திருமண அழைப்பிதழ்
வாசலில் விளக்கு ஏற்றிவிட்டு வந்த கமலா வெகு உற்சாகமாகச் சமையல் காரியங்களில் ஈடுபட்டாள். அடுப்பு மூட்டத் தான் கடைசியாக எழுதிய கடிதத்தையும் அதற்கு முன்பாக அரைகுறையாக எழுதிக் கிழித்துப் போட்ட கடிதங்களையும் பயன்படுத்திக் கொண்டாள்.
புகையில் கண்ணைக் கரித்தபோது 'சனியன்' என்று வையவில்லை. 'பெண்ணாய்ப் பிறந்தேனே' என்று அலுத்துக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, 'இன்னும் கொஞ்ச நாட்கள்தான் அடுப்பு ஊதுகிற வாழ்க்கை' என்று எண்ணிக் கொண்டாள். ரங்கநாதமுதலியார் பங்களாவில் பட்டுப் புடவை சரசரக்க இடுப்பில் சாவிக் கொத்து கலகலக்கத் தான் வளைய வருவதைக் கற்பனை செய்து கொண்டாள். சாதம் வெந்து இறங்குவதற்குள் கமலா மெட்ரிக் எழுதித் தேறிவிட்டாள். சாம்பார் கொதி வந்து இறங்குவதற்கு முன் அவள் பட்டணத்தில் ஜாகை வைத்துக் கல்லூரியில் சேர்ந்து எஃப். ஏ. படித்து முடித்தாகிவிட்டது. தயிர் கடைந்து முடிப்பதற்குள் அவள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டமும் பெற்று விட்டாள். அப்பா, அம்மா, விசுவுக்குச் சாப்பிடத் தயாராகத் தட்டு போட்டு தண்ணீர் எடுத்து வைப்ப தற்குள் மேநாடுகளுக்குப் போய் எம். டி. பட்டமும் பெற்றுத் திரும்பி விட்டாள். கடைசியாக அப்பளாம் சுட்டுக் கொண்டிருந்தபோது அவளுக்காக ராமப்பட்டணத்தில் பெரிய ஆஸ்பத்திரி உருவாகிவிட்டது! அதில் அவள் மிடுக்குக் குறையாத பரிவுடன் வளைய வந்து நற்பணியாற்றும் நேர்த்தியைக் கண்டு பவானி பிரமித்துப் போனாள். கல்யாணம் ஆனந்தக் கண்ணீர் தளும்ப நின்றான்.
குமட்டித் தணலில் கையைச் சுட்டுவிட்டது. கமலா உதறிக் கொண்டே நிமிர்ந்தபோது வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கருகிய அப்பளம் காமாட்சி அம்மாள் கண்ணில் படாதவாறு அடுப்புக்குப் பின்னால் ஒளித்து வைத்துவிட்டு, சூடு பட்ட விரலை உதடுகளுக்கிடையில் வைத்துச் சப்பிக் கொண்டே ஓட்டமும் நடையுமாகச் சென்று கதவைத் திறந்தாள்.
விசுப் பயல் புதுச் சட்டை, டிராயர் அணிந்த கோலத்தில் முதலில் உள்ளே நுழைந்தான். "என்னடா, இது, ஜவுளிக் கடையிலேயே டிரஸ் பண்ணிக் கொண்டாயா?" என்று கமலா புன்னகையுடன் கேட்டாள்.
பெரிய பெரிய பொட்டலங்களுடன் உள்ளே நுழைந்த காமாட்சி அம்மாள், "அளவு பார்க்கிறேன்னு பழைய துணிக்கு மேலேயே போட்டுக் கொண்டான். அப்புறம் கழற்ற மனசு வரலை. குழந்தைதானே?" என்றாள்.
மாசிலாமணி குதிரை வண்டிக்குக் கூலி கொடுத்துவிட்டுப் படியேறி வந்தார்.
