கல்யாணத்துக்கு அவமானம்.

பவானியின் மாம குணசேகரன் தன்னைத் தடுப்பதைப் பொருட்படுத்தாமல் தடதடவென்று மாடிப் படிகளில் ஏறினான் கல்யாணம்.

அதற்கு முன் மொட்டை மாடியிலிருந்து உமாகாந்தைக் கைத்தாங்கலாகப் பற்றிப் படுக்கை அறைக்குள் அழைத்துப் போயிருந்தாள் பவானி. கதவைச் சாத்தினாள், ஆனால் தாளிடவில்லை. மாமா குணசேகரன் கல்யாணத்தை வாசலிலேயே நிறுத்தச் சாக்குப்போக்குக் கூறி அனுப்பி விடுவார் என்ற நம்பிக்கையில் உமாகாந்தைப் படுக்கவைத்தாள். "நாளைக் காலையில் நாம் சீக்கிரமே புறப்பட்டு விடலாம். நிம்மதியாகத் தூங்குங்கள்" என்றாள். உமாகாந்தன் அவள் கரத்தை எடுத்துக் கன்னத்தில் ஒத்திக் கொண்டு உள்ளங்கையில் இதழ்களைப் பதித்தான்.

அதே சமயம், "பவானி! பவானி!" என்று அழைத்தபடியே கதவைப் 'படா' ரென்று திறந்து கொண்டு உள்ளே வந்தான் கல்யாணம். பவானியையும் கமலா குறிப்பிட்ட அவள் காதலனையும் ஒருசேரப் பார்த்து ஓரிரு விநாடிகள் பிரமித்து நின்றான்!

பின்னாலேயே குணசேகரன் இரைக்க இரைக்க ஓடி வந்தார். "நான் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் என்னை ஒதுக்கித் தள்ளி விட்டு வந்திருக்கிறான், பவானி!" என்றார்.

பவானி திகைப்பு நீங்கியவளாகக் கோபத்துடன் எழுந்து நின்றாள். "யூ ஸில்லி இடியட்! கெட் அவுட்!" என்றாள்.

"ஆமாம், நான் ஸில்லி இடியட்தான்! தெய்விகமான உன் பெயரையும் அழகான வெளித்தோற்றத்தையும் அறிவாற்றலையும் பார்த்து ஏமாந்து போனேன் அல்லவா? அத்தனைகத்தனை உன் மனம் விகாரமானது என்பது எனக்குப் புரியாமல் போய்விட்டது அல்லவா?"

"கெட் அவுட், யூ மானர்லெஸ் புரூட்!" என்று கத்தியவாறு ரௌத்திராகாரத்துடன் இரண்டு அடி முன்னால் எடுத்து வைத்தாள் பவானி.

"பேஷாகப் போகிறேன்! ஆனால் முதலில் நான் வந்த காரியத்தைக் கூறிவிட்டு..."

அவனைத் தொடர விடாமல் பவானி, "பேசாதே! நீ சொல்லும் ஒரு வார்த்தையைக்கூட நான் கேட்க விரும்பவில்லை" என்றாள். "மாமா! எதற்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? கிக் ஹிம் அவுட்!"

பவானி முன்னேற முன்னேறக் கல்யாணம் அவளுக்கு இடம் கொடுத்துப் பின்வாங்கி அறைக்கு வெளியே வந்திருந்தான். மாடிப்படிகளை நெருங்கியும் விட்டான். ஆனால் அவன் பார்வை பார்வை மட்டும் பவானியை நோக்கித்தான் இருந்தது. முதுகுப் புறம்தான் மாடிப் படிகளைப் பார்க்க இருந்தது. "பவானி!" என்று மீண்டும் ஏதோ கூற ஆரம்பித்தான் கல்யாணம். இப்போது அவனுக்குத் தான் அத்துமீறிப் பிரவேசித்தது தவறு என்றும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தோன்றிவிட்டிருந்தது. ஆனால் பவானி எதையும் செவி மடுக்கும் மனநிலையில் இல்லை. கோபத்தின் உச்ச கட்டத்தை அடைந்திருந்தாள். "ஏனய்யா? உனக்கு வெட்கம் மானம் இல்லையா? வேலைக்காரனைக் கூப்பிட்டுக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினால் தான் போவாயா?" என்று கேட்டபடியே மேலும் இரண்டடி எடுத்து வைத்தாள்.அவளுக்கு வழி விட்டு ஓரடி பின்னால் நகர்ந்தான் கல்யாணம். அவ்வளவுதான், மாடிப் படியில் இசகு பிசகாகக் காலை வைத்துத் திபுதிபுவென்று உருண்டு விழுந்தான். படிக்கட்டில் இடையிலிருந்த ஒரு திருப்பத்தில்தான் அவன் சலனம் தடைப்பட்டு நின்றது.

