படை கிளம்பியது!

இரண்டு நாட்கள் கழித்துக் கல்யாணம் சமூக சேவா சங்கக் கட்டிட வாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே போனபோது அவன் முகம் பேயறைந்த மாதிரி இல்லை; அதைவிட மோசமாக இருந்தது.

"என்ன ஆயிற்று உங்களுக்கு? இன்று ஃபைனல் டிரெஸ் ரிகர்சல் என்று தெரிந்து தாமதமாக வந்தீர்கள். எதையோ பறி கொடுத்துவிட்டது போல் நிற்கிறீர்கள். டயலாக்கை உளறிக் கொட்டுகிறீர்கள்!" என்றாள் பவானி.

"ஆமாம். எனக்கு மனமே சரியில்லை" என்றான் கல்யாணம். "உங்களுக்கெல்லாம் நான் எடுத்திருக்கிற முடிவை எப்படி விவரிக்கிறது; அதை நீங்கள் எந்த விதமாக ஏற்றுக் கொள்ளப் போறீங்க என்பதை எண்ணினால் ஒரே குழப்பமா யிருக்கு."

"போச்சுடா! ஸ்குரூ லூஸா? திருப்புளி கொண்டு வரட்டுமா?"

"பழுதுபார்க்கப்பட வேண்டிய மூளை ரங்கநாதனுடையது" என்றான் கல்யாணம்.

"புரியும்படிதான் சொல்லுங்களேன். சுற்றி வளைப்பானேன்?" என்றாள் பவானி.

"ஆமாம் பவானி, சொல்லத்தான் வேண்டும்! சொல்ல வேண்டிய நேரம் வந்தும் விட்டது. விசுவிடம் ரகசியத்தை வெளியிடுவதில்லை என்று சத்தியம் செய்து தந்தேன். ஆனால் அதைக் காப்பாற்றப் போனால் என் மனச்சாட்சி என்னைச் சும்மா விடாது; வதைத்துவிடும். மாசிலாமணி குடும்பத்தை ரங்கநாதன் வீட்டிலே குடி வைத்ததே நான்தான் என்பதால் எனக்கு இதில் ரொம்பவும் பொறுப்பு உண்டு. நண்பர்களே கேளுங்கள்! பவானி! நீங்களும் கேளுங்கள்!

"ரங்கநாதன் அந்த ஏழைக் குடும்பத்தின் அநாதரவான நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை விலைக்கு வாங்கி விட்டார்! அந்தப் பெண் கமலாவை மணந்து கொள்ளப் போகிறார். அறுபது வயதுக் கிழவனுக்கும் பதினெட்டு வயதுக் குமரிக்கும் திருமணம்!"

"ஆ! அக்கிரமம், அநியாயம். இதை அநுமதிக்கவே கூடாது" என்பது போல் பல குரல்கள் பரபரப்புடன் எழுந்தன. பவானி மட்டும் அமைதியாக இருந்தாள்.

"திருநீர்மலையில் இரகசியமாகத் திருமணத்தை நடத்தத் திட்டம். அதுவும் நமது நாடகம் இங்கு அரங்கேறும் அதே தினத்தில் கல்யாணத்தை வைத்துக் கொண்டிருக்கிறது அந்த கிழக் கோட்டான்! ஏன் தெரியுமா? எல்லோருடைய கவனமும் நாடகத்தில் இருக்கும். கல்யாணப் பார்ட்டி கிளம்பிப் போவதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற கருத்தில் தான்! ஆனால் நாம் ஏமாந்துபோகப் போவதில்லை. இந்த நீசத்தனமான காரியத்தைத் தடுத்து நிறுத்தியே தீருவோம்!"

"ஆமாம்! கிளம்பலாம்! போகலாம்! உடனே புறப்படு!" என்று குரல்கள்எழுந்தன.

"பவானி! நீங்களும் வருகிறீர்களல்லவா?" என்றான் கல்யாணம்.

"நான் வருவதும் வராததும் என் கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்திருக்கிறது!"

"இதில் கேட்க இன்னும் என்ன இருக்கிறது?"

