கைதியின் கதை
மகாலக்ஷ்மி பாங்கின் பிராஞ்சு மானேஜர் கருணாகரனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் சட்டப் படிப்பு முடித்துக் கொண்டு உத்தியோகம் ஏற்கும் நிலையில் இருந்தான். இளைய பையன் உமாகாந்தன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் தேசபக்தி மிக்கவன். இரண்டொரு முறை மறியல் செய்து தடியடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்து விட்டு வந்தான். இன்னும் சிறை செல்லும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தான்.
'பிள்ளை இப்படி நடந்து கொள்கிறானே, நாளைக்கு இவன் சிறைக்குப் போகும்படி நேர்ந்தால் என்ன செய்வது?' என்று ரொம்பவும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார் கருணாகரன். அவன் சிறை சென்றால் அது தனக்குப் பெரிய அவமானம் என்று நினைத்தார். 'ஆனமட்டும், "மறியல், போராட்டம் இதெல்லாம் வேண்டாம். சிரத்தையாகப் படித்துத் தேறி நல்ல உத்தியோகத்தில் அமர்கிற வழியைப் பார்" என்று எடுத்துச் சொன்னார். ஆனால் உமாகாந்தன் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே யில்லை. சுதந்திரப் போரில் தானும் இயன்றமட்டும் ஈடுபட்டதுடன் புரட்சியாளர் பலருக்கு இரகசியமாக உதவியும் வந்தான்.
அவனுடைய இந்தப் போக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த கருணாகரனுக்கு இருந்த ஒரே ஆறுதல், மூத்த மகனாவது சமர்த்தா யிருக்கிறானே, சட்டப் படிப்பை முடித்துக் கொண்டு நல்ல உத்தியோகத்தில் அமரத்தயாராய் இருக்கிறானே என்பதுதான். உமாகாந்தனை உள்ளத்திலிருந்து ஒதுக்கிக் கோவர்த்தனனை அடிக்கடி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் உண்மையில் தமையன் கோவர்த்தனன் கெட்ட சகவாசங்களால் குடிப்பது, பணம் வைத்துச் சீட்டாடுவது போன்ற காரியங்களில் இறங்கி மார்வாரிகளிடம் ஏகமாகக் கடன்பட்டிருந்தான். இது தகப்பனாருக்குத் தெரியாது. ஒரு கட்டத்தில், "உடனே கடனைத் திருப்பித் தராவிட்டால் வாரண்டு" என்று மார்வாரி கடைசி எச்சரிக்கை செய்து விட்டான். 'அவன் வீட்டு வாசலுக்கே வந்து ரகளை செய்தால் என்ன நடக்கும்? என்னைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பா மனமுடைந்து போய் அதிர்ச்சியில் இறந்தே விடுவார். அப்படி ஒருவேளை இந்தச் செய்தி கேட்டு அவர் இதயம் நின்றுபோக வில்லை என்றாலும் ஒரு முழக் கயிறு தேடுவார். அவர் மானஸ்தர். இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவது?' என்று கோவர்த்தனன் யோசித்துக் கொண்டிருந்தான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் சற்றும் எதிர்பாராத விதமாக உமாகாந்தனுக்கும் தகப்பனார் கருணாகரனுக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஒன்று நிகழ்ந்தது. அதைக் கேட்டுக் கொண்டே இருந்த கோவர்த்தனன், தான் மார்வாரியின் இரும்புப் பிடியிலிருந்து தப்பிக்க ஒரு வழி புலப்பட்டு விட்டது என்று எண்ணினான். தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையில் நடந்த சொற்போரைக் காது கொடுத்துக் கேட்டான்.
காயம் பட்ட தேசத் தொண்டர்களின் உதவி நிதிக்காகத் தன் தகப்பனாரிடம் கணிசமான தொகையை நன்கொடையாகக் கேட்டான் உமாகாந்தன்.
கருணாகரனோ, "ஊரில் இருக்கிற நன்றி கெட்ட நாய்க்கெல்லாம் சிகிச்சை பண்ண இங்கே என்ன பணம் கொட்டி வைத்திருக்கிறதா?" என்றார்.
