றா?"

"அப்படி யொன்றும் இல்லை. ராமப் பட்டணமே மலை வாசஸ்தலம் போல் குளிர்ந்து காணப்படுகிறது எனக்கு. நீங்கள் இங்கு குடியேறிய பிறகு!"

"அழகுதான், எனக்கு மலைச் சாரல்களையெல்லாம் பார்க்க ரொம்பப் பிடிக்கும். உங்கள் பெற்றோர் எப்போது புறப்படுகிறார்கள், சொல்லுங்கள். அவர்களுடன் நான் போகிறேன்; நீங்கள் வேணுமானால் இங்கேயே இருந்து சமூகப் பணிகளைச் சிரத்தையாகக் கவனித்துக்கொண்டிருங்கள்!"

"சரி, அப்படியே செய்வோம்! அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டியாகி விட்டது. இப்போது காரில் ஏறலாம் அல்லவா?" என்றான் கல்யாணம்.

பவானி சிரித்துக் கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள். "நானும் சீக்கிரத்தில் ஒரு கார் வாங்கப் போகிறேன்" என்றாள்.

"போச்சுடா! உங்களுக்கு அவ்வப்போது ஒரு லிஃப்ட் தருகிற திருப்தியாவது எனக்கு இருந்தது. அதற்கும் ஆபத்து வந்து விட்டதா?" என்றான் கல்யாணம்.

"நீங்கள் தாராள மனமுடையவராக இருப்பதால் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக் கொள்ளலாமா நான்? கடைசியில் நான் காரில் ஏறுவதே பெரிய தொந்தரவாக நீங்கள் எண்ணும் காலம் வந்துவிடும்."

"நீங்கள் புதுக் கார் வாங்கின மறு நாளே இந்தக் கார் ரிப்பேராகிவிடும் பாருங்கள். அப்புறம் நான் உங்களிடம் அடிக்கடி லிஃப்ட் கேட்பேன். அப்போது என்ன பண்ணுவீர்கள்? இது ஏதடா பெரிய தொந்தரவாப் போச்சு என்று நினைப்பீர்களா?"

பவானி கலகல வென்று சிரித்தாள். "உங்கள் தகப்பனார் இந்த வட்டாரத்திலேயே பெரிய வழக்கறிஞர் என்று பெயர் வாங்கியதில் அதிசயமில்லை. நீங்களே இந்தப் போடுபோடும்போது அவர் எதிர்த்தரப்பு வக்கில்களை என்ன பாடு படுத்துவார் என்று ஊகிக்க முடிகிறது."

"அப்பா, இப்போதெல்லாம் கேஸ்களை ரொம்பக் குறைத்துக் கொண்டுவிட்டார். எஸ்டேட் விவகாரம் எல்லாம் கூட என் தலையில் கட்டிவிட்டார். மாசத்தில் இரண்டு மூன்று தடவையாவது மலை ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. இங்கிருந்து ஒரு மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். அடுத்த முறை நான் போகும்போது நீங்களும் வரலாமே?"

"ஆகட்டும், மாமாவைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்" என்றாள் பவானி.

"அவரையும் அழைத்து வாருங்கள். அவருக்கும் ஒரு மாறுதல் வேண்டாமா?"

இந்த உரையாடலின் விளைவுதான் இந்த ஞாயிற்றுக்கிழமை நாடக ஒத்திகையை ஒத்திப் போட்டுவிட்டு அவர்கள் கிளம்பி யிருந்தார்கள். கல்யாணம் ஒரே குஷியான மனநிலையில் இருந்தான். ஆனால் அவன் காருக்கு அது பிடிக்கவில்லை. அவன் கவனம் முழுவதும் தன்னிடமே திருப்பப்பட வேண்டும்; பவானிக்கு அதில் பங்கு சேரக் கூடாது என்று கருதியது போல் அது 'மக்கர்' செய்து நின்று விட்டது. காரின் முன்புறமிருந்து குபுகுபு என்று ஆவி அடித்தது.

"பார்த்தீர்களா? இதற்குத்தான் நான் புதுக் கார் வாங்குகிறேன் என்றேன். பாதி தூரமாவது வந்திருப்போமா?"

"முக்கால் திட்டத்துக்கு மேலேயே வந்தாகிவிட்டது. இங்கேயே இருங்கள். ஐந்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன்" என்ற கல்யாணம் தொலைவில் தெரிந்த சில பண்ணை யாட்களின் குடிசைகளை நோக்கி நடந்தான் தண்ணீர் பெற்று வர.

