பயணம் முடிந்தது!

"இந்த ஆபத்தான பயணத்தை என்னுடன் சேர்ந்து நீயும் மேற்கொண்டிருக்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, பவானி! ஏதோ கனவு போலிருக்கிறது" என்றான் உமாகாந்தன்.

காரை வெகு வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த பவானி, "கனவாகவே முடிந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கல்யாணம் ரொம்பக் கோபமாகத் திரும்பிப் போயிருக்கிறார். என்ன செய்வாரோ தெரியாது. கோடிக்கரையை நாம் அடைந்து உங்கள் திட்டப்படி கள்ளத்தோணியில் ஏறிய பிறகுதான் எதையும் நிச்சயமாகத் தீர்மானிக்கலாம்" என்றாள்.

"பாவம், உன் மாமா குணசேகரன் நிலைமைதான் ரொம்ப தர்மசங்கடமாகப் போய்விட்டது. அவரை நம்பித்தானே உன் பெற்றோர் உன்னை ராமப்பட்டணத்துக்கு அனுப்பி வைத்தார்கள்? பெரிய பொறுப்பு இல்லையா அவருக்கு? உன் பெற்றோருக்கு அவர் என்ன பதில் சொல்வார்?"

"ஆறு பெருகெடுத்தோடிக் கடலில் சங்கமமாகிவிட்டது என்று கூறட்டும்; மொட்டு வெடித்து மலர, மணம் காற்றோடு கலந்தது என்று சொல்லட்டும். பருவ மழை உரிய காலத்தில் பெய்தது. பூமி குளிர்ந்தது என்று விளக்கட்டும். இந்த இயற்கை நியதிகளை மாற்ற முடியுமானால்தான் நான் உங்களை அடைவதை அவர்களால் தடுக்க முடியும்."

கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஆர்வத்துடன் உமாகாந்தன் பவானியின் இடக்கரத்தைப் பற்றினான்.

"உம்....உம்...! விளையாட்டெல்லாம் இப்போது வேண்டாம். 'ஸ்பீடா மீட்ட'ரைப் பாருங்கள்! என் இரண்டு கரங்களுக்கும் 'ஸ்டியரிங்'கில் வேலை இருக்கிறது" என்றாள் பவானி.

"எப்படியாவது நாம் மலேயாவை அடைந்து விடுவதாக வைத்துக் கொண்டாலும் நம் வாழ்க்கை அங்கேயும் நிம்மதியின்றித்தான் தொடரும் பவானி! "இங்கே ஸி.ஐ.டி.களுக்குப் பயந்து வாழ்ந்தோமென்றால் அங்கே ஜப்பானியர்களின் குண்டு வீச்சுக்கு அஞ்சி வாழும்படி இருக்கும்."

"இதற்கு அது எவ்வளவோ மேல். இங்கே நீங்கள் மறுபடியும் சிறைப்பட்டால் தனிமையை என்னால் தாங்கவே முடியாது. அங்கே வாழ்வோ சாவோ எதுவானாலும் நாம் சேர்ந்து அனுபவிக்கலாம் இல்லையா? சுதந்திரமாக வாழ்ந்து பாரதத்தின் சுதந்திரத்துக்கும் இயன்றவரை உழைக்கலாம் அல்லவா?"

"தேவலாமே! நீ இவ்வளவு தீவிர தேச பக்தை என்பது எனக்கு இதுவரை தெரியாமல் போயிற்றே!"

"எல்லாம் சகவாச தோஷம்தான்!"

"அப்படி எத்தனை நாள் என்னுடன் பழகி விட்டாய்? கல்லூரியில் பட்டும் படாமலும் ஏதோ நண்பர்களாகப் பழகினோம். பிறகு நான் சிறைக்குப் போய்விட்டேன். இப்போது மறுபடியும் சந்தித்து முழுசாக ஒரு வாரம்கூட ஆகவில்லையே?"

"அதென்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்? யுகம் யுகமாக உங்களுடன் தானே நான் நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கிறேன்" என்றாள் பவானி.

"அப்பப்பா! ஒரு தடவைகூடப் பேச்சில் என்னை ஜெயிக்க விடமாட்டாய்!" என்றான் உமாகாந்தன்.

பவானி சிரித்தாள். "சிறையிலிருந்து எப்படி நீங்கள் தப்பினீர்கள்? அதைச் சொல்லுங்கள். களைப்பையும் தூக்கத்தையும் விரட்ட உதவும்."

"அதற்கும் ஜப்பான்காரன்தான் உதவினான் பவானி. ஒரு நாள் மாலை சிறைச்சாலைச் சுவர் ஓரமாக நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று அபாய அறிவிப்பு சங்கு அலறியது. அவ்வளவுதான், வார்டர்களானால் என்ன, கைதிகளானால் என்ன, உயி ருக்குப் பயப்படாதவன் யார்? அவரவரும் சிறைக்குள்ளே அமைக்கப் பட்டிருந்த 'டிரென்ச்சு'க்குள் பதுங்குவதற்காக ஓடினார்கள். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தேன் நான். முன்னேற் பாட்டின்படி நானும் வேறு மூன்று கைதிகளும் நாங்கள் உடைத்துக் கொண்டிருந்த கருங்கள் ஜல்லிக் குவியல்களுக்குப் பின்னாலேயே பதுங்கிக் கொண்டோம். வார்டர்கள் தலை மறைந்ததும் அந்த மூவரும் கோபுரம் போல் நின்று எனக்குத் தோள் கொடுத்துத் தூக்கி விட்டார்கள். பதினைந்தடிச் சுவரின் மீது அவர்கள் உதவியுடன் ஏறுவது சிரமமாக இல்லை. அந்தப் பக்கம் குதிப்பதுதான் அச்ச மளிப்பதாய் இருந்தது. வந்தது வரட்டும் என்று கண்களை மூடிக் கொண்டு குதித்தேன். நல்ல வேளை கைகால் ஏதும் முறியவில்லை.