"அப்பா! நீங்கள் தேசபக்தர்களை அவமரியாதையாகப் பேசியதை மறந்து விடுகிறேன், பணம் கொடுத்தால்!" என்று உமா காந்தன் பல்லைக் கடித்துக் கொண்டு பேசினான்.
"பணத்துக்குத் திருடப் போக வேண்டியதுதான்" என்றார் கருணாகரன்.
"அதை நீங்கள் சுலபமாகச் செய்யலாமே? மகாலக்ஷ்மி பாங்கின் பிராஞ்சு மானேஜர் தானே நீங்கள்!" என்றான் உமா.
தகப்பனாருக்குப் பொல்லாத கோபம் வந்து விட்டது. "அடப் பாவி! என்னைப் பார்த்தா அப்படிச் சொன்னாய்? நான் வேலை செய்கிற பாங்கில் நானே கொள்ளையடிக்க வேண்டும் என்று சொல்ல உனக்கு நாக்குக் கூசவில்லையா?" என்று மிகுந்த ஆத்திரத்தோடுகேட்டார்.
"கொள்ளையடித்தால் என்ன?" என்று துடுக்காகப் பேசினான் உமாகாந்தன். "பாங்கில் இருக்கும் பணமெல்லாம் எங்கேயிருந்து வந்தது? ஏழைகளைக் கொள்ளை யடித்து அடைந்த பணத்தைப் பணக்காரர்கள் பாங்கில் போட்டு வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதானே?" என்றான்.
உமாகாந்தன் ஒரு தீவிர சோஷலிஸவாதி. ஆகவே அவன் விளையாட்டாக இப்படிப் பேசவில்லை. இளமை வேகத்துடன் அன்று அவன் மனப்பூர்வமாக நம்பியதையே கூறினான்.
அவன் தகப்பனாரோ நன்றி விசுவாசம், தர்ம நியாயம் முதலிய பண்புகளில் ஊறித் திளைத்து வளர்ந்தவர். எனவே அவரால் தம் மகனுடைய பேச்சைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ரௌத்திராகாரமானார். "அட, சண்டாளா! நீ உருப்பட மாட்டாய் என்று நான் என்றைக்கோ தீர்மானித்து விட்டேன். உன் படிப்புக்கும் அதற்கும் இதற்குமென்று இத்தனை காலம் நான் செலவழித்ததெல்லாம் தண்டம். என் முகத்திலேயே இனி விழிக்காதே! வீட்டை விட்டு வெளியே போ!" என்று ஆவேசத்துடன் கத்தினார். அவர் மனைவியும் மூத்த மகனும் அவரைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றனர். அவர் பிடிவாதக்காரர். அந்தப் பிடி வாதத்தைக் குறையின்றி மகன் உமாகாந்தனும் பெற்றிருந்தான். எனவே அவன் வெளியேறி விட்டான்.