"எவ்வளவோ இருக்கிறது. கமலாவை நீங்கள் காதலிக்கவில்லை என்று முன்பு நீங்கள் சொன்னீர்கள். இப்போது உங்கள் மனம் மாறிவிட்டதா என்று தெரிய வேண்டும். அப்படி யென்றால் எனக்கு ரொம்ப சந்தோஷம். ரங்கநாத முதலியாரை அவள் மணந்து கொள்ளக் கூடாதென்றால் நீங்கள் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயாரா யிருக்கிறீர்கள் என்று நான் நம்பலாமா? திருநீர்மலைக்கு எப்படி போகப் போகிறீர்கள்? எப்போது உங்களுக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது? இந்தச் சந்தேகங்க ளெல்லாம் நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும். கடைசியாக, இந்தத் திருமணத்தை எப்படித் த‌டுத்து நிறுத்த‌ப் போகிறீர்க‌ள் என்ப‌தையும் யோசிப்ப‌து ந‌ல்ல‌து!"

"ப‌வானி! எளிதான‌ ஒரு பிர‌ச்னையை நீங்க‌ள் சிக்க‌லுள்ள‌தாக்குகிறீர்க‌ள். க‌ம‌லாவை நான் முன்பும் காத‌லிக்க‌வில்லை, இப்போதும் காத‌லிக்க‌வில்லை. ஆனால் அத‌ற்காக‌ ஒரு கிழ‌க்கோட்டான் ஒரு ப‌ச்சைக் கிளியைக் கொத்திக் கொண்டு போவ‌தைப் பார்த்துக் கொண்டு நான் சும்மாயிருக்க‌ முடியாது. இந்த‌ச் ச‌ங்க‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளுக்குச் சில‌ ல‌ட்சிய‌ங்க‌ள் உண்டு. அந்த‌ ல‌ட்சிய‌ங்க‌ளுக்கு மாறாக‌க் காரிய‌ங்க‌ள் ந‌ட‌க்கும்போது கை க‌ட்டிச் சும்மா நிற்ப‌து கோழைத்த‌ன‌ம். திருநீர்ம‌லைக்குப் போக‌ ஒரு ப‌ஸ்ஸுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்னும் ஒரு ம‌ணி நேர‌த்தில் இந்த‌ச் ச‌ங்க‌த்தின் வாச‌லுக்கு வந்துவிடும். இரவோடு இரவாகப் புறப்பட்டால் திருநீர்மலைக்கு அதிகாலையில் முகூர்த்த நேரத்துக்கு முன்பாகவே போய்ச் சேர்ந்து விடலாம். திருமணப் பந்தலில் நாம் அனைவரும் போய் நின்று, தேவையானால் சத்தியாக்கிரகமே செய்து கமலாவைக் காப்பாற்ற‌லாம். எனக்கு எப்போது இந்தச் செய்தி தெரியவந்தது என்று கேட்டீர்கள். இரண்டு தினங்களுக்கு முன்பாகத் தான் தெரிந்து கொண்டேன்.

இந்தக் கல்யாணத்தை எப்படித் தடுப்பது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின்னர் உங்கள் எல்லோரிடமும் பேச நினைத்தேன். இடையில் பஸ்ஸுக்கும் ஏற்பாடு பண்ணினேன். ரங்கநாத முதலியாரும் மாசிலாமணி குடும்பமும் மெய்யாலுமே கிளம்பிச் செல்கின்றனரா என்று கண்காணிக்கவும் செய்தேன். இன்று பிற்பகல் அவர்கள் புறப் பட்டுச் சென்று விட்டார்கள். விசுவுக்கு நான் கொடுத்த வாக்குறுதியும் என்னை உடனே பேச விடாமல் தடுத்தது. போதுமா பவானி? திருப்திதானா? இப்போதாவது நாம் புறப்படலாமா?"

பவானி சிரித்தாள். "கல்யாணம்! அரும் பெரும் சாதனைகளைப் புரிந்த வீரனைப் போல் பேசுகிறீர்களே! உம்? உங்களைப் பற்றி நான் எவ்வளவோ உயர்வாக எண்ணி வந்தேன். இன்று எனக்குப் பெரிய ஏமாற்றம் அளித்து விட்டீர்கள்!"

