வேதனையில் ஒரு வாலிபன்.
மறுநாள் காலை தீப்பெட்டியில் பாக்கியிருந்த நாலு குச்சிகளை கமலா யாரும் அறியாமல் குப்பையில் போட்டுவிட்டு, நெருப்புப் பெட்டி வாங்கி வருவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டாள். "விசுவை அனுப்பேன்" என்றாள் காமாட்சி. "வீட்டில் தலைக்கு மேல் காரியம் இருக்கே."
"எனக்கு ஹோம் ஒர்க் இருக்கு" என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தான் விசு.
"சமர்த்து" என்று தனக்குள் அவளை வாழ்த்தினாள் கமலா. கண்ணாடியில் தன் அழகை இன்னொரு தடவை பார்த்துக்கொண்டாள். சாகும்போது பிரமாதமாகத் தன்னை அலங்காரம் பண்ணிக்கொண்டு இறக்க வேண்டும் என்று அவள் இரவெல்லாம் யோசனை செய்து தீர்மானித்துருந்தாள். எனவேதான் இன்று காலை குளித்துவிட்டுத் தனக்குச் சமீபத்தில் வாங்கப்பட்ட புதிய புடவைகளுள் அதிக ஆடம்பரம் இல்லாத ஒன்றைப் பார்த்து உடுத்திக் கொண்டாள். வழக்கத்தைவிட அதிகமாகவே இரண்டாவது முறையாகப் பவுடரைப் போட்டுக்கொண்டு அப்புறம் விகாரமாகிவிட்டது என்று துண்டால் ஒற்றி எடுத்தாள். குங்குமம் 'பளிச்'சென்று நெற்றியில் இலங்கியது. மை தீட்டிய விழிகள் மானின் பார்வையை வென்றன. செண்ட் மணம் கமகமத்தது!
இரவு படுத்திருக்கும்போது ஒரு தீர்மானத்துக்கு வரத்தான் தாமதமாயிற்று. தீர்மானத்துக்கு வந்த பிறகு அவள் அமைதியாக உறங்கினாள். இப்போது உற்சாகமாகக் கிளம்பினாள். அவள் நடையிலே எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறப் போகிற உல்லாசத் துள்ளல் இருந்தது. இந்த உலகை, அதன் அழகுகளை முதல் தடவையாகப் பார்ப்பவள் போல் அகன்று விரிந்த கண்களால் நோக்கி ரசித்தாள். சூரியோதயம், பட்சிகளின் கானம், சற்றுத் தூரத்தில் தெரிந்த மலைகள், அவற்றின் பசுமை, மலை முகடுகளில் சிரமப் பரிகாரம் செய்ய அமரும் மேகக் குவியல்கள் எல்லாவற்றையும் 'இதுதான் கடைசித் தடவை' என்று எண்ணியபடியே பார்த்தாள். கூடவே, மனத் திரையில் கல்யாணத்தின் சுந்தரமான வதனம் தெரிந்தது. அதனையும் உள்ளத்தின் கள்ளத்தால் அள்ளி விழுங்குபவளாகப் பார்த்தாள். "போய் வருகிறேன்" என்று அவனிடம் விடைபெற்றுக் கொண்டாள்.
மலைப் பாதையில் சற்றுத் தூரம் ஏறிய பஸ், ஒரு குக்கிராமத்தில் நின்றது. அங்கேதான் வழக்கமாகக் கமலா இறங்கிக் கொள்வாள். அங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் அவளும் பவானியும் அடிக்கடி சந்திக்கும் இரகசிய இடமான அந்த மொட்டைப் பாறையை அடையலாம். அந்த இடத்திலிருந்து அவள் தொலைவில் தெரிந்த ராமப்பட்டண வீதிகளையும் பெட்டி பெட்டியான வீடுகளையும் நோக்கினாள். அதோ, கல்யாணத்தின் வீடு அதுதானா? அல்லது இதுவா? இப்பால் பெரிய ஏரி தகதகத்துக் கொண்டிருந்தது. அருகே அவள் எத்தனையோ தடவை ரசித்து மகிழ்ந்திருந்த சரக்கொன்றை மரம். இந்தப் பக்கம் மொட்டைப் பாறையில் அவள் ஆசையோடு செதுக்கிய வார்த்தைகள்: "கமலாவின் கல்யாணம்!" அவற்றை அவள் ஒருமுறை தடவிக் கொடுத்துவிட்டுப் பாறை மீது ஏறினாள். 'பகவானே, இரண்டு முறை உயிரை விட முயன்ற என்னைக் காப்பாற்றி அருளினாய். இந்தத் தடவை அப்படி ஏதும் செய்துவிடாதே! முதல் தடவை கல்யாணத்தையும் இரண்டாவது முறை பவானியையும் அனுப்பி என்னை மரணத்தின் வாயிலிருந்து காத்தது போல் இப்போதும் யாரையாவது அனுப்பிவிடாதே! இன்று எனக்குத்தான் வெற்றி கிட்ட வேண்டும்!' இப்படி எண்ணியவாறு கமலா பாறையிலிருந்து பாய்வதற்குத் தயாரானாள். கல்யாணத்தின் உருவம் மனமெல்லாம் நிறைந்திருக்க அதனை அகக் கண்ணால் பார்த்தபடியே குதிக்கத் தீர்மானித்தாள்.
அந்தச் சமயம் அவள் காதுகளில் அந்த முனகல் சத்தம் கேட்டது. "ஹூம், ஹூம்" என்று தாங்க முடியாத வேதனையை வெளிப்படுத்தும் முனகல் ஒலி.
கமலா பரபரப்புடன் இப்படியும் அப்படியும் பார்த்தாள். பிறகு பாறையிலிருந்து கீழே இறங்கிச் சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்தாள்.
அங்கே மற்றொரு சிறிய பாறைக்குப் பின்னால் அவள் கண்ட காட்சி அவளைத் திகைக்க வைத்தது!
கதர் ஜிப்பாவும் பைஜாமாவும் அணிந்த ஒரு வாலிபன் அங்கே ஒரு கல்லின் மீது தலை வைத்துக்கண்களை மூடி முனகிக் கொண்டிருந்தான். அவன் வ்லது தோளில் இரத்தம் கசிந்தும் உறைந்தும் ஜிப்பா சிவந்து காணப்பட்டது. அதோடு கடுமையான் ஜுரமும் அவனுக்கு இருப்பதாகத் தோன்றியது. கமலா தயங்கி அவன் நெற்றியில் உள்ளங்கையை வைத்துப் பார்த்தாள். அனலாகச் சுட்டது.
கமலாவின் உள்ளத்தில் பச்சாத்தாபம் பெருகியது,பயமாகவும் இருந்தது. சுந்தரமான களையான முகம் இப்படி வாடி விட்டதே' என்று எண்ணி இறங்கினாள். காயத்திலிருந்து ரத்தம் பெருகி ஜிப்பா நனைந்திருப்பதைப் பார்த்துக் கலக்கம் அடைந்தாள்.
கமலாவின் கரம் நெற்றியைத் தொட்டு வருடியதும் அந்த வாலிபனின் கண்கள் மிகுந்த பிரயாசைப்பட்டு மெல்ல மெல்லத் திறந்தன.
(தொடரும்)

