நீதிமன்றம்

கோர்ட்டு வாசலில் பவானியின் பளபளவென்று பாலிஷ் ஏறிய கார் வந்து நின்றது. வக்கீல் உடையிலேயே பவானி இறங்கினாள். அங்கு மிங்குமாக நின்று பேசிக் கொண்டிருந்த கட்சிக்காரர்களும் கோர்ட் சேவகர்களும் விடுவிடுவென்று காரை நோக்கி வந்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுள் ரங்கநாத முதலியாரின் கணக்குப் பிள்ளையும் ஒருவர். கைப்பெட்டியை ஒருவர், தஸ்தாவேஜுக் கட்டுகளை ஒருவர், சட்டப் புத்தகங்களை ஒருவர் என்று போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டார்கள். பவானி நடக்கத் தொடங்கியபோது கூட்டம் விலகி வழி விட்டது. ஓர் அரசி ராஜ பரிவாரங்களுடன் செல்வது போல் பவானி கம்பீரமாக நடக்க, மற்றவர்கள் அவளைப் பின் தொடர்ந்தனர்.

"பார்த்தீராங்காணும், அம்மாவுக்கு நடக்கிற உபசாரத்தை?" என்று தாழ்வாரத்தில் நின்ற வக்கீல்களுள் ஒருவர் கூறினார்.

"பிறந்தால் பெண்ணாய்ப் பிறக்க வேண்டும்" என்றார் இன்னொருவர்.

"பெண்ணாய்ப் பிறந்தால் மட்டும் போதுமா? எல்லாப் பெண்களுக்கும் இப்படி குவீன் விக்டோரியா மாதிரி ராஜமரியாதை நடக்கிறதா? பிறந்தால் பவானி என்கிற பெண்ணாய்ப் பிறக்கணும் என்று சொல்லும்" என்றார் மூன்றாமவர்.

"கட்சிக்காரர்கள் எத்தனை பேர் மிட்டாய்க் கடையில் ஈ மொய்ப்பதுபோல் அவளைச் சுற்றி வருகிறார்கள் பார்த்தீரா? வாதி, பிரதிவாதி இரண்டு பேருமே பவானியிடம் கேஸைக் கொடுத்து விடுவார்கள் போலிருக்கு. வயிற்றெரிச்சல்!"

இதற்குள் படியேறித் தாழ்வாரத்தை அடைந்துவிட்ட பவானி, அங்கு நின்று கொண்டிருந்த வக்கீல்களைப் பார்த்து, "குட் மார்னிங்! எல்லாரும் ஏன் வராந்தாவில் நிற்கிறீர்கள்?" என்றாள்.

"நீங்கள் விஜயம் பண்ணுகிற வைபவத்தைப் பார்க்கத்தான் நிற்கிறோம்" என்றார் ஒருவர்.

"தாங்கள் மட்டும்தானா? மாஜிஸ்திரேட் கூடத்தான் வந்து சேம்பர்ஸில் காத்துக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு முதல் கேஸ் தங்களுடையதுதான். தெரியுமல்லவா?" என்று கேட்டார் மற்றொருவர்.

"வெரி ஸாரி, ஆனால் என்னால் ஒன்றும் தாமதமாகாது. இன்னும் ஐந்தே நிமிஷங்களில் நான் கோர்ட்டில் ஆஜராகி விடுவேன்" என்ற பவானி விரைவாகத் தன் அறையை நோக்கி நடந்தாள்.

அவள் அப்பால் சென்றதும், "இன்றைக்கு என்ன கல்யாணசுந்தரத்தைக் காணோம்?" என்ற சந்தேகத்தைக் கிளப்பினார் ஒரு வம்பு விரும்பி. "வழக்கமாய்ப் பவானி வரும்போது அவளை 'ரிஸீவ்' பண்ணத் தயாராக முன்னால் வந்து நின்று கொண்டிருப்பானே?"

"மதராஸிலிருந்து 'எவாகுவீ' குடும்பம் ஒன்று வந்திருக்கிறதல்லவா? அவர்கள் வீட்டுக்குக் காய்கறி, உப்பு-புளி வாங்கிக் கொடுக்க மார்க்கெட்டுக்குப் போயிருப்பான்" என்று ஏளனமாய்க் கூறிச் சிரித்தார் இன்னொருவர்.

"நீர் என்னங்காணும் பழங் கதை பேசிக் கொண்டிருக்கிறீர்? அவர்களுக்கும் கல்யாணத்துக்கும்தான் ஒத்துக் கொள்ளாமல் போய் விட்டதே! அவர்கள் இவன் பேரில் கேஸ் போட்டிருக்கிறார்களே. பவானிதானே அந்தக் குடும்பத்தின் சார்பில் ஆஜராகிறாள். உமக்கு ஒன்றுமே தெரியாதா?"

