இருள் நிலவாகுமா?

மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் தமது பங்களா வாசல் போர்ட்டிகோவில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே வந்தார். டென்னிஸ் டிரெஸ்ஸில் இருந்தவர் நேராக மாடியில் தமது படுக்கை அறைக்குப் போய் அவற்றைக் களைந்துவிட்டு ஹவுஸ் கோட் ஒன்றை அணிந்து இடுப்பில் நாடாவை முடிந்தபடியே மீண்டும் கீழே இறங்கி வந்தார். வரவேற்பு அறையில் இருந்த அலங்காரமான அலமாரி யொன்றைத் திறந்தார். உள்ளே நோட்டம் விட்டு விட்டு, "மணி! மணி!" என்று உரக்க அழைத்தார்.

"ஸார்! வந்துட்டேன்" என்று பதில் கொடுத்தபடியே சமையலறையிலிருந்து வந்த மணி, தோளிலிருந்து தொங்கிய அழுக்குத் துண்டில் கையைத் துடைத்தபடி நின்றார்.

"சோடா இருக்கான்னு பார்த்து வாங்கிக் கொண்டு வந்து வைக்கப்படாது? தினமும் அதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டுமா நான்?"

"சோடாதானே? ரெடியா இருக்கே? மார்க்கெட்டுக்குப் போய் வாங்கி வந்த சாமான்களோடு அடுப்பங்கரையிலேயே வைச்சுட்டேன். சமையலுக்கு நேரமாகி விடவே அதில் கவனம் போய்விட்டது."

"சரி, சரி! சீக்கிரம் கொண்டுவந்து இங்கே அடுக்கு. ஒவ்வொரு தடவையும் நான் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார வியாபாரி மாதிரி சோடா சோடான்னு அலற வேண்டியிருக்கு!"

மணி சமையலறைக்குச் சென்று ஒரு பெரிய துணிப் பையுடன் திரும்பினார். அதிலிருந்து ஸ்பென்ஸர் சோடாக்களை எடுத்து அலமாரியில் வரிசையாக அடுக்கினார். கூடவே, "ஸார்! நான் சொல்றேன்னு கோபிக்கப் படாது. நீங்க இங்கே உத்தியோகத்தை ஏற்று வந்தபோதே உங்க அப்பா என்னிடம் சொல்லி அனுப்பினார்...." என்று இழுத்தார்.

"ஷட் அப்!"

"நான் வாயை மூடிக் கொண்டு போய்விட்டால் உங்க அப்பாவுக்குத் துரோகம் செய்தவனாவேன்."

"அவரா உனக்குச் சம்பளம் தருகிறார்? நகரு!"

மணி அப்பால் சென்று துணிப் பையை மடித்துக் கொண்டே பேசினார். "இன்று நீங்கதான் சம்பளம் கொடுக்கிறீங்க. ஆனா என் பன்னிரண்டாவது வயதிலிருந்தே உங்க அப்பாகிட்டே வேலை செய்து வந்தவன் நான். 'மணி! கோவர்த்தனன் தெற்கே துணையில்லாமல் போகக் கூடாது என்பதற்காகத்தான் உன்னையும் பின்னோடு அனுப்பறேன். எவ்வளவு நல்லவனானாலும் தனியே இருக்கும்போது மனசு சில சமயம் தடுமாறிப் போய்விடும். அவன் பிறந்த தினத்திலிருந்தே அவனை உனக்குத் தெரியும். அவனுக்குச் சமைத்துப் போடுவது மட்டும் உன் வேலை இல்லை. என் ஸ்தானத்திலிருந்து அவனை நீ கவனித்துக் கொள்ளணும்' என்றார்.

"லெக்சர் முடிந்ததா?" - கேட்டுக் கொண்டே அலமாரிக்குள்ளிருந்து ஒரு கண்ணாடிக் கோப்பையை எடுத்துத் தன் நெஞ் சுயரத்துக்கு வந்த அலமாரியின் மேல் பரப்பில் வைத்தார் கோவர்த்தனன். அடுத்து விஸ்கி பாட்டிலையும் எடுத்து வைத்துவிட்டு, சோடா ஒன்றை உடைத்தார்.

"எனக்கு இங்கே சில வார்த்தைகளைக் கூறச் சந்தர்ப்பம் அளித்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன், வணக்கம்" என்று சொற்பொழிவை முடித்தார் மணி.

கோவர்த்தனன் சிரித்தார்.

"குளிக்க வெந்நீர் ரெடி; சாப்பாடும் தயார்!"

"வெந்நீரில் நீ குளி. உனக்குத்தான் பச்சைத் தண்ணீர் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. வெய்யில் காலத்திலும் வெந்நீர் வேண்டும். எனக்கு எதற்கு? இப்பத்தான் டென்னிஸ் ஆடிட்டு வந்தேன். வியர்வை அடங்கியதும் குளித்துவிட்டுச் சாப்பிட வரேன். நீ போய் டேபிளை 'அரேஞ்ச்' பண்ணு." மணி சென்றதும், கோவர்த்தனன் மீண்டும் அலமாரிக்குள் கண்ணோட்டம் விடக் குனிந்தார். அதில் ஃபிரேம் போட்டு நிமிர்த்தி வைத்திருந்த பவானியின் இரு படங்களையும் எடுத்து அலமாரி மீது பார்வையாக வைத்தார். மதுவை அருந்தியபடியே அவற்றை மாறி மாறிப் பார்த்தார். ஒன்றில் அவள் வக்கீல் உடையில் இருந்தாள்; மற்றொன்றில் டென்னிஸ் உடையில் கையில் மட்டை ஏந்தி நின்றாள். உதடுகளைக் குவித்து இரு படங்களையும் நோக்கிக் காற்றை முத்தமிட்டார்.