"எந்த விதத்தில்? நான் என்ன தவறு செய்தேன்? தயவுசெய்து விளக்கினால் நல்லது" என்று சற்று விரைப்புடன் வினவினான் கல்யாணம்.

"சத்தியாக்கிரகம் என்ற சொல்லை உபயோகித்தீர்கள். ஆனால் நீங்கள் செய்ய எண்ணியுள்ள காரியம் துராக்கிரகம்தான். இரண்டு நாட்களுக்கு முன்பே உங்களுக்கு இந்த விவரம் தெரியுமென்றால் நீங்கள் உடனே ரங்கநாத முதலியாரை அணுகி நயமாகப் பேசி அவர் மனத்தை மாற்ற முயன்றிருக்கலாம். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை. திருமண தினத்தன்று கல்யாணப் பந்தலில் கலாட்டா செய்து ஒரு பரபரப்பை ஏற்படுத்த ஆசைப்படுகிறீர்கள். ரங்கநாத முதலியாரை அப்போதுதான் நன்றாக அவமானப்படுத்தியதாகும். வெட்கித் தலை குனிய வைத்ததாகும் என்று திட்டம் போட்டிருக்கிறீர்கள்."

"ரங்கநாத முதலியாரிடம் நான் நயமாகப் பேசியிருந்தால் அவர் உடனே என் சொற்படி கேட்டு நடந்து கொண்டிருப்பாராக்கும்? பவானி! ரங்கநாத முதலியாரை உங்களைவிட நான் நன்றாக அறிவேன். அவர் உடனே போலீஸ் பாதுகாப்பை நாடியிருப்பார். நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் போயிருக்கும்."

"அப்படி நீங்கள் கருதுவதா யிருந்தால் சத்தியத்தின் வெற்றியில், தார்மிக வற் புறுத்தலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்" என்றாள் பவானி. "கமலா, அவள் பெற்றோர், ரங்கநாதன், உங்கள் தகப்பனார், அவசியமானால் ஊரிலுள்ள மற்றப் பெரியவர்கள் எல்லாரிடமுமே நாம் பேசியிருக்கலாம். இப்படி ஒரு திருமணம் நடக்க அனுமதிப்பது தவறு என்று ஆரோக்கியமான ஓர் எதிர்ப்புணர்ச்சியை வளர்த்திருக்கலாம்."

"போகாத ஊருக்கு வழி சொல்லுகிறீர்கள். இரண்டு நாட்களில் நடக்கக் கூடிய காரியமா, வெகுஜன அபிப்பிராயத்தை வளர்ப்பது என்பது?"

"நாளைக்கு நாடகம் என்று அறிவித்திருக்கிறீர்களே; டிக்கட் விற்றிருக்கிறீர்களே; காசு கொடுத்தவர்களுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்?"

"நாடகத்தை ஒரு வாரம் ஒத்திப் போடுவதில் ஒன்றும் குடிமூழ்கிப் போய் விடாது. இப்போது வாங்கியிருக்கிற டிக்கெட்டை வைத்துக் கொண்டே எல்லோரும் அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரலாம் என்று அறிவித்து விடலாம். ஆனால் கல்யாணத்தை நாளைக்கு நிறுத்தாமல் போனால் போனதுதான். அந்த அநீதியை அப்புறம் நேராக்கவே முடியாது."

"அநீதி என்று எப்படித் தீர்மானித்தீர்கள்? கமலாவே இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதித்திருந்தால்?"

"ஏது, நீங்களே பக்கத்திலிருந்து நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தது மாதிரிப் பேசுகிறீர்களே?"

"இல்லை. ஆனால் ஒரு பெண்ணின் மனத்தை இன்னொரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியும். அதிலும் கமலாவின் மனம் எப்படிச் செயல்படும் என்பதை நான் நன்றாக உணர முடியும்."