பவானி காரைவிட்டு இறங்கினாள். காலாற நடந்தாள். அவள் கரத்தில் ஒரு பைனாகுலர் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு மரத்தின் நிழலில் சாலை ஓரமாக நின்று பைனாகுலர் வழியே சுற்று வட்டாரத்தை நோட்டம் விட்டாள்.

"ரொம்ப ஓரமாகப் போகாதே அம்மா! கிடுகிடு பள்ளம்!" என்று காரினுள்ளேயிருந்து மாமா குணசேகரன் குரல் கொடுத்தார்.

"ஜாக்கிரதையாக இருக்கிறேன், மாமா!" என்று கூறிய பவானி பைனாகுலர் வழியே தொலைவில் பட்சிகள், மிருகங்கள் ஏதும் தெரிகின்றனவா என்று பார்த்தாள்.

அவ்விதம் நோக்கியபோது அவள் திகைப்பும் வியப்பும் அளிப்பதான ஒரு காட்சியைக் கண்டாள்.

கீழே வெகு தூரத்தில் ஒரு மொட்டைப் பாறை மேல் பெண் ஒருத்தி நிற்பது தெரிந்தது. அவள் புடவைத் தலைப்பை நெஞ்சோடுகொணர்ந்து பின்னால் தொங்கவிடாமல் இடக் கரத்தால் ஒரு முனையை உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். மலைக்காற்றில் அந்தத் தலைப்பு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.

பவானி வைத்த கண் வாங்காமல் அவளைச் சற்று நேரம் பார்த்தாள். அவள் ஆத்மப் பிரதட்சணம் செய்வது போல் மெல்லத் திரும்பி நாலாபுறமும் பார்வையைச் செலுத்துவதைக் கண்டாள்.

ஏதோ கிட்டாத விடுதலைக்காக அவள் ஏங்குவது போலவும் அங்கே வந்து நின்று போலியான ஒரு சுதந்திரத்தைச் சற்று நேரம் அனுபவித்துவிட்டுத் திரும்ப எண்ணுவது போலும் பவானிக்குத் தோன்றியது. அப்படி சுதந்திரப் பறவையாயத் தன்னைச் சற்று நேரம் பாவித்துக் கொண்டு தாற்காலிக மன ஆறுதலையேனும் அடைய எண்ணும் அந்தப் பெண் யார்? பைனாகுலர் வழியாகப் பார்த்தாலும்கூட இத்தனை தூரத்திலிருந்து இன்னார் என்று இனம் கண்டு கொள்வது கஷ்டம். 'ஆயினும்.....அவள்........ஒரு வேளை கமலாவாக இருக்கலாமோ? என்று பவானிக்குத் தோன்றியது.

உடனேயே அப்படி இராது என்றும் நினைத்தாள். 'கமலா தன்னந் தனியாக இப்படிக் கிளம்பி வருவாளா?.....ஏன் வர முடியாது? பஸ் ஏறி மலைப் பாதையில் சற்றுத் தூரம் வந்த பிறகு இறங்கிக் கொண்டிருக்கலாம் இல்லையா? ஆனால் பார்க்கப் பழக அவள் அத்தனை கட்டுப்பெட்டியாக இருக்கிறாளே.....? இருந்தாலென்ன? அப்படிப் பட்டவர்கள்தான் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ளுகிற நெஞ்சழுத்தம் உள்ளவர்களாகவும் விளங்குவார்கள். யாரும் எதிர் பார்க்க முடியாத காரியங்களைத் திடும்மென்று செய்து வைப்பார்கள்....... சேச்சே, இது கமலாவாக இருக்க முடியாது.......ஆனால் இல்லை......ஏன், கீழே திரும்பவும் இறங்கிச் சென்றதும் அவளையே கேட்டுவிட்டால் போகிறது. அவளிடம் பேசி அவள் மனத்தை அறிந்து கொள்ள முயல வேண்டும்.'

பவானி பார்த்துக் கொண்டே இருக்கையில் அந்தப் பெண் நாலு பாறைகளை நாலு எட்டில் தாண்டி மலைப் பாதையை அடைந்தாள். பஸ் வரும் சத்தம் அவள் காதில் விழுந்திருக்க வேண்டும். ஒரு வளைவில் திரும்பி இப்போது கண்ணுக்குப் புலப்பட்ட பஸ்ஸை நிறுத்தி அவள் ஏறிக் கொண்டாள். சற்று நேரத்தில் பஸ் பவானியின் கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டது.