செல்வம் பேசுகிறது!

ரங்கநாத முதலியார் குறிப்பிட்டிருந்த தினத்தில் அவர் சொன்னது போலவே ராகு காலம் கழித்து மாசிலாமணி முதலியாரும் மனைவி காமாட்சியும் அவர் வீட்டுக்குப் போனார்கள். அந்தப் பெரிய வீட்டையும் அதிலிருந்த ஐசுவரியத்தையும் கண்டு பிரமித்தார்கள்.

விசாலமான தோட்டத்தில் குரோட்டன்ஸ், பூகன்விலா, மல்லி, ரோஜா, செம்பருத்தி, இருவாட்சி என்று பல ரகச் செடிகளில் பூக்கள் சிரித்தன. பின்புறம் வாழை, மா, பலா, என்று பல ரக பழ மரங்கள் காட்சியளித்தன. 'போர்ட்டிகோ' வுக்கு முன்னால் வட்டமான புல்தரை. அதற்கு நீர் தெளிப்பதுபோல் அதன் மையத்தில்ல் சுழன்றது 'ஃபவுண்டன்' நான்கைந்து தோட்டக்காரர்கள் சுருசுருப்பாக இயங்கிக் கொண் டிருந்தனர். தோட்டத்தைக் கடந்து படியேறியதும் வாசல் கதவருகே இருபுறமும் பிரும்மாண்டமான இரண்டு யானைத் தந்தங்கள். உள்ளே கூடத்தின் சுவரில் புலி, மான் தலைகளும் சில புகைப்படங்களும் காணப்பட்டன. தரையில் கரடித் தோல் விரிப்பாகி யிருந்தது. அதன் பக்கத்தில் தந்தம் இழைத்த வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய கனமான டிபன் மேஜை. அதன் மூன்று புறங்களிலும் அமர்ந்தால் ஆள் இருக்கிற இடம் தெரியாமல் அமுங்கிவிடுகிற மாதிரியான உயர் ரக சோபாக்கள். நிலைவாசல்களில் தொங்கிய மணித் திரைகள், கூரையிலிருந்து தொங்கிய லஸ்தர் விளக்குகள்.

தங்கள் கால் பட்டுத் தரை அழுக்காகி விடுமோ என்று அஞ்சியவர்களாக வராந்தாவில் நின்றார்கள் மாசிலாமணியும் காமாட்சியும்.

"ஸார்!" என்று குரல் கொடுத்தார், மாசிலாமணி.

"யாரு?" என்று கேட்டுக் கொண்டே வந்தார் கணக்குப்பிள்ளை.

"ரங்கநாத முதலியார் இருக்கிறாரா? எங்களை இன்று இந்த நேரத்துக்கு வரச்சொன்னார்."

அவர்களை மேலும் கீழுமாகப் பார்த்த கணக்குப்பிள்ளை, "மாசிலாமணி என்று ஒருவர் வருவார்ன்னு ஐயா சொன்னார். நீர்தானா அது?" என்று கேட்டார்.

"ஆமாம்."

"நிஜமாகத்தானா? நீர்தான் மாசிலாமணியா?"

"'இவ்வளவு சாமானிய மனிதராய் இருக்கிறாரே, இவரையா வரச் சொல்லி யிருப்பார்?' என்று யோசிக்கிறீங்களா?"

"அதில்லை" என்று கணக்குப்பிள்ளை கூறிய தோரணையே, 'அதுதான்' என்று உணர்த்தியது. பிறகு அவர், "வாங்க" என்று அழைத்துச் சோபாவில் அமரச் செய்தார். அவர்கள் அதன் முனையில் பட்டும் படாமலும் தயக்கத்துடன் அமர்வதைப் பார்த்து, "சௌகரியமாக உட்காருங்க, ஐயா இப்பத்தான் தூங்கி எழுந்தாங்க, இப்ப வருவாங்க. நான் போய்ச் சொல்கிறேன்" என்றார். அப்புறம் திடுமென ஞாபகம் வந்தவர் போல, "அது சரி, நீங்கதான் ஐயாவோட புஷ்பவனம் தெரு வீட்டிலே குடியிருக்கிறதா?" என்று வினவினார்.

"ஆமாம், எதற்காகக் கேட்கிறீர்கள்?"