"ஓ, ஆமாம், ஆமாம். நான் கொஞ்ச நாட்களாய் ஊரில் இல்லை. மறந்து போச்சு." "என்ன மறந்து போச்சு? வழக்கு விஷயமாகக் கேள்விப்பட்டதா? அல்லது நீர் ஊரில் இல்லை என்பதா?"

"இரண்டுமேதான்!"

"ஆமாம், ஆமாம். பவானியைப் பார்த்தால் சிலருக்கு எல்லாமே மறந்து விடுகிறது. இது பூலோகமா சொர்க்கமா என்பது கூட மறந்து விடுகிறது. நாலு நாட்கள் சிரமப்பட்டுத் தயாரித்துக் கொண்டு வந்திருந்த முக்கியமான சட்டப் பாயிண்டுகளை யெல்லாம் மறந்து விட்டுத் தடுமாறத் தொடங்குகிறார்கள்!"

"ஓய், நீர் என்ன பொதுப்படையாகப் பேசுகிறீரா? உம்ம அனுபவத்தைச் சொல்கிறீரா?" என்ற கேள்வி பிறக்கக் குபீரென்ற சிரிப்பொலி கோர்ட் கட்டிடத்தைக் கிடு கிடுக்கச் செய்தது.

"உஷ்! கோர்ட் கூடுகிற நேரம்!" என்று எச்சரித்தார் ஒருவர்.

"அது சரி, ரங்கநாத முதலியார் அல்லவா கோபாலகிருஷ்ணன் மீதும் அவர் மகன் மீதும் கேஸ் போட்டிருப்பதாகச் சொன்னார்கள்?" என்று மீண்டும் ஆரம்பித்தார் மறதிப் பேர்வழி.

"நாசமாய்ப் போச்சு! திருநீர்மலையில் கல்யாணம் நின்றுபோனதில் ஆரம்பித்து இவருக்கு மறுபடியும் எல்லாவற்றையும் ஆதியோடு அந்தமாக விளக்க வேண்டும் போலிருக்கிறதே!"

"வேண்டாம் ஐயா! எதற்கு வீண் சிரமம்? அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் அவர் மறுபடியும் எல்லாவற்றையும் மறந்துவிடப் போகிறார். இதற்கு விவரிப்பானேன்?"

"அகதிகள் நிவாரணத்துக்கு நாடகம் நடத்தறேன் என்று ஊரிலே இருக்கிறவன் தலையிலெல்லாம் டிக்கெட்டை வலுக் கட்டாயமாகக் கட்டறது. அப்புறம் நாடகத் தேதியன்று கல்யாணத்தை நிறுத்தத் திருநீர்மலைக்குப் போய்விடுகிறது. இது என்ன நியாயங்கறேன்?"

"அதையும் ஒரு பாயிண்ட்டாகப் பவானி சேர்த்துக் கொண்டிருக்கிறாள், சுவாமி! மோசடிக் குற்றச்சாட்டு, கல்யாணத்தை நிறுத்துவதற்காக அந்த வாலிபக் கும்பல்மேல் தாம் கேஸ் போட்டால் நன்றாயிராது என்பதால் கமலாவின் குடும்பத்தைப் போடச் சொல்லியிருக்கிறார் ரங்கநாதன். ஆனால் பவானிக்கு ஃபீஸ் அவர்தான் தருகிறார். எவ்வளவு தெரியுமா?"

"எவ்வளவு?"

"ஐந்து இலக்கம்!"

"என்ன, என்ன? எனக்கு மூர்ச்சை போட்டு விழணும் போலிருக்கு!"

"எங்களுக்காகப் பார்க்க வேண்டாம். கோர்ட் தாழ்வாரமாச்சேன்னு யோசிக்க வேண்டாம். மூர்ச்சை போட்டு விழுணும்னா தாராளமாய் நீர் விழலாம்! கோலி சோடாவுக்கு நான் கோர்ட் பியூனிடம் காசு தருகிறேன்!"

இந்தச் சமயத்தில் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் கேஸ் கட்டுகளுடன் வியர்க்க விருவிருக்க வந்தார். அங்கே நின்றவர்களைப் பார்த்து, "கல்யாணம் வந்து விட்டானா?" என்றார்.

"இல்லையே?"

"அவனுக்காகக் காத்திருந்ததில் எனக்கும் 'டிலே' ஆகிவிட்டது" என்று சொல்லிவிட்டு வேகமாய் மேலே நடந்தார் கோபாலகிருஷ்ணன்.