சுவரில் மோதிக் கொண்டதில் அவன் மண்டையில் 'விண், விண்'ணென்று வலி தெறித்தது. ஆனால் அதை விடவும் அதிகமாக இருந்தது அவமானம் பிடுங்கித் தின்றதால் வேதனை. மிச்சமிருந்த படிக்கட்டில் விடுவிடென்று இறங்கி, வாசலைத் தாண்டி, தோட்டத்தைக் கடந்து, வீதியில் தான் நிறுத்தியிருந்த காரில் ஏறி, அதனைக் கிளப்பினான். அந்தச் சமயம் பார்த்து அது கிளம்ப மறுத்து அவன் பொறுமையைச் சோதித்தது. "சீ நன்றி கெட்ட ஜன்ம்மே! இப்படி கழுத்தறுப்பதற்குப் பவானியுடம் கற்றுக்கொண்டாயா?" என்று ஆவேசத்துடன் கேட்டுக் கீழே இறங்கிப் 'படா'ரென்று கதவைச் சாத்தி, போதாக் குறைக்குக் காரை ஓர் உதையும் விட்டான்!

நடக்க ஆமர்பித்த கல்யாணத்தை அவன் கால்கள் நேரே மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் வீட்டுக்கு அழைத்துப் போயின. அவர் வராந்தாவில் அமர்ந்து நிலாவை வெறித்து நோக்கியபடி எட்டாவது கோப்பை ஸ்காட்ச் விஸ்கியைக் கண்டத்தில் கவிழ்த்துக் கொண்டிருந்தார்.

'எதற்காக இங்கு வந்து சேர்ந்தோம்?' என்று அவரை நெருங்கிப் பார்த்ததும்தான் யோசித்தான் கல்யாணம். "இனம் இனத்தைச் சேரும் என்பதற்கு ஏற்பப் பவானியால் அவமதிக்கப் பட்ட நீ பவானியின் நிராகரிப்பால் குன்றிப் போயிருக்கிற கோவர்த்தனனைத் தேடி வந்திருக்கிறாய் என்று அவன் மனம் சரியாகவே பதில் கூறிற்று.

ஆனால் "என்ன கல்யாணம்? எங்கே வந்தாய்?" என்று கோவர்த்தனன் கேட்ட போது, "சும்மாத்தான் இப்படி வ‌ந்தேன்" என்றுதான் சொன்னான் கல்யாணம்.

"தமிழ் அகராதியிலிருந்தே 'சும்மா' என்ற வார்த்தையை நீக்கிவிட வேண்டும் என்றார் கோவர்த்தனன்.

"என்ன சார் அப்படிச் சொல்லிவிட்டீர்கள்! 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கிற திறமரிது, அரிது!' என்று தாயுமானார் அலறியிருக்கிறாரே.

"அவர் சும்மா இருப்பதுதானே? எதற்காக அத்தனை பாடல்களை எழுதி வைத்து நம் பிராணனை வாங்குகிறார்? போனால் போகட்டும். நீ வந்த காரியத்தைச் சொல்லு!"

"காரியம் என்று அப்படி ஒன்றுமில்லை. உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்."

"பார்த்தாயிற்று அல்லவா? போகலாமே?"

"இன்றைக்கு என் ஜாதக விசேஷம் போலிருக்கிறது, எங்கே போனாலும் வரவேற்பு ஒரு மாதிரி இருக்கிறது."

இன்னும் எங்கே போயிருந்தாய்?"

"பவானி வீட்டுக்குப் போனேன்."