அன்றிரவு கருணாகரனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. யாரோ பாங்கியைக் கொள்ளை யடிப்பது போல் கனவு கண்டார். திடுக்கிட்டு விழித்துக் கொண்டவர் பாங்கின் வாசல் சாவி, இரும்பு அறைச் சாவி எல்லாம் பத்திரமாக இருக்கின்றனவா என்று ஒரு தடவை பார்க்க நினைத்து வீட்டின் இரும்பு பீரோவைத் திறந்தார். அவருக்கு பகீரென்றது. பாங்குச் சாவி வழக்கமாக அவர் வைக்குமிடத்தில் காணோம்! அவருக்கு உடனே உமாகாந்தன் ஞாபகம்தான் வந்தது. அவன்தான் பழி வாங்கும் நோக்கத்துடன் பாங்குச் சாவியைத் தனக்குத் தெரியாமல் கொண்டு போய் விட்டான் என்று தீர்மானித்து விட்டார். பாங்கியை நோக்கிப் பரபரப்புடன் ஓடினார். அந்த இரவு நேரத்தில் வாகன வசதி ஒன்றும் கிடைக்காது. நல்ல வேளையாக பாங்கு ரொம்ப தூரத்திலும் இல்லை. கிளை அலுவலகம் அமைந்திருந்த அதே பேட்டையில் தான் அவருக்கு வீடு. என்றாலும் வயதுக் கால்த்தில் பழக்கமில்லாத விதமாக ஓட நேர்ந்ததில் அவருக்கு ஒரேயடியாக வியர்த்துக் கொட்டி, இறைக்கவும் செய்தது. அதையொன்றும் பொருட்படுத்தாமல் அவர் விரைந்தார். பாங்கியை நெருங்கிய போது யாரோ ஒருவன் சுவர் ஏறிக் குதித்து வெளியேறுவது போல் நிழலாகத் தெரிந்தது. "யார் அது?" என்று அதட்டினார். பதில் இல்லை. ஓடிப் போய்ப் பார்த்தார். பாங்கியின் இரும்பு அறை திறந்து கிடந்தது. பணப்பெட்டி காலியாக இருந்தது. நெஞ்சம் பதறித் துடிக்க அவர் வாசலுக்கு வந்தார். வாட்ச் மேன் அடிபட்டு மயங்கி விழுந்திருப்பதைப் பார்த்தார். 'திபுதிபு' வென்று யாரோ ஓடும் சத்தம் கேட்டது. இவர் கூடவே, "திருடன்! திருடன்! பிடி, பிடி!" என்று கத்திக்கொண்டு ஓசை கேட்ட பக்கமாகச் சாலையில் விரைந்தார்.
உமாகாந்தன் வீட்டை விட்டு வெளியேறும் போது அவன் தாயார் அவனைத் தனியே சந்தித்து அழுதாள். "அப்பாதான் கோபத்தில் ஏதாவது சொல்கிறார் என்றால் நீயும் உடனே பந்த பாசங்களை அறுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவதா?" என்று புலம்பினான். உமா காந்தன் பிடிவாதமாக இருந்தான். கடைசியில் அவள் அவனிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டாள். அன்றிரவு அவன் அப்பாவும் அண்ணாவும் தூங்கிய பிறகு அவர்களுக்குத் தெரியாமல் அவன் வீடு திரும்ப வேண்டும்; அவள் கையால் இன்னும் ஒருவேளை சாப்பாடாவது சாப்பிட வேண்டும்; அப்புறம் அவளிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போக வேண்டும். உமாகாந்தன் மனம் இளகி இதற்குச் சம்மதித்தான்.
தாயாருக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அவன் வீட்டுக்குத் திரும் பியபோது தன் தகப்பனார் வீட்டை விட்டு எங்கோ தலைதெறிக்க ஓடுவதைப் பார்த்தான். அவரைப் பின்தொடர்ந்து அவர் அறியாமல் சென்றான். அவரும் அப்போதிருந்த பரபரப்பில் திரும்பிப் பார்க்கவே தோன்றாமல் ஓடிக் கொண்டிருந்தார். அவர் பாங்கை நெருங்கியபோது உமாகாந்தன் சற்றுத் தயங்கி ஒரு மரத்தின் பின்னால் மறைந்து கொண்டான்.
அவனுக்கு அவர் போக்கு விசித்திரமாகப்பட்டது. சீக்கிரமே புதிருக்கு விடையும் கிடைத்தது. பாங்கின் உள்ளே யிருந்து ஒரு பெரிய தோல் பையுடன் மதில் ஏறிக் குதித்து வெளிப்பட்ட ஒருவன் எதிர்த் திசையில் ஓட ஆரம்பிப்பதைப் பார்த்தான் உமா காந்தன். கருணாகரனோ "யாரது!" என்று அதட்டினாரே யொழிய அவனைத் தொடராமல் பாங்கின் உள்ளே சென்றார், கவலையோடு. களவு போயிருக்கிறதா என்று பார்ப்பதே முதல் காரியமாக எண்ணினார் போலும். ஆனால் உமாகாந்தன் அந்தத் திருடனை விட வில்லை. பின் துரத்தினான். ஒரு சில வினாடிகளில் திருட்டுப் போனதைப் புரிந்து கொண்டு, வெளியே வந்த கருணாகரனும் உமாகாந்தனைப் பின் தொடர்ந்து ஓடி வந்தார்.