"அப்படியே அவள் சம்மதித்திருந்தாலும் அது பெற்றோரின் வற்புறுத்தலால் அல்லது ஒரு வீம்புக்காகத்தான் இருக்கும். பின்னால் அதற்காக அவள் ரொம்ப வருத்தப் படுவாள்."

"மிஸ்டர் கல்யாணம்! முடிவாகச் சொல்கிறேன். நீங்கள் செய்யப் போகும் காரியம் அநாகரிகமானது. எனக்குச் சம்மத மில்லை. சட்ட ரீதியிலோ அல்லது தார்மீக ரீதியிலோகூட உங்களுக்கு இதைச் செய்ய அருகதை இல்லை. நான் போய் வருகிறேன். நாடக ஒத்திகையைத் தொடர்வதானால் என் வீட்டுக்குச் சொல்லி அனுப்புங்கள்."

பவானி விடுவிடுவென்று நடந்து சங்கக் கட்டிடத்தின் வாசலுக்கு வந்து காரில் ஏறினாள்.

அவள் சென்ற பிறகு கல்யாணம் தன் நண்பர்களைப் பார்த்து, "என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டான்.

அவன் குரலில் இப்போது முன்பிருந்த வேகம், உறுதி ஏதுமில்லை. பவானிக்கு இந்தக் காரியம் பிடிக்கவில்லை. கோபித்துக் கொண்டு போய் விட்டாள் என்றதும் அவனுக்கு உற்சாகம் குறைந்து விட்டது. அவள் பிரமாதமாகத் தன் ஏற்பாடுகளைப் பாராட்டுவாள் என்று எதிர்பார்த்து வந்ததற்கும் அவள் உண்மையில் நடந்து கொண்ட விதத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்! "நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். நான் யாரையும் வற் புறுத்தத் தயாராயில்லை. நாம்பாட்டுக்கு இந்தத் திருமணத்தைப் பற்றிய விவரம் ஒன்றுமே தெரியாதது போல இருந்து விடலாம். நாடகத்தைத் தொடர்ந்து நடத்தலாம்"என்றான்.

ஓரிரு விநாடிகள் மௌனம் நிலவியது. அதையடுத்து ஒரு தீவிரவாதி, கணீரென்று பேசினான். "ஏன் தயங்குகிறீர்கள்? உங்களை யெல்லாம் பார்த்துத்தான் மகாகவி பாரதி, 'வாய்ச் சொல்லில் வீரரடி' என்று பாடினான். 'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை சொல்வாரடி' என்றான். கமலாவுக்கு இப்படி நீங்கள் வஞ்சனை செய்யலாமா? முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா? அந்தப் பவானி, தானே கமலாவின் கழுத்தில் கல்லைக் கட்டிக் கடலிலும் தள்ளுவாள் போல் இருக்கிறது. அவள் பேச்சைக் கேட்டு மயங்கி விடாதீர்கள். ஒரு பெரிய அக்கிரமம் நமக்குத் தெரிந்து நடக்கும்போது சும்மா இருப்பது பேடித்தனம்" என்று ஆவேசத்துடன் சொன்னான்.

"ஆமாம். புறப்படுங்கள், போகலாம்" என்றான் இன்னொருவன். உடனே அதைத் தொடர்ந்து, "பஸ் வந்து விட்டதா? கிளம்பலாமா? முகூர்த்தம் எத்தனை மணிக்கு? நாடகம் ஒத்திப் போடப்பட்டிருப்பதாகத் தண்டோராப் போடச் சொல்லுவோமா? அவரவர் வீட்டுக்குப் போய் ஒரு 'ஸெட்' துணி மணிகளுடன் அரை மணி நேரத்தில் இங்கு திரும்பி வந்து விடுவோம்" என்றெல்லாம் பலவாறாகப் பேசி முடிவுகளுக்கு வந்தார்கள்.

கல்யாணம் இனி நான் நினைத்தாலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்ந்தான். தான் அணையை உடைத்து விட்டது போலவும் அந்த வெள்ளம் தன்னையே அடித்துச் செல்வது போலவும் அவனுக்குத் தோன்றியது!

(தொடரும்)