பவானியின் கட்டளை
தான் கைதியான கதையைக் கூறிவிட்டுக் கடைசியாக உமாகாந்தன் சொன்னான். "பவானி! நீ நம்புகிறாயோ இல்லையோ, நடந்தது இதுதான். தேசபக்தன் என்ற முறையில் ஆயுட் காலத்துக்குச் சிறையிலிருப்பேன்; ஆனால் திருடன் என்ற பட்டத்துடன் செய்யாத குற்றத்துக்குச் சிறை வாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்க என்னால் முடியவில்லை. வேதனை பிடுங்கித் தின்றது. அதனால் கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் தப்பித்துக் கொண்டு வந்தேன். இந்த நாட்டை விட்டு வெளியேறு முன் உன்னை ஒரு தடவை பார்த்து என் கதையைக் கூறிவிட வேண்டும் என்பதுதான் எனக்கு ஒரே ஆசை. அது நிறைவேறி விட்டது. இனி நான் கள்ளத் தோணி ஏறலாம்" என்றான்.
"கள்ளத் தோணியா?' என்று வியப்புக்கு மேல் வியப்படைந்தவளாகக் கேட்டாள் பவானி.
"ஆமாம், பவானி! ரயிலேறிச் சென்று பிறகு கோடிக்கரையை அடைந்துவிட்டால் அங்கிருந்து படகில் இலங்கைக்குப் போய் விடுவேன். அப்புறம் எப்படியாவது மலாய் நாட்டை அடைந்து விடுவேன். அங்கே நேதாஜி சுதந்திரப் படை திரட்டி வருகிறார் அல்லவா? அதில் சேர்ந்து விடுவேன். நான் சிறையிலிருந்து தப்பியதே அந்த நோக்கத்தில்தான்!"
பவானியின் முகம் வெளிறிற்று. தேகம் நடுங்கியது. பதற்றத்துடன், "அழகுதான்! அத்தனை ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உடல் நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?" என்று அதட்டலாகச் சொன்னாள். தவமிருந்து பெற்ற பொக்கிஷம் அது கிடைத்த கணத்திலேயே கைநழுவிப் போய்விடும் போலிருந்தது. அப்படி அதைப் பறி கொடுப்பதா? என்று தவித்தது அவள் உள்ளம்.
"பவானி! உடம்பில் பலம் சேரட்டும் என்று சொல்லிக் கொண்டு இங்கே உட்கார்ந்திருந்தால் மட்டும் ஆபத்து இல்லையா?" என்று கேட்டான் உமாகாந்தன். "உன்னையும் சேர்த்தல்லவா ஆபத்துக்கு உள்ளாக்கிய வனாவேன்! என்னைப் போக விடு, பவானி! அதற்கு முன் மூன்று வரங்களைக் கொடு!"
"நான் தான் என்னையே கொடுத்திருக்கிறேனே?" என்று விம்மினாள் பேதை.
அவள் கரங்களைப் பற்றி விரல்களை வருடினான். "எனக்குத் தெரியாதா அது பவானி? நான் இப்போது சொன்ன கதை உங்கள் இருவருடன் மட்டும் இருக்க வேண்டும். இது முதல் வரம். இரண்டாவது, உன் புகைப்படம் ஒன்று கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும். மூன்றாவது..... மூன்றாவது...."
"மூன்றாவது....?"
"கொஞ்சம் பணம் வேண்டும். நீண்ட தூரப் பயணம் அல்லவா?"
பவானி அழுதுகொண்டே சிரித்தாள்.
"அப்பாடா! இதைக் கேட்க நீங்கள் இவ்வளவு தயங்க வேண்டுமா? அதுவும் என்னிடம்?" என்றாள். தொடர்ந்து, "மூன்று வரங்களை நான் தருகிறேன்; பதிலுக்கு நீங்கள் எனக்கு ஒரே ஒரு வரம் கொடுங்கள்" என்றாள்.
"என்ன பவானி? திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டுப் போலீஸாருக்குப் பயந்து சதா ஓடி ஒளிந்து திரிந்து கொண்டிருக்கும் நான் உனக்கு என்ன வரம் தர முடியும்?"
"நீங்கள் போகும் இடத்துக்கு என்னையும் அழைத்துச் செல்லுங்கள். அதுதான் நான் வேண்டும் வரம். உங்களால் முடியாத காரியமில்லையே?"
"பவானி!" என்று அதுவரையில் மௌனமாக இருந்த அவள் மாமா குணசேகரன் அதட்டினார். "இது என்ன அசட்டுத்தனம்?"
உமாகாந்தனோ தேகமெல்லாம் புல்லரித்துப்போகச் சிலிர்த்துக் கொண்டான்.
"பவானி! நிஜமாகவா சொல்கிறாய்? நான் மேற்கொள்ளப் போகும் பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பது உனக்குத் தெரியாதா? தெரிந்தும் இந்தப் பரதேசியோடு புறப்பட்டு வரத் தயாராக இருக்கிறாயா? உன் காதல் அவ்வளவு ஆழமானதா? எவ்வளவு பாக்கியசாலி நான்!"
"உமாகாந்த்! நீ செய்வது கொஞ்சமும் சரியில்லை. உன் வாழ்க்கையைத்தான் ஏதோ அண்ணனுக்காகவும், தேசத்துக்காகவும் தியாகம் செய்வதாகக் கூறிக்கொண்டு பாழடித்துக் கொண்டாய். பவானியின் வாழ்க்கையையும் குட்டிச்சுவராக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கோபமாகக் கேட்டார் குணசேகரன்.
