பவானியின் பதில்
பவானி தனது கட்சியின் வாதங்களைக் கோவையாக எடுத்துரைத்து, "இங்குள்ள இத்தனை இளைஞர்கள் சட்டவிரோதமாகக் கமலாவின் திரு மணத்தை நிறுத்துவதில் அத்தனை தீவிரம் காட்டினார்களே, அவர்களில் யாரேனும் இந்த ஏழைப் பெண்ணை மணக்க முன் வருவாரா? அப்போது சுயநலம்தான் முன் நிற்கும்; பணம் பதவி சொத்து அந்தஸ்து எல்லாம் குறுக்கிடும்" என்று குத்தலாகப் பேசிய போது கல்யாணத்தின் உள்ளத்தில் ஓர் உண்மை பளிச்சிட்டது.
கமலாவின் திருமணத்தைத் தான் நிறுத்தியது அவள் பேரிலுள்ள கருணையினால் மட்டுமல்ல. அவனைத் தவிர வேறு யாரும் அவளை அடைவதைத் தன்னால் சகித்துக் கொள்ள முடியாததாலும்தான்! இதை அவன் மனம் புரிந்து கொண்ட மறு வினாடி அவன் ஏதோ கூற எழுந்து நின்றான். தகப்பனார் கோபால கிருஷ்ணன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்து விட்டார்.
ஆனால் பவானி விடவில்லை. "மிஸ்டர். கல்யாணசுந்தரம்! ஏன் எழுந்து நின்று விட்டுச் சும்மா உட்காருகிறீர்? கோர்ட்டாரிடம் ஏதாவது கூற விரும்பினால் தாராளமாகச் சொல்லலாம். நீரும் பிரம்மச்சாரிதானே? கமலாவின் கல்யாணத்தைத் தடுக்க முன் வந்தீரே? இப்போது கமலாவின் கல்யாணமாவதற்கும் முன் வருவீரா?" என்றாள்.
கல்யாணசுந்தரம் தகப்பனார் சட்டையைப் பிடித்து இழுப்பதைப் பொருட்படுத்தாமல் மறுபடியும் எழுந்து நின்றான். "பேஷாக முன் வருவேன். முன் வைத்த காலைப் பின் வைக்கும் வழக்கம் எனக்கு இல்லை. கமலா சம்மதித்தால் அவளை மணந்து கொள்ள நான் தயார்" என்றான்.
கோர்ட்டில் ஒரே ஆரவாரம், கரகோஷம், "ஹியர்! ஹியர்!" என்ற ஆமோதிப்பு; ஹிப் ஹிப் ஹுரே!" என்று இளைஞர்களின் கூப்பாடு!
மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் மணி அடித்தார். கோர்ட் சேவகன், "ஸைலன்ஸ்! ஸைலன்ஸ்!" என்று தொண்டை கிழியக் கத்தினான்.
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் எழுந்து, "யுவர் ஆனர்! இப்போது கல்யாணம் சொன்னதைத் தாங்கள் பதிவு செய்யக் கூடாது. அதற்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை. ஏதோ தெரியாத்தனமாக உளறுகிறான்" என்றார்.
"நான் ஒன்றும் உளறவில்லை" என்றான் கல்யாணம்.
"தெரிந்துதான் பேசினான். சரியாகத்தான் சொன்னான்" என்றார் ஒரு ஜூனியர் வக்கீல்.
"நீங்கள் சும்மா இருங்கள். ஊருக்கு இளைத்தவன் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் என்ற எண்ணம் போலிருக்கு எல்லாருக்கும்" என்று படபடத்த தன் தகப்பனார் காதில் கல்யாணம் எழுந்து நின்று ஏதோ சொன்னான்.
அவர் கோப மிகுதியில் உரத்த சத்தமாக, "என் வாயை மூடப் பார்க்கறாயேடா, வீட்டிலே உன் அம்மாவாயை யாரடா மூடறது?" என்று கேட்டது கோர்ட்டில் எல்லார் காதிலும் விழுந்து பலத்த சிரிப்பொலியை எழுப்பியது.
மாஜிஸ்திரேட் மணி அடித்து, "பவானி! மேல் உங்கள் விசாரணை நடக்கட்டும்!" என்றார்.
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன், "யுவர் ஆனர்! இதெல்லாம் ஏதோ சூழ்ச்சியாகத் தோன்றுகிறது. நான் பலமாக ஆட்சேபிக்கிறேன்" என்றார்.