"திருடன்! திருடன்!" என்று அவர் போட்ட கூச்சல் ஒரு பீட் கான்ஸ்டேபிள் காதில் விழுந்தது. அவன் விசிலை ஊதிக் கொண்டு கருணாகரனையும் முந்திக்கொண்டு ஓடினான்.
உமாகாந்தனுக்கு, பின்னால் தன் தகப்பனாரும் போலீஸ்காரரும் துரத்தி வருவது புரிந்தது. தன்னையே திருடன் என்று நினைத்து விடுவார்களோ என்று உள்ளூற அவனுக்குப் பயம். இருந்தாலும் உண்மைத் திருடனைவிடக் கூடாது என்று வேகத்தை அதிகரித்தான். கடைசியில் ஒரு தாவுத் தாவித் திருடனைப் பிடித்தே விட்டான். தெரு விளக்கின் மங்கலான ஒளி அவன் மீது விழுந்தது. கோவர்த்தனன்!
"தம்பி! என்னைக் காப்பாற்று! இது வெளியே தெரிந்தால் என் வாழ்க்கை பாழாவது மட்டுமல்ல; நம் தந்தையின் இதயம் உடைந்து விடும்" என்றான் தமையன்.
உமாகாந்தனுக்கு ஒன்றும் வழி தோன்றவில்லை. பேசாமல் பணம் அடங்கிய தோல் பையையும் பாங்குச் சாவிகளையும் தான் வாங்கிக்கொண்டான். "நீ ஓடிப்போ! நான் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறேன்" என்றான். அவன் சென்று மறைந்த திசைக்கு எதிர்த் திசையில் உமாகாந்தன் ஓடத் தொடங்கினான் - அண்ணனைத் தப்புவிப்பதற்காக. ஓரிரு நிமிஷங்களுக்குள் பின் துரத்தி வந்த போலீஸ்காரரின் குண்டாந்தடி பறந்து வந்து அவன் தலையின் பின்புறத்தைத் தாக்கியது. அவன் அப்படியே சுருண்டு விழுந்தான். கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் தம் மகன் உமாகாந்தன் எனக் கண்டார் கருணாகரன். அன்று மாலைதான், 'பாங்கைக் கொள்ளையடிப்பதுதானே?' என்று அவன் கேட்டது அவர் நினைவுக்கு வந்தது. "சீ! உன்னைப் பெற்ற பாபத்தைக் கழுவ ஏழு ஜன்மம் எடுத்தாலும் போதாது!" என்றார்.
தனக்கும் தகப்பனாருக்கும் இடையில் பாங்குக் கொள்ளை பற்றி வாக்குவாதம் நடந்ததும் அதைத் தொடர்ந்து தான் வீட்டை விட்டு வெளியேறியதும்தான் தன் அண்ணன் கோவர்த்தனனுக்கு பாங்கில் திருடத் தைரியம் அளித்திருக்கிறது என்பது உமாகாந்தனுக்குப் புரிந்தது. பாங்கு கொள்ளையடிக்கப் பட்டிருப்பது மறுநாள் காலை தெரிய வரும்போது உமாகாந்தன் மீதுதான் இயல்பாகத் தகப்பனாருக்குச் சந்தேகம் எழும் என்று கோவர்த்தனன் எண்ணியிருக்கிறான். ஆனால் கோவர்த்தனன் போட்ட திட்டம் திசை மாறிப் போயிற்று. உமா காந்தனை மறுநாள் காலை போலீஸார் தேடிக் கொண்டிருப்பதற்குப் பதில் அன்றிரவே கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டான். கோவர்த்தனன் பற்றி உமாகாந்தன் வாய் திறக்கவில்லை. தன்னையே குற்றவாளியக்கிக் கொண்டான். ஆறு வருஷங்கள் தண்டனை கிடைத்தது.