"இரண்டு மாதங்களாக வாடகை வரவில்லை; முன்பணமும் ஏதும் தரவில்லை..." என்று கணக்குப்பிள்ளை கூறி வரும்போதே மாசிலாமணிக்கு ஜுரம் கண்டது போலாயிற்று. அவர் எழுந்து கொண்டார்.

"ஏன் எழுந்துட்டீங்க?" என்று அதட்டலாகக் கேட்டார் கணக்குப்பிள்ளை. அந்தத் தொனியே மாசிலாமணியை மீண்டும் உட்கார வைத்து விட்டது.

"ஐயாவிடம் ஞாபகப் படுத்திவிட்டுப்போய் வாடகை வசூல் பண்ணிக் கொண்டு வருகிறேன் " என்று கிளம்பினால், ஒவ்வொரு தடவையும், 'அங்கே நீ போக வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன்; மற்ற வேலைகளைக் கவனி" என்பார்.

இவராவது வசூல் செய்வாரா என்றால் அதுவும் கிடையாது. வெறும் கையோடு திரும்பி, 'மறந்துட்டேன்' என்பார்.அவருக்கு எங்கே ஞாபகம் இருக்கும் இதெல்லாம்? நான்தான் நினைவு வைத்துக் கொண்டு பிராணனை விடனும்."

"வாடகைப் பணம் ...?" என்று இழுத்துப் பறித்துக் கொண்டு ஆரம்பித்தார் மாசிலாமணி.

"அதை அவரிடமே கொடுங்கள். இல்லாத போனால் இந்த விஷயத்தைத்தான் நானே கவனிச்சுக்கிறேன்னு சொன்னேனே. நீ ஏன் கை நீட்டினே'ன்னு எங்கிட்ட‌ பின்னால் பாய்வார். நான் போய் ஐயாவிடம் நீங்கள் வந்தாச்சுன்னு சொல்லிவிட்டு வரேன்."

கணக்குப் பிள்ளை அப்பால் சென்றதும், மாசிலாமணி மனைவியைப் பார்த்து, "இப்படியே நழுவிடுவோமே! திரும்பத் திரும்ப வாட‌கை வாடகைன்னு நினைவு ப‌டுத்திக் கொல்கிறானே!" என்றார்.

"அழ‌குதான்" என்றாள் காமாட்சி. க‌ண‌க்குப் பிள்ளைக்கு என்ன‌ தெரியும்? அவ‌ருக்குக் க‌ண‌க்குத்தான் முக்கியம். ம‌னித‌ர்களா பிர‌தான‌ம்? அவ‌ர் அப்ப‌டித்தான் பேசுவார்: அவ‌ருக்கு அதுதான் நியாய‌ம். நாம் அவ‌ரையா பார்க்க‌ வ‌ந்தோம்? ர‌ங்க‌நாத‌ முத‌லியார் ரொம்ப‌ ந‌ல்ல‌ மாதிரி. நீங்க‌ வேணுமானால் பாருங்க‌ள். அவ‌ர் ந‌ம்மிட‌ம் வாட‌கையைப் ப‌ற்றி வாய் திற‌க்க‌மாட்டார். அப்ப‌டியே பேசினாலும் ச‌மாதான‌ம் சொல்லிச் ச‌மாளிக்க‌ளாம்" என்று தைரிய‌ம் கொடுத்தாள்.

இத்த‌ருண‌த்தில் க‌ண்ணாடி ம‌ணித்திரைக‌ள் அக‌ன்று, க‌ல‌க‌ல‌வென்று ச‌ப்த‌ப்ப‌டுத்த‌, "வாங்க‌, வாங்க‌!" என்று வ‌ர‌வேற்ற‌ப‌டியே கூட‌த்துக்குள் நுழைந்தார் ர‌ங்க‌நாத‌ முத‌லியார். ம‌ரியாதைக்காக‌ எழுந்த‌வ‌ர்க‌ளைப் பார்த்து, "உட்காருங்க, உட்காருங்க! நமக்குள்ளே என்ன உப‌சாரம்? அட, உட்காருங்கோ சொல்றேன்!" என்று வற்புறுத்தி அவ‌ர்களை அமரச் செய்துவிட்டுப் பிறகுதான் தாம் உட்கார்ந்தார்.