"ஏண்டா, அக்காவுடைய கல்யாணத்துக்கு போட்டுக்க டிரஸ் வாங்கிவிட்டு இப்பவே அழுக்கா அடிக்கலாமா?" என்றாள் கமலா.
"சேச்சே! இதுவா கல்யாண டிரஸ்? அதற்கு ஸூட் தைக்கக் கொடுத்திருக்கு. இது சும்மா பள்ளிக்கூடத்துக்குப் போட்டுக் கொண்டு போகத்தான்" என்றான் விசு.
"கடைத் தெருவையே உன் அம்மா விலைக்கு வாங்கியாச்சு" என்றார் மாசிலாமணீ.
காமாட்சி அம்மாள் கூடத்தின் மையத்தில் அமர்ந்து துணி மூட்டையை அவிழ்த்துத் தன் பட்டுப் புடவையை எடுத்து நெஞ்சோடு வைத்துக் கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டாள்.
"இந்த மாதிரி அழகு பார்க்க உள்ளங்கை அகலக் கண்ணாடி போதாது. ஆளுயர நிலைக் கண்ணாடி தேவை" என்றார் மாசிலாமணி.
"அதுக்கென்ன. மாப்பிள்ளை வீட்டில் இல்லாத கண்ணாடிகளா?"
அவிழ்ந்த மூட்டையில் கூரைப் புடவை தெரிந்தது. பக்கத்தில் ஒரு சிறு நகைக் கடைப் பெட்டியும் இருந்தது. தாலியாகத்தான் இருக்கும். தனது அர்த்தமுள்ள எதிர்காலத்தின் அழகுமிக்க சின்னங்கள் என எண்ணினாள் கமலா.
"கமலா! உட்கார்ந்து பாரேன். உனக்குப் பிடிச்சிருக்கா என்று" - மாசிலாமணி தூண்டவே கமலா அமர்ந்து புடவையைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். "ரொம்ப பிடிச்சிருக்கு அப்பா. அம்மா தேர்ந்தெடுத்தால் குறை இருக்குமா என்ன?"
அவள் குரலில் தொனித்த திருப்தி மாசிலா மணியைத் துணுக்குற வைத்தது. 'இது என்ன, இந்தப் பெண் சிறுமியாக இருந்த போது கல்யாண விளையாட்டு விளையாடினாளே, அதுதான் இதுவும் என்று நினைக்கிறாளா? அல்லது காணாததைக் கண்ட மகிழ்ச்சியில் பேசுகிறாளா?'
"வீட்டுக்காரர் வந்துவிட்டுப் போனார், அப்பா!"
"படிப்புத்தான் வரலையே தவிர கமலா கெட்டிக்காரிதான். 'வீட்டுக்காரர்' என்று இரண்டு அர்த்தம் தொனிக்கப் பேசுகிறாள் பாருங்க" என்றாள் காமாட்சி.
"கல்யாண அழைப்பிதழ்களை அச்சடித்து விட்டாராம். கொண்டு வந்து கொடுக்க வந்தாராம். நீங்கள் இல்லாததால் என்னிடம் தந்து விட்டுப் போனார். - சொல்லிக்கொண்டே கட்டோடு அவற்றை எடுத்து வந்தாள் கமலா. "அளவாகத்தான் அச்சடித்தாராம். அதுவும் இந்த ஊரில் இல்லை. மெட்ராஸுக்கு எழுதி அச்சடித்துத் தபாலில் அனுப்பச் சொல்லியிருக்கிறார். இந்த ஊரில் யாருக்கும் அழைப்பிதழ் தர வேண்டாம் என்று சொல்லச் சொன்னார். வெளியூரில் இருக்கிற நெருங்கிய உறவுக்காரர்களுக்கும் முக்கிய நண்பர்களுக்கும் மட்டும் அனுப்பச் சொன்னார். இல்லாத போனால் ஊர் வம்பை விலைக்கு வாங்கியதாகும் என்றார்."
