பவானியின் காதலன்

உமாகாந்தனுக்குத் தோளில் மருந்து வைத்துக் கட்டுப் போட்டு விட்டு நிமிர்ந்த டாக்டர், பவானியைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை புரிந்தார். "உயிருக்கு ஆபத்தில்லை" என்றார்.

"என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள்" என்று கூறிப் பவானி விழியோரம் துளிர்த்திருந்த கண்ணீரை நடு விரலால் துடைத்துக் கொண்டாள்.

"ஓய்வு தேவை; ஒரு வாரம் பத்து நாட்கள் ஆகும் உடம்பு நடமாடுகிற அளவில் தெம்பு பெற. ஏராளமாய் இரத்தம் இழந்திருக்கிறான் அல்லவா?" என்றார் டாக்டர். "ரொம்ப தாங்ஸ்" என்ற பவானி, கைப் பையைத் திறந்து அதிலிருந்து ஒரு மணிபர்ஸை எடுத்தாள்.

"இருக்கட்டும். ஃபீஸ் ஒன்றும் இப்போ தேவையில்லை" என்றார் டாக்டர். "நாளைக்குப் போலிசார் என் மீது வழக்குத் தொடுத்தால் நீங்கள் என் சார்பில் வந்து இலவசமாக வாதாடுங்கள் போதும்."

பவானி புரியாதது போல் நடித்து, "கேஸா, உங்கள் மீதா? எதற்கு?" என்றாள். டாக்டர் சிரித்தார். "பவானி! எனக்கு வயது நாற்பத்தைந்து ஆகிறது. இருபத்திரண்டு வருஷசங்களாக பிராக்டிஸ் பண்ணுகிறேன். கல் குத்தியதால் ஏற்பட்ட காயத்துக்கும் துப்பாக்கி தோட்டா கிழித்துச் சென்ற காயத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போகுமா? மலைச் சரிவில் சறுக்கி விழுந்து கூரிய பாறை குத்திக்காயம் பட்டு விட்டது இவனுக்கு என்கிறாய். இவன் யார்? திடுமென்று ராமப் பட்டணத்தில் எப்படி முளைத்தான்? உனக்கு எவ்வாறு சிநேகமானான்? கமலாவும் நீயும் இவனுமாக ஏலமலைச் சரிவில் எதற்காக ஏறிப் போக வேண்டும்?

அங்கே இவன் எதற்காக விழுந்து தொலைக்க வேண்டும்? அப்படியே விழுந்து தொலைத்தாலும் இயற்கையான விதத்தில் தலையிலோ முழங்கை முழங்காலிலோ அடிபட்டிருக்கக் கூடாதா? வலது தோளில் சற்றும் பொருந்தாத விதமாக‌ எதற்கு அடிபட்டுக் கொள்ள வேண்டும்? பவானி! இதையெல்லாம் கேட்க வக்கீலுக்குப் படிக்க வேண்டியதில்லை. டாக்டருக்குக் கூட எழக் கூடிய சந்தேகங்கள்தாம்."

பவானி, "டாக்டர் ... வந்து ...." என்று ஏதோ கூற ஆரம்பித்தாள். அவள் மேலே பேசுவதற்கு முன் உள்ளங்கையைக் காட்டி நிறுத்தச் சொன்னார்.

"இதோ பார்! நான் கேள்வியும் கேட்க வேண்டாம்; நீ பதிலும் கூற வேண்டாம்! அது மேலும் மேலும் என்னை இந்தக் கேஸில் சிக்க வைத்துப் போலீஸாரின் அதிருப்தியையும் சம்பாதித்துத் தரும்! பவானி! நான் போலீஸுக்கு உடனே தகவல் கொடுக்கக் கடமைப் பட்டவன்.நியாயமாக அவர்களிடம் சொல்லாமல் இவனுக்குச் சிகிச்சை செய்ய ஆரம்பித்ததே தவறு. ஆனால் இந்த ஊரில் அநேகமாக எல்லாருமே பவானியிடம் உள்ள ஒரு வசீகர சக்திக்கு அடிமையாவது போல் நானும் வசப்பட்டிருக்கிறேன். அதனால்தான் உன் கோரிக்கைக்கு இணங்கினேன். இங்கு நான் வந்து போனதை யாருக்கும் சொல்ல மாட்டேன்; நீயும் மறந்து விடு. இல்லாத போனால் எனக்கு மட்டுமில்லை. உன் பராமரிப்பில் உள்ள இவனுக்கும் ஆபத்து.