"மாமா! இது என்ன இப்படிப் பேசுகிறீர்கள்? ஒரு பெண் தன் மனம் விரும்பியவனுடன் இருந்து அவன் வாழ்க்கையின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வது தவறா? அவள் தன் மாமாவின் சொற்படி கேட்டு ஒரு கொள்ளைக்காரனை, தம்பியைக் குற்றவாளி யாக்கிய கோழையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் அவள் வாழ்க்கை குட்டிச்சுவராகாதா?"
"கோவர்த்தனன் அப்படிப்பட்டவர் என்பதற்கு என்ன சாட்சி? இவன் வார்த்தை தானே?"
"நீதிமன்றத்துக்குத்தான் மாமா சாட்சியங்கள் வேண்டும். உள்ளம் என்கிற நியாய ஸ்தலத்துக்கு மனச்சாட்சியே போதும்" என்றாள் பவானி நாத் தழுதழுக்க.
"கோவர்த்தனனை நீ கல்யாணம் செய்து கொள்வதா? அவன் இந்த ஊரில்தான் இருக்கிறானா?" என்று உமாகாந்த் அதிசயத்துடன் கேட்டான்.
"ஆமாம் உமா! நீங்கள் சிறையிலிருந்து விடுதலை பெற்றோ அல்லது தப்பித்துக் கொண்டோ வரும்போது நேரே கல்கத்தா சென்று அங்கு என்னைப் பற்றி விசாரித்து என்னைத் தேடிக் கொண்டு இங்கே தான் வருவீர்கள் என்று அவருக்குத் தெரியும். அதனால் இந்த ஊருக்கு வந்து சதா என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். என்னை எப்படியாவது கல்யாணம் செய்து கொண்டு விட்டால் பிறகு இந்த ஜன்மத்தில் உங்களால் அவருக்கு எந்த ஆபத்தும் நேராது அல்லவா? அந்த நிம்மதியைப் பெறுவதற்காகத் தம்மாலான முயற்சிகளை யெல்லாம் செய்து பார்க்கிறார். நானும் அவர் தாக்குதலுக்கு ஈடு கொடுத்து இதுநாள் வரை தட்டிக் கழித்துக் கொண்டே வந்திருக்கிறேன்.
"உங்களைப் பின் தொடர்ந்து காயப்படுத்திய சி.ஐ.டிக்கள் கூட அவருடன் அடிக்கடி தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களை 'அடிபட்ட புலி' என்று வர்ணித்து உங்களுக்கு அடைக்கலம் கொடுப்பது பெரிய குற்றம் என்று என்னை எச்சரித்து விட்டுப் போனார். அப்போது நீங்கள் தூக்க மருந்து சாப்பிட்டுவிட்டு மாடி அறையில்தான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்."
"நான் இங்கிருப்பது தெரிந்து விட்டதா அவனுக்கு?" கலவரத்துடன் கேட்டான் உமாகாந்தன்.
"இல்லை. ஆனால் நீங்கள் இங்கே என்னைத் தேடி வரலாம்; தஞ்சம் புகலாம் என்று சந்தேகிக்கிறார்."
"பவானி! நான் இனி இங்கே தொடர்ந்து இருப்பது ரொம்ப ஆபத்து. எனக்கு மட்டுமல்ல. உனக்கும் மாமா குணசேகரனுக்கும் கூடத்தான். எனக்கு விடை கொடு! நான் கிளம்புகிறேன்."
"நான் கேட்ட வரம்?"
"வரம் கேட்பவர் தாழ்ந்த நிலையிலும் வரம் கொடுப்பவர் உயர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும் பவானி. இன்று நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தவன்."
இந்தச் சமயத்தில் வாசல் கதவை யாரோ தடதடவென்று தட்டும் சத்தம் கேட்டது. "பவானி, பவானி! குணசேகரன் ஸார்!" என்று கூப்பிடும் குரலும் அடுத்து ஒலித்தது.
"கல்யாணம் அல்லவா வந்திருக்கிறான்! நீங்கள் இங்கேயே பேசிக் கொண்டிருங்கள். நான் கீழே போய் என்ன விஷயம் என்று கேட்டு அவனை அனுப்பி விட்டு வருகிறேன்" என்றார் குணசேகரன்.
"நாம் அதிகாலையில் எழுந்து காரில் புறப் படலாம். இப்போது சீக்கிரம் படுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பவானி உமாகாந்தனைக் கைத்தாங்கலாகப் பற்றிப் படுக்கை அறைக்கு அழைத்துப்போனாள்.
கீழே சென்ற குணசேகரனிடம் "பவானி எங்கே?" என்று வினவினான் கல்யாணம்.
"அவள் மாடியில் படுத்துக் கொண்டு விட்டாள். என்ன விஷயம்?" என்றார் குணசேகரன்.
"ரொம்ப அவசரம்! அவளை நான் உடனே பார்த்தாக வேண்டும்" என்று கூறிப் படியேறத் தொடங்கினான் கல்யாணம். தடுக்கப் போன குணசேகரனை முரட்டுத்தனமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் படிகள் மீது பாய்ந்து ஏறினான்.
(தொடரும்)