"க‌ண‌க்குப் பிள்ளை! க‌ண‌க்குப் பிள்ளை" என்று அவ‌ர் அழைத்த‌தும் "இதோ, வ‌ரேன்!" என்று குர‌ல் கொடுத்த‌ப‌டியே ஓட்ட‌மும் ந‌டையுமாக‌ வ‌ந்து துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு நின்றார் அவ‌ர்.

"எங்கேய்யா, ப‌ல‌கார‌ம்? இவ‌ர்க‌ளைச் சும்மா உட்கார‌ வைச்சிருக்கியே?"

"இதோ வ‌ந்துகிட்டே இருக்கே. ஐயாவுக்கும் சேர்த்துக் கொண்டு வ‌ரச் சொன்னேன்." என்றார் க‌ண‌க்குப்பிள்ளை. அதே ச‌ம‌ய‌த்தில் த‌வ‌சிப் பிள்ளைக‌ள் இருவ‌ர் பெரிய‌ வெள்ளித் த‌ட்டுக்கள், வெள்ளி டம்ளர்களைத் தூக்கிக்கொண்டு வந்தனர். அடுத்தாற்போல் புட்டு, ஜாங்கிரி, தேங்காய்ப் பாலில் மிதக்கும் ஆப்பம், இட்டிலி, பொங்கல், மிக்ஸ்சர் இவற்றுகுத் தொட்டுக் கொள்ளக் கொச்சு, சாம்பார், சட்னி, மிளகாய்ப் பொடி - முதலிய எல்லாவற்றையும் வெள்ளிப் பாத்திரங்களிலேயே எடுத்து வந்து பரிமாறினர். காப்பியும் வெள்ளி டபரா டம்ளர்களிலேயே வந்தது. கடைசியில் தோல் சீவி நறுக்கிய மாம்பழம். ஆப்பிள் ஆகியன கொண்டு வந்து வைத்தனர்.கணக்குப் பிள்ளை பலமாக உபசாரம் செய்தார்.ஆனால் மாசிலாமணி தம்பதியரைப் பொறுத்தவரை அதற்கு அவசியமே இருக்கவில்லை.

"இதென்ன பெரிய விருந்துக்கே ஏற்பாடு செய்து விட்டீங்க!" என்றார் மாசிலாமணி ஏப்பத்தை அடக்க முயன்று தோல்வியுற்றவராக.

" இது என்ன‌ங்க, பிர‌மாத‌ம்? 'ப‌ல‌கார‌ம் சாப்பிட‌ வாங்க'ன்னு உங்க‌ளைக் கூப்பிட்டேன். பல-ஆகாரம் இருக்க வேணுமா இல்லையா? இந்த ஆப்பம் பாருங்கோ, இதை வெள்ளித் தட்டிலே போட்டுத் தேங்காய்ப் பால் விட்டுச் சாப்பிடலாம். ஆனால் மண் பாண்டத்திலேதான் செய்யணும்.வேறு எந்தப் பாத்திரத்தில் வார்த்தாலும் சுகப் படாது. இதற்காக நான் தனியே அளவான பாத்திரம் தயார் பண்ணச் சொல்றது. நம் வீட்டுத் தயிரும் அப்படித்தான். கட்டித் தயிராக இருந்தால் போதாது, அது சட்டித் தயிராகவும் இருக்கணும்.அதிலே ஓர் அலாதி ருசி.இந்த எண்ணெய் என்ன மணமா இருக்கு பாருங்கோ. கடையிலே வங்கினா கிடைக்குமா? நம்ம நிலத்திலே எள் பயிராகிறதில்லையா? கணக்குப் பிள்ளை போய்க் கிட்டத்திலிருந்து ஆட்டி எடுத்து வந்து விடுவார்..." என்று கூறிக் கொண்டே போனார் ரங்கநாத முதலியார்.

காப்பி ஆற்றிக் கொண்டிருந்த மாசிலாமணியின் கரம் இலேசாக நடுங்கத் தொடங்கியது. செல்வச் செழிப்பு என்று அவர் கேள்விப்பட்டு இருக்கிறார். ஆனால் இன்றுதான் நேரில் பார்க்கிறார். அடேயப்பா, என்ன பேச்சு பேசுகிறது அது! என்ன பாடுபடுத்துகிறது!

ஒருவாறு உணவ‌ருந்தி முடிந்ததும், "வாங்களேன், வீட்டைச் சுற்றிப் பார்க்கலாம்" என்றார் ரங்கநாதன்.