வழக்கு

நீதி மன்றத்தினுள்ளே எல்லோரும் கூடினார்கள்.

"மாஜிஸ்திரேட் வருகிறார்; சைலன்ஸ்!" என்று டபேதார் கத்தினார்.

மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் கம்பீரமாக வந்து ஆசனத்தில் அமர்ந்தார். பவானியைப் பார்த்துப் புன்னகை புரிந்து, "கேஸ் எடுத்துக்கொள்ளலாமா?" என்றார்.

"எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்தக் கேஸில் பிரதிவாதிகளுள் ஒருவரான கல்யாணத்தைக் காணோம்."

"என்ன கல்யாணம் வரவில்லையா? கோர்ட் உத்தரவை மீறுவதா? ஆயிரம் ரூபாய் அபராதம்!" என்றார் கோவர்த்தனன். இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகவே ஆவலுடன் காத்திருந்தவராயிற்றே!

"யுவர் ஆனர்! யுவர் ஆனர்!" என்று அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தார் கோபாலகிருஷ்ணன். "தாங்கள் தயவு செய்து தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அவன் எனக்கு முன்பே வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டான். ஏன் தாமதம் என்று புரியவில்லை. இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான். என் மீதும் கல்யாணத்தின் மீதும் இன்னும் பத்து இளைஞர்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லோர் சார்பிலும் நான்தான் ஆஜராகிறேன்.

எனவே கல்யாணம் வருவதற்குத் தாமதமானதைப் பொருட்படுத்தாமல் வழக்கை நடத்தலாம். நான் தயாராக இருக்கிறேன்."

இந்தச் சயயம் கல்யாணம் விடுவிடுவென்று நடந்து வந்து தந்தைக்கு அருகில் அமர்ந்து கொண்டான். அவன் வந்துவிட்டதைக் கவனியாதவர் போல் கோவர்த்தனன் கூறினார். "நீர் தயாராய் இருப்பதால் உமது மகன் செய்யும் தவறு சரியாகி விடாது. 'கன்டெம்ப்ட் ஆஃப் கோர்ட்' மிகப் பெரிய குற்றம் என்பது உமக்கா தெரியாது? சரி, தண்டனையைக் கோர்ட் கலையும் வரை 'சஸ் பெண்ட்' பண்ணி வைத்திருக்கிறேன்.

அதற்குள் அவன் வந்து சேர்ந்தால் பார்க்கலாம். எதற்கும் இந்த எச்சரிக்கையைச் சொல்லும்; 'கோர்ட் உத்தரவை இடியே விழுந்தாலும் மீறக் கூடாது' வக்கீலாகப் பிராக்டீஸ் செய்ய நினைக்கும் இளைஞன் சட்டப் படிப்பின் அரிச்சுவடியையே மறப்பதா?"

"எஸ் யுவர் ஆனார்!... அதாவது நோ யுவர் ஆனார்.... அதாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், உங்கள் எச்சரிக்கையைக் கல்யாணத்திடம் கூறுகிறேன். 'அரிச்சுவடியை மறக்கலாகாது' என்றும் சொல்லி வைக்கிறேன்."

கோவர்த்தனன் புன்னகையை மறைத்துக்கொண்டு, பவானி பக்கம் திரும்பி, "யு மே புரொஸீட்" என்றார்.

அவரை வெறித்துப் பார்த்துக் கல்யாணம் நறநறவென்று பற்களைக் கடித்துக்கொண்டது வேறு யாருக்கும் கேட்கா விட்டாலும் அவன் காதுகளில் தெளிவாக விழுந்தது.

வழக்கில் சாட்சியங்களின் விசாரணைகளெல்லம் முடிந்த பிறகு, 'ஸம்மிங் அப்பில்' ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன் வாதித்தார்.

