அவமானத்தின் எதிரொலி

ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனுக்கும் கல்யாணத்துக்கும் வீட்டிலே மண்டகப்படி நடந்தது.

"பேர்தான் ஊரெல்லாம் அமர்களப்படுகிறது. 'வக்கீல் திலகம்' 'குறுக்கு விசாரணை மன்னன்' என்றெல்லாம் வர்ணிக்கிறார்கள். ஆனால் தனக்கென்று வரும்போது ஒரு சின்னக் கேஸை ஜெயிக்கத் தெரியலையே" என்றாள் செல்லம், தன் கணவரைப் பார்த்து. "கேவலம் ஒரு பெண்பிள்ளையிடம் தோற்றுவிட்டுத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!"

"இது அப்பாவுக்குத் தோல்வி இல்லை, அம்மா" என்றான் கல்யாணம். "மாசிலாமணி வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டார். ஒரு விதத்தில் அப்பாவுக்கு இது வெற்றி என்றே வைத்துக் கொள்ளலாம்.."

"போதுண்டா, சமர்த்து வழியறது" என்றாள் செல்லம். "அதுதான் அந்தப் பெண்ணை நீயே கல்யாணம் செய்து கொள்கிற‌ரதாகக் கோர்ட்டில் சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறாயே. வாக்குறுதியை வாங்கிக் கொண்ட பிறகுதானே அவர்கள் ராஜியாகப் போகச் சம்மதித்த்தார்கள். இதற்குப் பெயர் வெற்றியா? வெட்கக்கேடு!"

"ஏன் அப்படி வெறுத்துக் கொள்கிறாய் அம்மா? நீதானே வீட்டுக்குப் பதவிசாக, அடக்கமாக ஒரு நாடுப் பெண் வர வேண்டும் என்று ஆசைப் பட்டுக் கொண்டிருந்தாய்? பவானி பற்றி நானோ அப்பாவோ பிரஸ்தாபித்த போதெல்லாம் பயந்து போய் 'வேண்டாம், வேண்டாம்' என்று பதறினாயே. இப்போ உன் ஆசைப்படி அடக்கமான பெண்ணை மணந்துகொள்ளச் சம்மதித்திருக்கிறேன்."

செல்லம், " கஷ்டம், கஷ்டம்" என்று நெற்றியில் தட்டிக் கொண்டாள். "குடும்பப் பாங்கான பெண் வேண்டும் என்று நான் சொன்னது வாஸ்த‌வம். அதற்காக இரண்டாந்தரச் சரக்கையா ஏற்பேன்? அவள் எவனுக்கோ கழுத்தை நீட்டிவிட்டு வந்தவள், இந்த வீட்டில் அடியெடுத்து வைப்பதா? அவள் ஜாதகத்தில் என்ன தோஷமோ, சரியாக முகூர்த்த சமயத்தில் கல்யாணம் நின்று போச்சு. அவளைப் போய் இங்கே குடியேற்றுவதா?"

கல்யாணம் திகைத்துப் போனான். தன் தாயார் திடும்மென்று இப்படி ஒரு புதிய நோக்கில் கமலாவைப் பார்ப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவே யில்லை. 'கமலாவின் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருந்தால் அது கல்யாணமாகிய தான்தான்' என்று தன் தாயாருக்கு எப்படி எடுத்துக் கூறிப் புரிய வைப்பது? தோஷம், கல்யாணத்தின் வடிவிலே தோன்றித்தானே திருமணத்தை நிறுத்தியது?

"கேட்டியாடா?" என்றார் கோபாலகிருஷ்ணன். "இதையெல்லாம் யோசித்துத்தான் நான் கோர்ட்டிலேயே உன் சட்டையைப் பிடித்து இழுத்து உட்கார வைக்கப் பார்த்தேன். நீ என்னடாவென்றால் வீராதி வீரனாக உன்னைக் காட்டிக் கொள்ள என்னவெல்லாமோ உளறி வைத்தாய்."

"நான் ஒன்றும் உளறவில்லை, அப்பா!நன்றாக யோசித்து, இதுதான் சரியானமுடிவு என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன். உங்களுக்காகவோ அல்லது அம்மாவுக்காகவோ நான் இனி மாறப் போவதில்லை. உங்களுக்குக் கமலாவைப் பிடிக்கவில்லையென்றால் நான் தனிக் குடித்தனம் வைத்துக் கொள்ளத் தயார்." என்று உறுதியாகக் கூறிய கல்யாணம், கோபம் கலந்த வேகத்தோடு சட்டையை மாட்டிக் கொண்டு விடுவிடென்று புறப்பட்டான். நாடகத்துக்கு மாற்றுத் தேதி நிர்ணயித்துச் சமூக சேவா சங்கத்தில் மறுபடியும் ஒத்திகைகள் ஆரம்பமாகி யிருந்தன.

