யாரை நம்புவது?
தண்மதி விரித்த வெள்ளி நிலவு. இரவுக் கன்னிக்கு இதமளிக்கவென்று வீசிய தென்றல் காற்று. மொட்டை மாடியில் உமாகாந்தனும் பவானியும் அவள் மாமா குணசேகரனும் விச்ராந்தியாக அமர்ந்திருந்தார்கள். பவானி ரொம்ப உற்சாகமாக இருந்தாள். உமாகாந்த் இவ்வளவு சீக்கிரம் எழுந்து நடமாட ஆரம்பிப்பான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. டாக்டர் கொடுத்த நல்ல மருந்து உமாகாந்தின் இயற்கையான திடகாத்திரமான தேக வாகு, பவானியின் பணிவிடை எல்லாம் சேர்ந்து அவனைத் துரிதமாக உடல்தேற வைத்தன. முகம் மட்டும் சற்றே வெளிறியிருந்தாலும் அவன் வதனத்தில் அவள் முன்பு பார்த்துத் தன் மனத்தைப் பறி கொடுத்திருந்த ஜீவ களை திரும்பியிருந்தது.
"பவானி! ஏதாவது பாடேன்" என்றார் மாமா குணசேகரன். அப்படி ஓர் அழைப்புக்காகவே காத்திருந்தவள் போல் உடனே மகிழ்ச்சியோடு பாட ஆரம்பித்தாள் பவானி.
அந்தத் தோட்டத்தில் ஒரு மாமரத்தில் வாசம் புரிந்த குயில் ஏற்கனவே பகலெனக் காய்ந்த வெண்மதியால் குழப்பம் அடைந்திருந்தது. இப்போது பவானியின் இனிய சாரீரம் ஒலிக்கவே, தன் இனத்தைச் சேர்ந்த சகாக்கள் விடிந்து கூவுவதாக எண்ணி அதுவும் பதிலுக்கு குரலெடுத்துப் பாட ஆரம்பித்தது.
பாட்டு முடிந்ததும் உமாகாந்தன் நெடுமூச் செறிந்தான்.
"களைப்பாக இருக்கிறதா? பால் கொண்டு வருகிறேன். சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்ளலாமே" என்றாள் பவானி.
"இருந்த கொஞ்சநஞ்ச சோர்வையும் உன் பாட்டு போக்கிவிட்டது பவானி. ஆனால் இன்னும் எத்தனை நாட்கள் இந்த ஆனந்த வாழ்க்கை எனக்குக் கிட்டப் போகிறது என்று எண்ணியபோது தான் ஏக்கத்தில் பெருமூச்சு பிறந்தது. என் உடம்பு குணமாகிவிட்டது. பவானி, உன்னிடமும் உன் மாமாவிடமும் நான் விடைபெற வேண்டிய தருணம் வந்து விட்டது!"
"இது என்ன அசட்டுத்தனம்?" என்று சற்றுக் கோபமாகக் கேட்டாள் பவானி.
"நான் இங்கே தொடர்ந்து இருப்பதுதான் அசட்டுத்தனம்" என்றான் உமாகாந்த். "உங்களை ஆபத்துக்குள்ளாக்க நான் விரும்பவில்லை. என்னை ஸி.ஐ.டி.கள் பின் தொடர்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் அளிப்பது தவறு என்பது எனக்குத் தெரியும்.
"சட்டத்தின் உடும்புப் பிடியிலிருந்து ஒருவனை எப்படி மீட்பது என்று பவானிக்குத் தெரியும்" என்றார் குணசேகரன். உமாகாந்த் இதைக் கேட்டுச் சிரித்துவிட்டான். பவானி அந்தச் சிரிப்பில் மகிழ்ந்து புன்னகை புரிந்தாள். பால் நிலவின் வெண் முத்துக்கள் பிரகாசித்தன.
"குணசேகரன் ஸார்! உங்கள் மருமகளின் ஆற்றலை நான் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணாதீர்கள். ஆனால் என்னைக் காப்பாற்ற பவானியின் சட்ட ஞானம்கூடப் போதாது. அவளை ஓர் இக்கட்டான நிலையில் வைக்க நான் விரும்பவில்லை. எனக்கு நீங்கள் உதவியதற்கெல்லாம் நன்றி கூறிவிட்டு என் வழியே போக வேண்டியவன்தான் நான். ஆனால் அதற்கு முன்பாக என்னைப் பற்றிப் பவானி மனத்தில் ஏதும் தப்பபிப்பிராயங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை நீக்கிவிட மட்டும் விரும்புகிறேன்.
"ஆமாம், தப்பபிப்பிராயம் ஏற்பட்டுத்தான் இருக்கிறது" என்றாள் பவானி. "தண்டனைக் காலம் முடியும் முன்னர் உங்களை யார் தப்பித்துக் கொண்டு வரச் சொன்னது? இன்னும் இரண்டு வருஷங்கள் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாதா? ஆக்கப் பொறுத்தவருக்கு ஆறப் பொறுக்கவில்லையே? சிறை புகத் தயங்காத தேச பக்தத் தியாகிக்கு முழுத் தண்டனைக் காலத்தையும் அனுபவிக்கும் நெஞ்சுரம் வேண்டாமா?"
"தேச பக்தனாகச் சிறை சென்றிருந்தால் அந்த நெஞ்சுரம் எனக்கு நிச்சயம் இருந்திருக்கும் பவானி!"
"அப்படியானால் உங்கள் தகப்பனார் என்னிடம் கூறியதெல்லாம் பொய்தானா?" திகைப்பும் வியப்புமாகக் கேட்டாள் பவானி.
"பவானி! நான் பாங்கில் கொள்ளை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பெற்றுச் சிறை சென்றேன். ஆனால் சந்தர்ப்பக் கோளாறினால் சில சமயம் குற்றமற்றவரும் சிறைபுக நேர்வதுண்டு என்பது வக்கீலாகிய உனக்குத் தெரியுமே!"
"எனக்கு ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. நீங்கள் சிறை புகக் காரணம் எதுவானாலும் சரி. அதனால் என் காதல் மாறப் போவதில்லை என்பதுதான் அது."
உமாகாந்தனின் மேனி சிலிர்த்தது. "குணசேகரன் ஸார்! என்னைப் போன்ற பாக்கியசாலி இந்த உலகில் வேறு யார் உண்டு?" என்றான்.
"எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது" என்றார் குணசேகரன். "உன் அப்பா இவளிடம் ஒன்றைச் சொல்ல, இப்போது நீ வேறு ஒரு கதை கூறப் போகிறாயா?"
"ஆமாம், ஸார்! கதை சொல்லத்தான் போகிறேன். கேட்டுவிட்டு எதை நம்புவது என்று நீங்களே தீர்மானிக்க வேண்டியதுதான். என்னிடம் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க எந்தச் சாட்சியமும் இல்லை" என்றான் உமாகாந்தன். (தொடரும்)