"எனக்குப் பிடிக்காத காரியம். தெளிவாகச் சொல்கிறேன். இனிமேல் பவானி வீட்டுக்குப் போவதை நீ நிறுத்தி விடு!"

"தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது!"

"அப்படி யென்றால்"

"இனிமேல் அவள் வீட்டுக்குப் போவதில்லை என்று நானும் சற்று முன்புதான் முடிவு செய்தேன்."

"ஓ! பவானியே வாசல் பக்கத்துக்கு வழிகாட்டி விட்டாளா? அவள் சொன்ன உடனே கிளம்பி விட்டாயா? இல்லை வேலைக்காரனைக் கூப்பிட வேண்டியிருந்ததா?"

"அவ்வளவுக்கு நான் வைத்துக் கொள்வேனா? மாடிப் படியில் பின்னங் கால்களை வைத்தேன்; நேரே கீழே வந்து சேர்ந்து விட்டேன்!"

கோவர்த்தனன் சிரித்து விட்டு "சரி, இனிமேலாவது அந்தப் ப‌க்கம் தலை காட்ட வேண்டாம்" என்றார். பிறகு "பவானிக்கு உடம்பு எப்படி இருக்கு? தேவலமா?" என்று வினவினார்.

"உடம்பா? நான் பார்த்தவரையில் சரியாகத்தானே இருந்தாள்? என்றான் கல்யானம்.

"இல்லை, இல்லை! உனக்குத் தெரியாது. பவானிக்கு இன்ஃபுளூயென்ஸா. அதனால் கோர்ட்டுக்கு வர முடியவில்லை என்று சொல்லி அனுப்பினாள். அவள் சம்பந்தப்பட்ட கேஸைக்கூட இரண்டு வாரங்கள் ஒத்திப் போட்டிருக்கிறேன். நானே அவளைப் போய் விசாரிப்பதாக இருந்தேன். ஆனால் டாக்டர்கள் 'விசிட்டர்கள் யாரும் வராமலிருந்தால் நல்லது' என்று உத்தரவிட்டிருப்பதாக அவள் மாமா சொன்னார். அதனால்தான் போகவில்லை."

"ஆமாம், ஆமாம்! இன்ஃப்ளூயன்ஸா வந்திருக்கிறார். நானும் கூடப் பார்த்தேன்!"

"என்னப்பா கிண்டல் பண்ணுகிறாய்? 'இன்ஃப்ளூயன்ஸா வந்திருக்கிறார்' என்றால் என்ன அர்த்தம்?"

"நான் பார்த்த இன்ஃபுளூயன்சாவுக்கு இரண்டு கால், இரண்டு கை, இரண்டு கண் எல்லாம் இருக்கு என்று அர்த்தம்! மிஸ்டர் இன்ஃப்ளூயன்ஸா பவானியின் படுக்கையில் சயனித்து, அவளைப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு, அவள் கைகளைப் பிடித்துக் கன்னத்தில் ஒற்றிக் கொண்டு, அவளைத் தன் இரு கண்களாலேயும் விழுங்கி விடுகிறவரைப் போல பார்த்துக் கொண்டிருந்தார்! மிஸ்டர் இன்புளுயன்ஸா ரொம்ப ஆபத்தான பேர்வழிதான்!"

கோவர்த்தனன் மதுக் கோப்பையை 'ஸ்டூல்' மீது வைத்து விட்டு எழுந்தார். அவருக்கு உடல் தள்ளாடியது. கல்யாணத்தை நெருங்கி அவன் சட்டையை முறுக்கிப் பிடித்துக் கொண்டார். "அடேய்! நீ சொல்வது நிஜம்தானா! பொய்யாக இருந்தால் உன்னை ஷூட் பண்ணி விடுவேன்!" என்றார்.

பிறகு மெள்ளத் திரும்பி மது போதை ஏறியதால் ஏற்பட்ட இலேசான தடுமாற்றத்துடன் நடந்து வீட்டுக்குள்ளே சென்றார். அவர் மறுபடியும் வாசலுக்கு வந்த போது அவர் கரத்தில் இருந்த துப்பாக்கி, சந்திரக் கிரணம் ஒன்று பட்டுத் தெறித்ததால் மின்னியது!

(தொடரும்.)