"ஐயோ! இப்படிப் பெரிய கல்லாத் தூக்கிப் போட்டுட்டுப் போறானே! நீங்களும் கேட்டுண்டு சும்மா இருக்கிறீர்களே!" என்று புலம்பினாள் செல்லம். கோபாலகிருஷ்ணன், வீட்டு யுத்த‌ம் எப்படியாவது போகட்டும்; உலக யுத்தத்தைக் கவனிப்போம் என்று எண்ணியவராக‌ அன்றைய நாளிதழில் ஆழ்ந்தார். - - - - - -

மாசிலாமணி முதலியார் வீட்டில் காமாட்சி அம்மாள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்: "வீடாவது, வீடு! அரண்மனை மாதிரி இருந்ததே! மூன்று அலமாரிகள் நிறைய வெள்ளிச் சாமான். ஒரே ஒரு வெள்ளிக் கூஜாவைத் தூக்கிப் பார்த்தேன்; கனமாவது கனம்! இந்தக் கையாலேயே இரும்பு அலமாரி பூட்டி இருக்கிறதா என்று அழுத்திப் பார்த்து விட்டு வந்தேனே! எல்லாம் போச்சு. அதை யெல்லாம் ஆள இந்தத் துக்கிரிப் பெண்ணுக்குக் கொடுத்து வைக்கவில்லை."

"அதைப் பற்றி இப்போ பேசி என்ன செய்ய? எல்லாமே நன்மைக்குத்தான் என்று வைத்துக் கொள். மாப்பிள்ளை என்று பார்த்தாள் கல்யாணசுந்தரம் எவ்வளவோ உசத்தி. இளம் வயசு, நல்ல படிப்பு, பார்க்கவும் இலட்சணமாய் இருக்கிறான். பணம் காசு, சொத்து சுதந்திரம் எதற்கும் குறைவில்லை: ஒரே பையன்.... "

"இத்தனை இருந்தும் என்ன புண்ணியம்? அம்மா கோண்டுவாக அல்லவா இருப்பான் போலிருக்கிறது? புருஷப் பிள்ளைகளுக்குச் சுயபுத்தி வேண்டாமோ?

"சுய புத்தி இல்லாமலா அவ்வளவு பேர் நடுவில் கோர்ட்டில் 'நான் கமலாவைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்;" என்றான்.

"அவன் சமர்த்தை நீங்கள்தான் மெச்சிக் கொள்ள வேண்டும். நாளைக்கு அவனே வந்து நின்று 'எங்கம்மா இந்தக் கல்யாண‌ம் வேண்டாமென்கிறாள், நான் என்ன பண்ணறது?" என்று கையை விரித்தாலும் விரிப்பான்.

அப்போது ரங்கநாதனின் நகைப் பெட்டி யொன்றை எடுத்து வந்து தகப்பனாரிடம் நீட்டி "இதைக் கொண்டுபோய் கொடுத்து விடுங்கள், அப்பா!" என்றாள் கமலா.

காமாட்சி அம்மாள் சரேலென்று இடையில் பாய்ந்து அதைப் பிடுங்கிக் கொண்டாள். "இப்போ ஒண்ணும் அவசரமில்லை; எங்கே ஓடிப் போறது? பார்த்துக் கொள்ளலாம்." என்றாள். "மூதேவிக்கு அதிர்ஷ்டம் வந்தால் மூன்று நாளைக்கு நிலைக்கும் என்பார்கள். உனக்கு ஒரு நாள்கூட நிக்கலையே."

"அப்பா! வெறுமனே அம்மா என்னை வையறாளே? நான் என்ன தப்பு செய்தேன்?" என்று விசும்பினாள் கமலா.

"முகூர்த்த வேளை பார்த்துக் கண்ணால் ஜலம் விட்டுக் கொண்டு நின்றாயே, அது போதாதா?" என்றாள் காமாட்சி.

இந்தச் சமயம் வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்டது.

"இந்தா, காமாட்சி வாயை அடக்கு! யாரோ வருகிறார்கள்" என்றார் மாசிலாமணி. " அப்புறமா உன் பிரலாபத்தை வைத்துக் கொள்ளலாம்."

"யார் வந்தால் எனக்கு என்ன? எதற்கு நான் பயப்பட வேண்டும்?"

"நன்றாயிருக்கிறது; உங்களுக்கு என்ன பயம்? நீங்கள்தான் மானம், வெட்கம் எல்லாத்தையும் விட்டவர்கள் ஆச்சே!" என்று கூறிக் கொண்டே செல்லம் உள்ளே நுழைந்தாள்.