பவானி மாசிலாமணி முதலியாரிடம் கலந்து பேசிவிட்டு, "யுவர் ஆனர்! வழக்கை ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இப்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையில் இரு கட்சியும் சமரசமாய்ப் போவதற்கு வழி இருக்கிறதா என்று பார்க்கலாம். மாசிலாமணி வழக்கை வாபஸ் பெறுவது கூடச் சாத்தியமாகலாம்" என்றாள்.
வழக்கை ஒத்திவைத்து அறிவித்துவிட்டு மாஜிஸ்ட்திரேட் எழுந்து தம் அறைக்குச் சென்றார்.
கோர்ட் கலைந்து நீண்ட நேரமான பிறகும் கமலா பவானியின் தோளில் முகம் புதைத்து விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள். பவானி எவ்வளவு சமாதானப்படுத்தியும் ஓயவில்லை. "அசடே! எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கிறது, பார். இன்னும் ஏன் அழுகிறாய்?" என்றாள் பவானி.
"இது ஆனந்தக் கண்ணீர் அக்கா!" என்று தட்டுத் தடுமாறி சொன்னாள் கமலா.
---- ----- ----------------- ------------
அன்றிரவு பவானி ரங்கநாத முதலியாரை அவர் வீட்டில் சந்தித்து நீதிமன்றத்தில் நடந்தனவற்றை யெல்லாம் விவரித்தாள். "ஏதோ தவறு நேர்ந்துவிட்டது; போனதை யெல்லாம் மறந்துவிடுங்கள். கமலாவுக்கும் கல்யாணசுந்தரத்துக்கும் திருமணம் நடப்பதுதான் பொருத்தமாய் இருக்கும். அவர்களை ஆசீர்வதியுங்கள்" என்றாள்.
அந்தப் பெண்ணையே கேட்டேன்; அவளே என்னை மணந்து கொள்ளச் சம்மதம் என்றாளே? ஏன் அப்படிச் சொன்னாள்? அதை விசாரித்துவிட வேண்டும்" என்றார் ரங்கநாதன்.
"அதைப் போய் அந்தச் சிறு பெண்ணிடம் கேட்டு அவளை மேலும் குழப்பி மனத் துயருக்கு உள்ளாக்கலாமா? கல்யாணம் அவளை உதாசீனம் செய்ததால் ஏற்பட்ட ஏமாற்றம். பெற்றோரின் வற்புறுத்தல் எல்லாமாகச் சேர்ந்து அவளைச் சம்மதிக்க வைத்திருக்கும்" என்றாள் பவானி.
இருந்தாலும் என்னை இப்படி அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். போகட்டும், கொஞ்ச நாள் யாத்திரை போய்விட்டு வருகிறேன். அது வரை என் சொத்துக்களை யெல்லாம் நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்" என்றார் ரங்கநாதன்.
அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பவானி வீடு திரும்பியபோது மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் அவள் மாமா குணசேகனுடன் தோட்டத்தில் நாற்காலிகள் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
"வாம்மா, பவானி! மாஜிஸ்திரேட் புறப்படுவதாகச் சொன்னார். நான்தான் 'சற்று இருங்கள். பவானி வந்துவிடுவாள்' என்று கூறி உட்கார்த்தி வைத்தேன்" என்றார் குணசேகரன்.
"ரொம்ப நல்லதாய்ப் போயிற்று" என்றாள் பவானி. "மாசிலாமணி வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வது நிச்சயம் என்பதை மாஜிஸ்திரேட்டுக்கு இப்போதே தெரிவித்துவிடுகிறேன்."
"வழக்கில் பிரமாதமாக வாதாடினாய். கங்கிராஜுலேஷன்ஸ்" என்றார் கோவர்த்தனன்.
"கல்யாணத்தைப் பார்த்து 'நீயும் ஒரு பிரமச்சாரிதானே? கமலாவின் கல்யாணமாகத் தயாரா' என்று ஒரு போடு போட்டாயே! அது எனக்குக் கூடப் பொருந்தும். நானும் ஒரு பிரமச்சாரிதான்!"
"அடேடே! கமலாவுக்கு இத்தனை போட்டியா? அதுவும் இத்தனை பெரிய இடங்களிலிருந்து, 'கமலா சுயம்வரம்' என்றுகூட வைத்துவிடலாம் போலிருக்கிறதே!" என்றாள் பவானி.
"நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. கமலாவின் கல்யாணம் என்பதுதான் முடிவாகிவிட்டதே. நானும் ஒரு பிரமச்சாரிதான் என்பதைக் கமலாவின் வக்கீலுக்கு நினைவுபடுத்துகிறேன்!" என்றார் கோவர்த்தனன்.
"அம்மா, பவானி! நல்ல பதிலாகச் சொல்லம்மா. நான்தான் ஏற்கனவே உன்னிடம் கோவர்த்தனனின் விருப்பத்தைத் தெரியப்படுத்திப் பேசி யிருக்கிறேனே!" என்றார் குணசேகரன்.
"ஒருவேளை உனக்கும் கல்யாணத்துக்கும் இடையில் அன்பு வளர்ந்திருக்கிறதோ என்ற சந்தேகத்தில் நான் இது நாள் வரை ரொம்ப வற்புறுத்தாமல் இருந்தேன். ஆனால் இப்போதுதான் அவன் கமலாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்வது நிச்சயமாகிவிட்டதே. அதனால் இனி மேல் உன்னை நான் இலேசில் விடமாட்டேன்" என்று கூறிவிட்டுக் கோவர்த்தனன் தமது ஹாஸ்யத்தைத் தாமே ரசித்துச் சிரித்தார்.
"யுவர் ஆனர்! இந்தக் கேஸையும் கொஞ்சம் தள்ளி வையுங்கள்; இரண்டு வாரம் தவணை கொடுங்கள்" என்றாள் பவானி.
"ஆல்ரைட்! இரண்டு வாரம். சரியாகப் பதினைந்தாம் நாள் நான் மறுபடியும் இங்கே வருவேன். நல்ல பதிலை எதிர்பார்த்து வருவேன்" என்றார் கோவர்த்தனன்.
அவர் போன பிறகு மாமா குணசேகரன் பவானியைப் பார்த்து, "நீ இப்படி அடம் பிடிப்பது நன்றாயில்லை. உன்னால் அந்த மனுஷன் வாழ்க்கையே பாழாகிக் கொண்டிருக்கிறது. கோர்ட்டைவிட்டு வீட்டுக்குத் திரும்பினால் சதா உன் படத்தைப் பார்த்துக் கொண்டு பித்துப் பிடித்தவர் போல் உட்கார்ந்திருக்கிறாராம். ஏக்கத்தை மறக்கக் குடியிலும் இறங்கி விட்டாராம். அவரிடம் வேலை பார்க்கும் சமையல்காரன் மணி நேற்று வந்து ஒரு குரல் அழுதுவிட்டுப் போனான். பாவம், அவன் கோவர்த்தனன் பேரில் உயிரையே வைத்திருக்கிறான். அவரைக் காப்பாற்றிக் கரையேற்றும்படி மன்றாடினான். நீ கோவர்த்தனனை ஏற்க மறுத்துவிட்டால் அவர் எதிர்காலமே கெட்டுக் குட்டிச்சுவராகிவிடும்போலிருக்கிறது" என்றார்.
"அவருடைய எதிர்காலத்தில் அத்தனை அக்கறை காட்டுகிறீர்களே, என் எதிர்காலம் பாழானால் பாதகமில்லையாக்கும்" என்றாள் பவானி.
"அப்படி நான் எண்ணுவேனா, பவானி. கோவர்த்தனனை உனக்குப் பிடிக்கவில்லையென்றால் உன் மனத்தில் வேறு யாரையாவது வரித்திருக்கிறாயா? அதையாவது சொல். கல்கத்தாவில் இருக்கும்போது ஏதாவது நடந்ததா? உன் பெற்றோர் சம்மதம் கிடைக்கவில்லையா? விவரமாகச் சொன்னால் உனக்காக அவர்களிடம் நான் வாதாடிப் பார்க்கிறேன்."
"என் காதலருக்கு வேறு ஒருத்தியுடன் திருமணமாகிவிட்டது, மாமா! நாட்டுப்பற்று என்னும் நங்கையை மணந்துகொண்டு நாலு வருஷங்கள் மாமியார் வீடே கதி என்று இருக்கிறார். விடுதலை பெற்று வர இன்னும் இரண்டு ஆண்டுகள் பாக்கியிருக்கின்றன" என்று கூறி குணசேகரனைத் திகைப்பு கலந்த மௌனத்தில் ஆழ்த்திவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள் பவானி.
(தொடரும்)