"அப்புறம்?"

"நன்றாக இருள் கவியும்வரை ஒரு பாதாளச் சாக்கடையின் உள்ளே இடுப்பளவு நீரில் துர்நாற்றத்தைச் சகித்துக் கொண்டு நின்றேன். அபாயம் நீங்கியதற்கு அறிகுறியாகச் சங்கொலிப்பதும் போலீஸார் என்னைத் தேட இங்குமங்கும் விரைவதும் இலேசாகக் கேட்டன. மனசு கிடந்து திக் திக்கென்று அடித்துக்கொண்டது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சந்தடி யெல்லாம் அடங்கி விட்டது. நன்றாக இருட்டியிருக்கும் என்று தோன்றியபோது மெல்ல வெளியே வந்து இருளில் பதுங்கிப் பதுங்கி நடந்தேன். கங்கையில் இறங்கிச் சாக்கடை அழுக்குப் போகக் குளித்தேன்.

"அந்த அதிகாலை நேரத்தில் ஆற்றங்கரையில் ஒரு பெரியவர் குளித்துவிட்டுச் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் கண்களை மூடித் தியானத்தில் இருந்த சமயம் கரையில் இருந்த அவர் துணி மணிகளை எடுத்துக் கொண்டு சந்தடியின்றி ஓடிவிட்டேன். சிறிது தூரம் போய் ஒரு மரத்துக்குப் பின்னால் உடைகளை அணிந்து கொண்டு கைதி உடைகளை ஒரு பெரிய பாறாங்கல்லைச் சுற்றிக் கட்டி ஆற்றில் எறிந்து விட்டேன். மகராஜன் துணிமணிகளை எனக்குத் தந்தது மட்டுமல்ல; அதில் ஒரு மணி பர்ஸும் வைத்திருந்தான். அதிலிருந்த பணம் என் தாயாரின் சொந்தக் கிராமத்துக்கு நான் வந்து சேரும்வரை எனக்குப் போதுமானதாய் இருந்தது. நல்லவேளை! பர்ஸில் விலாசமும் இருந்தது. அம்மாவிடம் பணம் கேட்டுப் போஸ்டல் ஆர்டர் வாங்கி அனுப்பி விட்டேன்."

"உங்கள் தாயார் கல்கத்தாவிலிருந்து கிராமத்துக்கு வந்து விட்டாரா? ஏன்?"

"அது உனக்குத் தெரியாதா? ஆம்; தெரிய நியாயம் இல்லைதான். நான் கையும் களவுமாகப் பிடிபட்டதே என் தகப்பனாருக்குப் பெரிய அதிர்ச்சி. அதுவும் அவர் வேலை பார்த்து வந்த பாங்கியிலேயே அவர் மகன் கொள்ளையடித்து விட்டதை - அந்த அவமானத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. போதாக் குறைக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் என் அண்ணனுக்குக் கடன் கொடுத்த மார்வாடி வீட்டுக்கு வந்து கத்தியிருக்கிறான். இந்த இரண்டாவது அதிர்ச்சி ஏற்பட்டபோது என் தகப்பனார் இதயம் பாதிக்கப்பட்டு விட்டது. எப்படியோ சமாளித்துக் கொண்டு தம் சேமிப்பையெல்லாம் துடைத்தெடுத்து மார்வாடியிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் அப்போது படுக்கையில் விழுந்தவர் பின்னர் எழுந்திருக்கவே இல்லை. சீக்கிரமே இரண்டாவது 'ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டு உயிர் துறந்தார். வைதவ்ய நிலை அடைந்த என் தாயார் கல்கத்தாவில் வாழப் பிடிக்காதவளாகத் தன் சொந்தக் கிராமத்துக்குப் பெற்றோருடன் வசிக்கப் போய்விட்டாள். அங்கிருந்து அவள் தன் துயரத்தை யெல்லாம் வடித்து எழுதிய கடிதம் எனக்குச் சிறைச்சாலையில் கிடைத்தது.

"பவானி! நான் சிறையிலிருந்து தப்ப முடிவு செய்ததற்கு என் தாயாரின் கண்ணீர்க் கறை படிந்த முகம் சதா என் நினைவில் தோன்றிக் கொண்டிருந்தது ஒரு காரணம்" என்றான் உமாகாந்தன்.

"பாவம்! அவரை ஒரு தடவை சந்தித்து ஆறுதல் கூடச் சொல்லாமல் மலேயாவுக்கு உங்களுடன் கப்பலேறிவிடப் போகிறேனே என்று எண்ணினால் எனக்கே வெட்கமாக இருக்கிறது" என்றாள் பவானி. அங்கிருந்து பத்தாவது மைல் கல்லில் அவர்கள் பயணம் முடிந்துவிடப் போவதை அக்கணத்தில் அறியாதவளாக.

(தொடரும்)