"இந்தக் கல்யாணத்தை நிறுத்திய இளைஞர்கள் பெரியதொரு சமூக சேவை செய்திருக்கிறார்கள். சின்னஞ் சிறு பெண்ணைத் தலை நரைத்த கிழவருக்குக் கல்யாணம் செய்து தருவது தருமமா? முறையா? அழகிய கிளியை வளர்த்துப் பூனையிடம் ஒப்படைப்பதா? அறியாப் பெண்ணைப் பலவந்தமாக ஒரு கிழவனுக்குக் கட்டிக் கொடுப்பதைக் காட்டிலும் அவளுடைய கழுத்தில் கல்லைக் கட்டிக் கடலில் தள்ளி விடலாம் அல்லவா? இப்படிப்பட்ட அக்கிரமத்தைத் தடுத்த இளைஞர்களுக்குச் சமூகம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பானதாக இருந்தாலும் அது குற்றமாகாது.

"என்னையும் ஒரு பிரதிவாதியாக்கி யிருந்த போதிலும் 'இளைஞர்கள் ஆற்றிய சமூகப்பணி' என்று என்னை உட்படுத்திக்கொள்ளாமலே பேசுகிறேன்.

காரணம், நான் இதில் நேரடியாக ஈடுபடவில்லை என்பதைச் சாட்சிகள் உங்களுக்குச் சுட்டிக் காட்டினார்கள். ஆனால் நான் பஸ்ஸைத் தவற விடாமல் அவர்களுடனேயே சென்றிருந்தாலும் இளைஞர்களைத் தடுத்திருக்க மாட்டேன். திருமணத்தை நிறுத்தத்தான் நானும் முயன்றிருப்பேன். ஒருவேளை நான் அந்த இளைஞர்களைப் போல் அமர்க்களப்படுத்தி யிருக்கமாட்டேன். மாசிலாமணியிடமும் ரங்கநாத முதலியாரிடமும் நல்லபடியாகப் பேசி அமைதியான முறையில் திருமணத்தை நிறுத்த முயன்றிருப்பேன்.

"நேற்றுவரையில் ஏன், இன்றுகூட - இந்த ஒரு கேஸில் தவிர - நான் ரங்கநாதனின் வக்கீல் என்பதைக் கனம் கோர்ட்டார் யோசித்துப் பார்க்க வேண்டும். அவருக்கு வக்கீல் என்பதை விட அவருக்கு ஆருயிர் நண்பன் என்பதில் அதிகமாக மகிழ்ச்சி அடைபவன் நான். நண்பன் தவறு செய்தால் சுட்டிக் காட்டுவது என் கடமை அல்லவா? எனவே ரங்கநாத முதலியார் செய்த ஒரு காரியத்துக்கு எதிராக இந்த வழக்கில் நான் பேச நேர்ந்ததற்கு அவர் வக்கீல் என்ற முறையில் வருத்தப்பட்டாலும் அவர் நண்பன், அவர் நலனை நாடுகிறவன் என்ற முறையில் மகிழ்கிறேன். மீண்டும் சொல்கிறேன், இந்த இளைஞர்கள் பெண் குலத்துக்கு அரிய பெரிய பணியாற்றியுள்ளனர். காலம் வேகமாக மாறி வருகிறது. பெண்களின் சம உரிமைகள் மதிக்கப்படுகின்றன. ஒரு கட்டாயக் கல்யாணத்தை நிறுத்திய தீரர்கள் போற்றுதலுக்கு உள்ளாகாமல் தண்டனை பெற்றால் பிற்போக்காளர்களாவோம். சட்டரீதியாக மட்டுமன்றி, சமூகப் பிரக்ஞையுடன் இந்த வழக்கை அணுகுவோம். தேசத்துக்கே வழிகாட்டும் புரட்சிகரமான தீர்ப்பு இங்கே உருவாகட்டும்!"

மாறாத புன்னகையுடன் ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பவானி இப்போது பேச எழுந்தாள்.

