தப்பியோடிய கைதி.

'நமக்குத் துன்பம் நேரும்போதெல்லம் நம்மைவிட அதிகத் துயரத்தில் ஆழ்ந்திருப்போரைப் பற்றிச் சில கணங்கள் நினைத்துப் பார்த்தால் போதும், நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பது உடனே புரியும். இவ்விதம் எண்ணாமல் நமது துயரம்தான் உலகிலேயே மிகப் பெரிது என்பதாகக் கருதிக் கொண்டு அதைப் பொறுக்கவோ சகிக்கவோ திராணியின்றி உயிரை மாய்த்துக் கொள்ள முற்படுவது எவ்வளவு அபத்தம்?' - வேதனையுடன் முனகிக் கொண்டிருந்த அந்த வாலிபனைப் பார்த்ததும் இவ்வாறு நினைத்தாள் கமலா.

அவன் அருகில் அமர்ந்து. "நீ யார்? எப்படி இவ்வளவு பலமான காயம் பட்டது உனக்கு? ஒரு டாக்டரைத் தேடிப் போகாமல் ஏன் இங்கே முனகியபடி படுத்திருக்கிறாய்?" என்றெல்லாம் வினவினாள்.

"நீ யார்? அதை முதலில் சொல்லு" என்றான் அந்த வாலிபன் ஈனசுவரத்தில். "உன்னை நான் நம்பலாமா என்பது முதலில் எனக்குத் தெரிய வேண்டும்."

"பேஷாக நம்பலாம். ஏனென்றால் நானும் உன்னைப் போல் மரணத்தின் வாயிலில் நிற்பவள்தான். அதோ அந்த மொட்டைப் பாறையிலிருந்து பள்ளத்தாக்கில் குதிக்கவிருந்த என்னை உன்னுடைய முனகல் சத்தம் தான் தடுத்து நிறுத்தியது!"

எதுற்காக அப்படி ஒரு கோரமான முடிவைத் தேடிக்கொள்ள எண்ணினாய், பெண்ணே?"

"எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது!"

அவன் வேதனையையும் மறந்து புன்னகை புரிந்தான். "வாழ்க்கையில் வெறுப்பா? அப்படி என்ன பெரிதாகத் துன்பம் அனுபவித்துவிட்டாய் நீ? இதோ, என்னைப் பார்! நாலு வருஷங்கள் சிறைக் கைதியாகப் படாத பாடுபட்டேன். சுதந்திர ஆர்வத்தால் தப்பிக்கொண்டும் வந்தேன். சதா ஸி. ஐ. டி. களால் பின் தொடரப்பட்டு ஓடுகிறேன். இதைவிட உன் துன்பங்கள் பெரிதா? என் தோளில் ஒரு ஸி.ஐ.டி.யின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அடிபட்டு ரத்தமிழந்து தவிக்கும் போதும்கூட எனக்கு உயிரின் மேல் ஆசை விடவில்லையே!"

"நீ என்ன திருடனா? எதற்குச் சிறை சென்றாய்? ஏன் தப்பித்து ஓடி வந்தாய்?"

"பெண்ணே, அதெல்லாம் பெரிய கதை. கூற எனக்குச் சக்தியில்லை."

"வேண்டாம், வேண்டாம்! நீ பேசவே வேண்டாம்!" என்று பயந்து பதறினாள் கமலா.

"பெண்ணே, பிறருக்கு உபகாரம் பண்ணக் கற்றுக் கொள். வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாம் மறைந்து இதயத்தில் மகிழ்ச்சி நிரம்ப அதுதான் வழி!"

"சரி, அப்படியே செய்கிறேன். உன்னால் நான் அடைந்த விவேகத்தை முதலில் உனக்கே பயன்படுத்துகிறேன். உனக்கு உதவ ஓடிப் போய் ஒரு டாக்டரை அழைத்து வருகிறேன்."

அவன் முகத்தில் கலவரம் தோன்றியது. "கூடவே கூடாது! டாக்டர் வந்து என்னைப் பரிசோதித்தால் முதலில் போலீசுக்குத்தான் தகவல் தெரிவிப்பார்."

"பின்னே, டாக்டரை அழைக்காமல் இருந்துவிட்டால் நீ சாகத்தான் போகிறாய். எம தூதர்களா, அல்லது போலீஸா? இருவரில் யார் தேவலாம் என்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும். உனக்குத்தான் இது விஷயங்களில் அனுபவம் அதிகமாயிருக்கிறது!"

"பெண்ணே வலி, என் தோளைக் கடப்பாறையால் தாக்குவது போல் வேதனை தரவில்லையானால் நான் உன் பேச்சை ரசித்துச் சிரிப்பேன்."

"நான் பேசவும் வேண்டாம்; நீ ரசிக்கவும் வேண்டாம்! நான் என்ன செய்யட்டும்? உனக்கு எப்படி உதவட்டும்? அதைச் சொன்னால் போதும்."

"என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாயல்லவா?"