"ஜுரம் வரும் இவனுக்கு. நூற்றிரண்டுக்கு மேல் போனால் இந்த முதல் மருந்தைக் கொடுத்துக் குறைக்க வேண்டும். இரண்டாவது மருந்தை நாளைக்கு மூன்று வேளை ஒரு வாரத்துக்குச் சாப்பிட வேண்டும்."

"ஆகட்டும் டாக்டர்" என்றாள் பவானி, "பூர்வ ஜன்ம பூஜாப் பலனாகத்தாத்தான் எனக்குக் கம‌லாவும் நீங்களும் ஆபத்பாந்தவர்களாக உதவ வந்தீர்கள்." மேலே பேச முடியாமல் அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

அவர் அப்பால் போனதும் அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டு எழ, அவள் உமாகாந்தின் கட்டிலருகே மண்டியிட்டு அமர்ந்து தலையணையில் அவன் முகத்துக்கு அருகே தன் வதன‌த்தையும் வைத்துக் கொண்டு விம்மி விம்மி அழலானாள்.

கமலா பதறிக் கொண்டு தன்னைத் தேடி வந்தது, அவள் கூறியதைக் கேட்டுத் தான் துடிதுடித்தது, அவசரம் அவசரமாகக் காரை ஓட்டிக் கொண்டு சென்றது, அரை மயக்க நிலையில் இருந்த உமாகாந்தை இருவரும் இருபுறமும் தாங்கிக் கொண்டு மெல்ல நடத்திக் காருக்கு அழைத்து வந்தது, காரில் படுக்க வைத்தது, பிற‌கு வீடு சேர்ந்ததும் மாமா உதவியுடன் உமாகாந்தை மாடிக்குத் தூக்கிச் சென்றது, தன் அறையில் தன் கட்டிலிலேயே அவனைப் படுக்க வைத்தது. அங்கே அவன் நினைவிழந்து மூர்ச்சையானதும் உள்ளமெல்லாம் பதற, ஊனெல்லாம் நெக்குருக டாக்டருக்குப் போன் செய்தது, அவர் வந்து பார்த்துவிட்டுத் திரும்பியது எல்லாம் கனவில் நடந்தவை போலிருந்தன. ஆனால் அவை கனவல்ல, உண்மையே என்பதற்குச் சாட்சியமாய் உமாகாந்தன் அவள் படுக்கையிலே சயனித்திருந்தான். 'எப்படி இருந்த செழுமையான மேனி எப்படி உருத் தெரியமல் மெலிந்து வாடியிருக்கிறது? எப்படி இருந்த சிவந்த எழில் வதனம் இன்று வெளிறிக் கிடக்கிறது!'

அந்த வினாடி வரையில் கடமையில் கண்னும் கருத்துமாயிருந்த பவானி இனி செய்ய ஒன்றுமில்லை. உமாகாந்தன் கண்விழிக்கக் கடவுளைப் பிரார்த்தித்த‌ப்படி காத்திருக்க வேண்டியதுதான் என்ற நிலையில் கண்ணீர் பெருகுவதற்கு இடம் அளித்தாள். அது கரை உடைத்துப் பொங்கியது.

கமலா அவளை நெருங்கி மெல்ல அவள் தோளில் கரம் வைத்தாள்.

"இல்லை கமலா! என்னைச் சமாதானப்படுத்த முயலாதே! அழவிடு. இது நாலு வருஷங்களாக நான் தேக்கி வைத்திருக்கும் பிரிவுத் துயர்" என்றாள் பவானி.

"அதுதான் வந்துவிட்டாரே அக்கா!"