கோவர்த்தனன். பிறகு டென்னிஸ் உடையிலிருந்த பவானி படத்தை ஒரு கையில் எடுத்துக்கொண்டு மற்றொரு கரத்தில் மதுக் கோப் பையுடன் நடந்து சென்று சோபாவில் அமர்ந்தார்.

அந்தப் படங்களைத் தருமாறு அவர் முதலில் பவானியைத்தான் கேட்டார். அவள் கண்டிப்பாக மறுத்துவிடவே அவர் வேறு வழியை நாட வேண்டியதாயிற்று. கிளப் ஸூவனியரில் போடுவதற்காக எடுக்கப் பட்ட படங்கள் அவை என்பது கோவர்த்தனனுக்குத் தெரியும். அவற்றை எடுத்த ஸ்டூடியோ சொந்தக்காரரையும் தெரியும். வெகு சுலபமாக, பவானிக்குத் தேவை என்று கூறியே அவற்றுக்கு மறு பிரதிகள் போட்டுக் காசு கொடுத்து வாங்கி வந்து விட்டார். ஃபிரேம் போட்டும் வைத்துக் கொண்டார்.

பவானி இப்போதெல்லாம் அடிக்கடி டென்னிஸ் ஆட வருவதில்லை. ஒரு நாள் வந்தால் இரண்டு தினங்கள் நாடக ஒத்திகையின் தீவிரத்தைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொண்டாள். மாஜிஸ்டிரேட் வேறு யாருடனாவது ஆடிவிட்டு வீடு திரும்ப வேண்டியிருந்தது. அவளுடன் ஆடும்போது ஏற்படாத சோர்வு வேறு யாருடனாவது ஆடி விட்டு வந்தால் உண்டாயிற்று. எதையோ பறிகொடுத்து விட்டுத் திரும்புவது போல் காணப்படுவார் கோவர்த்தனன். பவானி கல்யாணத்தைக் காதலிக்கிறாள் என்பதற்கோ அல்லது தம்மை வெறுக்கிறாள் என்பதற்கோ எந்த விதமான சாட்சியமும் மாஜிஸ்டிரேட் டுக்குப் புலப்படவில்லை. என்றாலும் அவள் தம்மை விட்டு விலகி விலகிப் போவதுபோல் கோவர்த்தனனுக்கு ஒரு பிரமை ஏற்பட்டது. இந்த இழப்பை மறக்கத்தான் அவர் மதுவின் துணையை நாடினார். கிளப்பில் ஆரம்பித்த பழக்கம் வீட்டுக்கே குடிவந்து விட்டது. மணியை விட்டே சோடாவும் ஸ்காச் விஸ்கியும் வாங்கிக் கொண்டு வந்து வைக்கச் சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

அந்தப் பெரிய வீட்டில் தாம் தன்னந் தனியாக இருக்க நேரிட்டதை ஏதோ பெரிய துர்ப்பாக்கியமாகக் கருதினார் கோவர்த்தனன். பவானி மட்டும் இங்கே தம்முடன் இருக்குமாறு வந்துவிடக் கூடுமானால் இந்தப் பெரிய வீட்டில் தனிமை அவரைத் திரும்பிய பக்கமெல்லாம் தாக்காது. வீடு மட்டுமல்ல; வாழ்க்கையே வெறுமையும் வெற்றிடமு மாகத் தோன்றும் நிலை வினாடிப் போதில் மாறிவிடும். பவானியின் வெள்ளி மணி நாதச் சிரிப்பொலி இவற்றில் நிரம்பி மங்களகரமாகி விடும். சூன்யங்கள் ஓவியங்களாகும், வறட்சிகள் அருவிகளாகும்; இருள்கள் நிலவுகளாகும்; வெம்மைகள் தண் புலன்களாகும்!

எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு, ஏதோ சதி செய்கிறார்கள். தமக்குத் துரோகம் இழைக்கிறார்கள். நியாயமாகவும் இயல்பாகவும் தமக்குக் கிடைக்க வேண்டிய மகிழ்ச்சிகளை இல்லாமல் செய்து நெஞ்சில் அடிக்கிறார்கள்!

அவர் மதுவை இன்னும் ஒரு மிடறு விழுங்கினார்.

"வெறும் வயிற்றில் அதைக் குடிக்க வேண்டாம். கெடுதல்; சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்றால் இதை அவ்வப்போது கொரித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி ஓர் அகன்ற கிண்ணத்தில் மிக்சர் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனார் மணி. நெய் விட்டுப் பொன்னிறமாக வறுத்த முந்திரிப் பருப்புக்களைத் தாராளமாகவே அதில் கலந்திருந்தார்.

பெரிய வெள்ளி ஸ்பூனில் அதைச் சிறிது அள்ளி வாயில் போட்டுக் கொண்ட கோவர்த்தனன் நெஞ்சோடு அணைத்திருந்த பவானி யின் படத்தை எதிரே பிடித்துப் பார்த்தார். 'பவானி! ஏன் என்னை இப்படிச் சித்திரவதை செய்கிறாய்? உன் மனம் கொஞ்சம் இரங்கினால் போதும். என் வாழ்க்கை எத்தனை ஆனந்த மயமாகி விடும்! உன் கண்கள் தரும் போதைக் கிறக்கம் இருக்கும்போது மதுவை நான் ஏன் நாடப் போகிறேன்? மணிக்கு என்னைக் கோபித்துக் கொள்ளக் காரணமே அகப்படாமல் தவிப்பான், பவானி!"

வாசலில், "ஸார்!" என்று குரல் கேட்டது.

கோவர்த்தனன் கோப்பையைக் காலி செய்து வைத்து விட்டு, "யார் அது?" என்று கேட்டவாறே எழுந்தார்.