"சத்தியமாகத் துரோகம் பண்ண மாட்டேன். தெய்வமே, நம் இருவரையும் இங்கே ஒரே சமயத்தில் ஒருவருக்குக்கு ஒருவர் உதவ அனுப்பியதாய் எண்ணுகிறேன். இல்லாத போனால் அத்தனை நேரம் நினைவிழந்து கிடந்த நீ, நான் பாறையிலிருந்து விழப்போன தருணத்தில் மயக்கம் தெளிந்து முனகி என் கவனத்தைக் கவருவானேன்? சொல்லு! நான் என்ன செய்யட்டும்?"

"பெண்ணே! நீ எந்த ஊரைச் சேர்ந்தவள்? ராமப்பட்டணமா?"

"அங்கேதான் இப்போது குடியிருக்கிறோம்."

"அந்த ஊரில் பவானி என்று ஒரு பெண் வக்கீல் இருக்கிறாளாமே, தெரியுமா?"

கமலா அளவிடமுடியாத ஆச்சரியத்துடன், " ஆமாம், நன்றாகத் தெரியுமே, பவானி அக்காவை!" என்றாள்.

"அக்கா என்று அழைக்கும் அளவு சிநேகமா?" என்று கேட்ட அந்த வாலிபனின் முகம் மலர்ந்தது. இந்தப் பெண் தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்ற உறுதியும் பிறந்தது.

"அவளிடம் போய் உனக்கு உமாகாந்தனை நினைவிருக்கிறதா?" என்று கேள். 'நினைவிருக்கிறது ' என்று அவள் சொன்னால் , 'அவன் ஒரு நிமிஷம் உன்னைப் பார்க்க விரும்புகிறான்' என்று கூறி இங்கே அழைத்து வா. ஆனால் யாருக்கும் தெரியவே கூடாது விஷயம்!"

"பவானி உனக்கு உறவா?"

"இதுவரை இல்லை" என்று சோகப் புன்னகை புரிந்தான் உமாகாந்தன். "சிநேகம்தான். நாங்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவள் உன்னுடன் இங்கே வரவில்லை என்றால் என்னைப் பார்க்க அவளுக்கு விருப்பம் இல்லை என்று புரிந்து கொண்டு என் வழியே போவேன்" என்று கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.

"ஒரு வழியும் போக வேண்டாம். இங்கேயே இரு. அக்காவைக் கண்டிப்பாக அழைத்து வருகிறேன்."

"பவானியை வற்புறுத்த வேண்டாம், நீ" என்றான் உமாகாந்தன். "என்ன இருந்தாலும் நான் சிறைவாசம் செய்தவன் அல்லவா?" என்ற போது அவன் விழிகளில் அத்தனை உடல் வேதனையிலும் தோன்றாத கண்ணீர் தளும்பி நினறது.

"இல்லை, இல்லை! பவானி அக்கா அப்படி ஒரு நாளும் நினைக்கவேமாட்டாள். இந்தப் பக்கம் தப்பி ஓடிய கைதி ஒருவன் வளைய வருவதகாவும் ஸி. ஐ. டி. கள் அவனைத் தேடுவதாகவும் கேள்விப்பட்டு அக்காவே என்னிடம் கூறியிருக்கிறாள். அது மட்டுமில்லை; ஒரு வேளை அக்கைதியை நான் காண நேர்ந்தால் உடனே தன்னிடம் வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், வக்கீல் என்ற முறையில் தன்னால் இயன்ற உதவியைச் செய்வதாகவும் சொன்னாள். அதனால் நான் போய்ச் சொன்னவுடனே அவள் ஓடோடி வருவாள். ஆனால் ஒன்று வக்கீல் என்ற முறையில் மட்டும் அவள் உனக்கு உதவப் போவதாக நான் கருதவில்லை. இன்னுயிர்க் காதலி என்ற உரிமையோடும் உதவப் போகிறதாக எண்ணுகிறேன். என்ன நான் சொல்வது சரிதானா?"

உமாகாந்தன் பலவீனமாகப் புன்னகை புரிந்து கண் சிமிட்டினான். பிறகு பேசவும் சக்தி இழந்தவனாய் இமைகளை மூடிக் கொண்டான்.

கமலா அவன் அருகே குனிந்து, "கொஞ்சம் தாமதமானாலும் கவலைப் படாதே. தைரியமாக இரு!" என்று கூறிவிட்டு மலைப்பாதையை நாலே எட்டில் அடைந்து ஓட்டமும் நடையுமாகக் கீழே இறங்க ஆரம்பித்தாள். பஸ் வரத் தாமதமானால் வேறு யாராவது காரிலோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ அந்தப் பக்கமாக வர மாட்டார்களா? ராமப்பட்டணம் வரை தன்னை ஏற்றிக் கொண்டு போக மாட்டார்களா?" என்று ஏங்கினாள். அதே சமயம் தன் அவசரத்துக்கு அவர்களிடம் என்ன காரணம் கூறுவது என்றும் குழம்பினாள்.

நல்ல வேளையாக அவளை அதிகம் தவிக்க விடாமல் பஸ் ஒன்று இறக்கத்தில் வந்தது. அதிர்ஷ்ட வசமாக அதில் இடமிருந்து அவள் ஏறிக் கொள்ளவும் முடிந்தது.