"எனது சகோதரர் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன்.... அடேயப்பா! அபாரமாகப் பேசினார். பெண்களின் சம உரிமைகளை மதிப்பதில் நான் கோபாலகிருஷ்ணனுக்குச் சிறிதும் சளைத்தவள் அல்ல. அதனால் அவர் பேச்சை நான் ரொம்பவும் ரசித்தேன். ஆனால் அவர் பேச்சில் ஆவேசம் இருந்ததேயன்றி விஷயம் ஒன்றுமில்லை. அவர் பேச்சு காங்கிரஸ் கூட்டத்தில் கதர் சட்டையணிந்து மேடை ஏறி ஆற்ற வேண்டிய சொற்பொழிவு. கோர்ட்டில் பேசுகிற வார்த்தைகள் அல்ல.

"கல்யாணம் என்பது தனிப்பட்டவர்களைப் பொறுத்த விஷயம். மணமகனும் மணமகளும் சம்மதித்து மணம் புரிந்துகொண்டால் அதில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை. இந்த வழக்கில் அறியாப் பெண்ணைப் பலவந்தம் செய்தார்கள் என்று சொல்வது முழுத் தவறு. சற்று முன் கமலா சாட்சிக் கூண்டில் சாட்சியம் சொன்னதை எல்லோரும் கேட்டோம். தன்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை என்று சொன்னாள். தானே விருப்பப்பட்டு ரங்கநாத முதலியாரை மணந்து கொள்ளச் சம்மதித்ததாகக் கூறினாள். தன்னைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றாள்......"

"அவள் சொன்னது சரிதான்" என்று குறுக்கிட்டார் கோபால கிருஷ்ணன். "ஆனால் அதையெல்லாம் அவள் தானே சொன்னாளா அல்லது யாரோ சொல்லிக் கொடுத்ததைப் பயத்தில் அப்படியே ஒப்பித்தாளா என்பதுதான் கேள்வி!"

"கமலாவுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு என் மதிப்பிற்குரிய நண்பர் கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். வேறு விதமாக அவளைப் பேசும்படி அவர் செய்து விட்டால் நான் இந்த வக்கீல் தொழிலையே விட்டு விடுகிறேன். உண்மையில் கமலாவின் தகப்பனார், திருமணம் நின்றதால் பட்ட அவமானம் போதும், கோர்ட்டுக்கு வேறு போய் ஊர் சிரிக்க வேண்டாம் என்று யோசித்தார். ஆனால் இந்தப் பெண்தான் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்லத் தான் தயார் என்று முன் வந்தாள். அதைக் கேட்ட பிறகுதான் இவள் பெற்றோருக்கும் சூடு பிடித்து என்னை அணுகினார்கள். கமலாவுக்கு அதிக வயதாகா விட்டாலும் அவள் பச்சைக் குழந்தையல்ல. உலக இயல்பை நன்கு அறிந்தவள். சமூக சேவா சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களைப் போல் நமது நாட்டில் பிறருக்கு வாத்தியாராக இருக்க விரும்புகிறவர்கள் ஏராளமாக உண்டு. ஆனால் தங்களுக்கு என்று வரும்போது சுயநலமிகளாகி விடுகிறார்கள். இந்தத் திருமணத்தைச் சட்ட விரோதமான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து தடுத்து விட இவ்வளவு வாலிபர்கள் வேலைமெனக் கெட்டு பஸ் வைத்துக்கொண்டு போனார்களே - இவர்கள் நாடகத்துக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக் கணக்கானவர்களை மோசடி செய்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல் கிளம்பிச் சென்றார்களே - கிழவனுக்கும் குமரிக்கும் திருமணமா என்று சீறுகிறார்களே இவர்களில் யாராவது ஒருவர் இந்த ஏழைப் பெண்ணை மணப்பதற்கு முன்வருவாரா? மாட்டார்! அப்போது பணம், பதவி, சொத்து, அந்தஸ்து, ஜாதி எல்லாம் குறுகிட்டு விடும்!...."

கல்யாண சுந்தரம் எழுந்து நிற்க முயன்றான். ஹோம்ரூல் கோபால கிருஷ்ணன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தார்.

பவானி, "மிஸ்டர் கல்யாண சுந்தரம் ஏதோ கூற ஆசைப்படுகிறார் போலிருக்கிறதே!" என்றாள்.

(தொடரும்)