"பார்த்தீர்களா, நான் சொன்னது சரியாய்ப் போச்சா?" என்றாள் காமாட்சி.

"நீ என்ன சொன்னாய்?" என்றார் மாசிலாமணி.

"சொன்னேன் சுரைக்காய்க்கு உப்பில்லை என்று! ஏண்டி கமலா, நீதான் சொல்லேன். இல்லே உனக்கும் மறந்து போச்சா?' அம்மாவின் தலைப்பைப் பிடித்துக் கொண்டு வளைய வருகிற அந்தப் பிள்ளை, கோர்ட்டிலே சவடாலாகப் பேசினதுதான் மிச்சம்; காரியத்தில் உறுதியாக இருக்கமாட்டான்'னு சொன்னேனா இல்லையா?"

"அவன் எதற்காக உறுதியாக நிற்கணும்? ஊரிலே உங்களைப் பற்றி நாலு பேர் நல்லவிதமாகப் பேசினால் அவனும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கான்.

ஆனால் காது கொடுத்துக் கேட்க முடியாத விஷயமெல்லாம் உங்களைப் பற்றி அடிபடுகிறதே!" "அப்படி என்னமா சொல்றா, எங்களைப் பற்றி?" என்று மாசிலாமணி சற்றுக் கோபமாகவே கேட்டார்.

'அதை என் வாயாலே சொல்லித்தான் ஆகணும் என்கிறீர்களாக்கும்; சொல்றேன். நீங்கள் இந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஊர் ஊராகப் போகிறது: அங்கங்கே யாராவது ஒரு கிழவனை மயக்கி இவளை அவனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கிறது; அவனிடத்தில் பணமும் நகையுமாகப் பறித்துக் கொண்டு இன்னோர் ஊரைப் பார்க்கப் போய்விடுகிற்து.இதுவே உங்கள் தொழில் என்று பேசிக் கொள்கிறார்கள், போதுமா?"

"சிவ சிவா!" என்று காதுகளைப் பொத்திக் கொண்டார் மாசிலாமணி.

"சிவனையும் விஷ்ணுவையும் கூப்பிடுவானேன்? இதோ, உங்க பெண்டாட்டி கையிலே இருக்கே, நகைப் பெட்டி அது யாருடையது? எங்கிருந்து வந்தது? அது ஏன் இன்னும் அதன் சொந்தக்காரரிடம் போய்ச் சேரவில்லை?"

"ஐயையோ! இதென்ன அபாண்டம்" என்றார் மாசிலாமணி.

"அபாண்டமோ பிரும்மாண்டமோ, எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு இருக்கிறது ஒரே பிள்ளை. கோர்ட்டிலே அவன் ஏதோ க்ஷண நேர வேகத்திலே ஏதோ சொல்லிவிட்டான் என்பதற்காக அவன் கழுத்திலே இந்தப் பென்னை கட்டி விடலாம் என்று பார்க்காதீகள். என் உடம்பில் உயிர் உள்ளவரை அது நடக்காது. நாங்கள் ரொம்ப ஆசாரம் பார்க்கிறதில்லை; என் வீட்டுக்காரர் முற்போக்குக் கொள்கைகளை உடையவர்தான்; அதற்காக எச்சில் பண்டங்களைத் தொட்டுக் கொண்டாடுகிற்தில்லை!" செல்லம்மாள் படபடவென்று இப்படிப் பொரிந்து தள்ளிவிட்டுத் திரும்பி விடுவிடு என்று நடந்துவிட்டாள்.

மாசிலாமணி அவமானம் தாங்காமல் மேல் துண்டால் முகத்தை மூடிக் கொண்டார்.

நகைப் பெட்டியை அப்போதும் விட மனமில்லாமல் இறுக அணைத்துக் கொண்ட காமாட்சி, "கிணற்றிலே விழுந்தியே - அப்பவே போயிருக்கக்கூடாதா நீ! இன்னும் என்னவெல்லாம் அவமானங்களை எங்களுக்குத் தேடி வைக்கப்போகிறாயோ? நானாக இருந்தால் மலையிலேயிருந்து குதித்துப் பிராணனை விட்டு விடுவேன்" என்று கூறிக் கமலாவின் கன்னத்தில் ஒரு முறை குத்தி நிமிண்டிவிட்டு உள்ளே சென்றாள்.

கமலா அழவில்லை. அழுது அழுது கண்ணீரெல்லாம் வற்றி வறண்டுவிட்டது போல் நின்றாள். 'நானாக இருந்தால், மலையிலேறிக் குதித்தாவது பிராணனை விட்டுவிடுவேன்' என்று காமாட்சி கூறியது திரும்பத் திரும்ப அவள் மனத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.