"ரொம்ப சரி, யாரைத் தெரியும் நமக்கு இந்த ஊரிலே? எஞ்சி மிஞ்சிப் போனால் அந்த ராங்கிக்காரி பவானி; அவளைவிட்டால் அந்தப் பிள்ளையாண்டான் கல்யாணம். இவர்களுக்குத் தெரிவிக்கலைன்னா என்ன குடிமுழுகிப் போயிடும்? டேய், விசு! நாளைக்குப் பள்ளிக் கூடத்தில் போய் என் அக்காவுக்குக் கல்யாணம் என்று டமாரம் அடித்து வைக்காதே! பிச்சு இழுத்துப்பிடுவேன். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் கல்யாணம் நடந்து முடியணும்" என்றாள் காமாட்சி.
இதற்குள் கட்டைப் பிரித்து ஓர் அழைப்பிதழை எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பித்திருந்தார் மாசிலாமணி.
"......திருநீர் மலை க்ஷேத்திரத்தில் நடக்கிறபடியால், தாங்கள் இஷ்டமித்திர பந்துக்களுடன் வந்திருந்து......"
"அப்பா, தேதி என்ன என்று படித்தீர்கள்?" என்று கேட்டான் விசு. "நாடகம் நடக்கிற அதே தேதியா?"
"ஆமாம், அதனால் என்னடா? டிக்கெட்தான் கிழிந்து போய்விட்டதே!"
"அந்த ஓசி டிக்கெட் கிழிந்தால் என்ன? நாலு டிக்கெட் காசு கொடுத்து வாங்கிக்க நமக்குத் தெரியாதாக்கும்" என்றாள் காமாட்சி.
அவள் அப்போது பாக்கிப் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தாள்.
நாடகம் நடக்கும் தினமே நல்ல முகூர்த்த நாளாக அமைந்தது ரொம்ப வசதி என்று ரங்கநாத முதலியார் கருதியிருப்பார் என்பது கமலாவுக்குப் புரிந்தது. ராமப்பட்டணம் ஊரே நாடக அரங்கேற்றம் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கும். இளைஞர்களின் சிந்தனையெல்லாம் அங்கே ஒருமுகப்பட்டிருக்கும் போது இவர்கள் முதல்நாள் திருநீர் மலைக்குக் கிளம்பிச் செல்வதை யாரும் கவனிக்கமாட்டார்கள். வாலிப மிடுக்குடைய சீர்திருத்தவாதிகளின் முட்டுக்கட்டை ஏதுமின்றித் திருமணம் 'ஜாம்ஜாம்' என்று நடந்தேறும்!
"என்னடா, பிரமாத நாடகம்? கமலாவின் கல்யாணம் நடந்து முடியட்டும். தினம் ஒரு நாடகம் அல்லது சினிமா பார்க்கலாம்" என்றாள் காமாட்சி.
"என்ன தான் இருந்தாலும் 'கணையாழியின் கனவு' நாடகம் போல் ஆகுமா அப்பா? இவர் இரண்டாவது முறை நாடகம் போடறாளோ இல்லையோ? கல்யாணம் மாமாவும் பவானி அக்காவும் சேர்ந்து நடிக்கறதை மறுபடியும் பார்க்க முடியுமோ என்னவோ?"
அந்த விநாடியில் கமலாவின் நெஞ்சில் ஒரு வேதனை ஏற்பட்டது. 'தனக்குத் திருமணம் நிச்சயமாகி பிடித்தமான ஓர் எதிர்காலமும் உறுதியான பிறகும் தன் மனம் இவ்வாறு சங்கடப்படக் கூடாது; பவானி அக்காவும் கல்யாணம் மாமாவும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்று தம்பி கூறியதுமே ஒரு துன்பம் இதயத்தை ஊடுருவக் கூடாது; இது தவறு' என்று அவள் நினைத்தாள். ஆயினும் அவள் அறிவு கூறியதை மனம் ஏற்காமல் தொடர்ந்து துயரப்பட்டுக் கொண்டுதான் இருந்தது!
(தொடரும்)