"ஆமாம். வந்துதான் விட்டார் கமலா. நாலு ஆண்டுகளுக்குப் பிறகு ஞாபகமாக என்னைத் தேடிக் கொண்டு வந்தவர் எப்படி வந்து சேர்ந்திருக்கிறார் பார்த்தாயா? ஸி.ஐ.டி.களால் துரத்தப்பட்டு, வெய்யிலில் காய்ந்து, மழையில் நனைந்து, நாயாக அலைந்து, மறைந்து திரிந்து, மெலிந்து தேய்ந்து, கடைசியில் அவர்கள் துப்பாக்கிக் குண்டின் தாக்குதலுக்கும் ஆளாகி, மயங்கிய நிலையில் எனக்குத் திரும்பிக் கிடைத்திருக்கிறார் கமலா! அப்போதும்கூட‌ எத்தனை களையாக இருக்கிறது பார்த்தாயா, இவர் முகம்!" என்ற பவானி உமாகாந்தின் கன்னங்களை மெல்ல வருடினாள். தொடர்ந்து கண்ணீரைப் பெருக்கி விசித்து விசித்து அழுதாள்.

சற்றுநேரம் பொறுத்துக் கமலா, "அக்கா! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களை இந்த நிலையில் விட்டு விட்டுப் போக எனக்கு மனமில்லை. ஆனால் எனக்கு ரொம்ப நேரமாகிறது. 'தீப்பெட்டி வாங்கி வருவதாகக் கூறிப் புறப்பட்ட பெண் என்ன ஆனாள், எங்கே போனாள்?' என்று புரியாமல் அம்மா என்னைச் சபித்துக் கொண்டிருப்பாள். எனக்குச் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும். வரட்டுமா?"

"நானும் வருகிறேன் கமலா. உன்னைக் காரில் வீட்டில் இறக்கி விட்டு விட்டு வந்து விடுகிறேன்."

"வேண்டாம் அக்கா! இவரைக் கவனித்துக் கொள்ள வேண்டியது உங்கள் முதல் பொறுப்பு. நான் போய்க் கொள்கிறேன்."

"இவரைத் எனக்குத் தேடித் தந்த உன்னைக் கவனித்துக் கொள்வதும் என் பொறுப்புத் தான். மாமா இவரைச் சற்று நேரம் பார்த்துக் கொள்வார். மேலும் இவருக்கு நான் மருந்து வாங்கி வரவும் வேண்டும். வா, போகலாம்" என்ற பவானி முகத்தைத் துடைத்துக் கொண்டு வீட்டிலிருந்த பிரிக்கப்படாத இரண்டு நெருப்புப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

கமலாவின் வீட்டை அடைவதற்கு முன்பு உமாகாந்த் பற்றிய ரகசியத்தைக் காப்பதாக அவளிடம் உறுதி மொழி பெற்றுக் கொண்டாள் பவானி. அவ்வாறே வாக்களித்த கமலா, "அக்கா! இந்தப் பக்கம் தப்பியோடிய கைதி உலாவுவதாகவும் ஸி.ஐ.டி.கள் அவனைத் தேடுவதாகவும் பேச்சு வந்தபோது, 'சட்டரீதியாக அந்தக் கைதிக்கு உதவ முடியுமா என்று பார்ப்பேன்' என்றுதான் சொன்னீர்களே யொழிய அந்தக் கைதி உங்கள் காதலனாகவும் இருகக் கூடும் என்பதாகப் பிரஸ்தாபிக்கவே யில்லையே? அப்படி நீங்கள் சந்தேகித்ததை என்னிடம் மறைத்துத்தானே விட்டீர்கள்" என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

"உண்மைதான் கமலா. எங்கள் காதல் விவகாரம் ஒரு பெரிய கதை. ஒரு நாள் சாவகாசமாகச் சொல்கிறேன்" என்றாள் பவானி.

"உங்கள் காதலனும் இப்படியேதான் எனக்கு வாக்களித்திருக்கிறார்! தம் தேகத்தில் சக்தி திரும்பியதும் தம்மைப் பற்றிய விவரங்களை ஆதியோடு அந்தமாக விவரிப்பதாய்க் கூறினார். அதன் பிறகுதான் உங்களை அழைத்துப் போக நான் வந்தேன்."

"அவர் வாழ்வின் சமீப நிகழ்ச்சிகளில் எனக்கே புரியாத சில மர்மங்கள் இருக்கின்றன கமலா. கொஞ்சம் தெம்பு பெற்று அவர் அந்தப் புதிர்களை விடுவிக்க வேண்டும் என்றுதான் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றாள் பவானி.

(தொடரும்)