தந்திரம்!

பவானி வீடு திரும்பும் நோக்கில் காரில் ஏறிப் புறப்பட்டவள், பாதி தூரம் போன உடனேயே மனம் மாறியவளாக ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியார் இல்லத்துக்குச்சென்றாள்.

பவானியைப் பார்த்ததுமே அவர், "வாங்க, வாங்க! ஒரு வார்த்தை சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே" என்றார்.

"அழகுதான் நீங்கள் எவ்வளவு பெரிய ஸீனியர் லாயர்! உங்களை நான் கூப்பிட்டுஅனுப்புவதா?"

"வயதால் பெரியவனாக இருந்தால் போதுமா? செல்வாக்கு என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதோடு பெண்மைக்குரிய சலுகைகளும் உங்களுக்கு உண்டு. அதை மதிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது."

"உங்கள் வாதம் இரண்டையும் நான் ஏற்பதற்கில்லை. இந்த ஊரில் உங்களுக்கு இல்லாத செல்வாக்கு நேற்று வந்த எனக்கு என்ன இருக்கிறது?" என்றாள் பவானி. "இரண்டாவது, ஆண்களோடு சரிநிகர் சமானமாகக் கருதப்பட வேண்டும் என்றுதான் என்போன்றவர்கள் ஆசைப்படுவோமே யன்றிப் பெண் என்பதற்காகத் தனிச் சலுகை காண்பிப்பதை விரும்ப மாட்டோம்."

"சரி, உங்கள் விஜயம் அடியேனுக்கு நீங்கள் அளித்த கௌரவமாகவே இருக்கட்டும். என்ன சாப்பிடுகிறீர்கள்? காப்பி, டீ,ஓவல்டின்...."

உள்ளே செல்லத்தின் குரல் உரக்கக் கேட்டது. "நானும் இரண்டு நாட்களாக முட்டிக் கொண்டிருக்கிறேன். 'காப்பிக் கொட்டை வாங்கணும்' என்று. யாராவது காதில் போட்டுக் கொண்டால்தானே? ஒருத்தர் சட்டப் புத்தகமே சரணாகதின்னு அடைஞ்சு கிடக்கிறார். இன்னொருத்தன் 'நாடகம், நாடகம்' என்று கூத்தடிக்கிறான். இந்த லட்சணத்தில் வரவங்க போறவங்க எல்லோருக்கும் எப்படியாவது நான் காப்பி போட்டுக் கொடுத்தாக வேண்டும்! நான் என்ன மந்திரக்கோல் வைச்சுக்கிட்டிருக்கேனா, இல்லை, குழாயைத் திறந்தால் காப்பியா கொட்டுமா?"

பவானி கலவரம் அடைந்தவளாக, "நோ, நோ! எனக்கு ஒன்றுமே வேண்டாம் ஸார்!"என்றாள்.

"காப்பி வேண்டாம். மோர்? சாத்தீர்த்தம்? தண்ணீர்?"

"எதுவும் வேண்டாம். நான் இப்பத்தான் நம்முடைய சங்கத்தில் டிபன், காப்பி சாப்பிட்டுவிட்டு வந்தேன்."

"நாடக ஒத்திகை நடக்கிறதோ இல்லையோ, டிபன் காப்பியை எல்லாரும் கச்சிதமாக முடித்துக் கொள்வீர்கள் போலிருக்கு."

"நேற்று வரை ஒத்திகை சரியாகத்தான் சார் நடந்தது. இன்றுதான் தகராறாகிவிட்டது. நானும் கிளம்பி வந்துவிட்டேன்."

"ஏன் என்ன விஷயம்?"

"கல்யாண விஷயம்தான்."

"என்ன பண்ணினான் அவன்? வர வர அவன் போக்கே எனக்குப் பிடிக்கவில்லை. ரொம்ப அதிகப்பிரசங்கியாக இருக்கிறான். பாருங்க, 'ஏண்டா, நாடகத்தில் எனக்கு ஒரு சான்ஸ் தர வேண்டாமா? என்றால் சிரிக்கிறான். எனக்கு நடிக்கத் தெரியாதாம். நீங்க பார்த்திருக்கிறீங்களா? ஹாம்லெட்.... 'டு பீ ஆர் நாட் டு பீ'....ன்னு நான் ஆரம்பிச்சா....."

"அடடா! நான் உங்க மகன் கல்யாணத்தைக் குறிப்பிடவில்லை. அவர் 'அக்கிரமக் கல்யாணம்' என்று கருதுகிற ஒரு திருமணத்தைப் பற்றிப் பேச வந்தேன்."

"அதென்ன புது மாதிரி கல்யாணம்? வைதிகக் கல்யாணம், சீர்திருத்தக் கல்யாணம் என்றெல்லாம் தான் உண்டு. அக்கிரமக் கல்யாணம் என்று புதிதாக ஒன்று முளைத்திருக்கிறதா?"

"ஸார்! வேடிக்கைக்கு இது நேரமில்லை. ரங்கநாத முதலியார் உங்க 'கிளையண்ட்' தானே? அதனால் உங்களிடம் பேசிவிட்டுப் போவது நல்லது என்று நினைத்தேன். அவர் கமலாவை மணந்துகொள்ளப் போகிறார். நாளைக்குத் திருநீர்மலையில் யாரும் அறியாமல் தாலி கட்டிவிட ஏற்பாடு. ஆனால் இந்த விஷயம் உங்கள் பிள்ளைக்குத் தெரிந்துவிட் டது. தமது நண்பர்களோடு பெருங்கூட்டமாகப் பஸ்ஸில் புறப்பட்டுப் போய்க் கல்யாணத்தை நிறுத்திவிடத் தீர்மானித்திருக்கிறார்."

"நிறுத்திவிட்டுப் போகட்டுமே, உங்களுக்கு அதனால் என்ன நஷ்டம்?"

"ரங்கநாதனுக்கு நீங்கள்தானே வக்கீல்?"

"ஆமாம், அதனால் அவர் செய்கிற அக்கிரமத்துக்கெல்லாம் பக்கபலமாக நிற்க வேண்டுமா?"

"நான் அப்படிச் சொல்லவில்லை."

"மிஸ் பவானி, உங்களுக்குக் கமலா மீது என்ன கோபம்? அவள் அந்தக் கிழவருக்கு வாழ்க்கைப்பட்டுவிட வேண்டும் என்பதில் உங்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை?"

"நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். கமலாவின் உள்ளம் எனக்கு நன்றாகத் தெரியும். அவளிடம் எனக்குள்ள அக்கறையால்தான் நான் வாதாடுகிறேன். அவள் முழுச் சம்மதத்துடன் இந்தத் திருமணம் நடக்கிறது என்றே நான் நம்புகிறேன். அப்படியானால் இவர்கள் போய்க் கல்யாணத்தை நிறுத்த என்ன உரிமை பெற்றிருக்கிறார்கள்? மேலும் ரங்கநாதமுதலியாரின் வக்கீல் என்ற முறையில் அவருக்கு மணப் பந்தலில் நேரக்கூடிய அவமானத்தை நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ என் நோக்கத்தையே சந்தேகிக்கிறீர்கள்."

"கல்யாணம் வரட்டும். விசாரிக்கிறேன்" என்றார் கோபால கிருஷ்ணன். "உங்களுக்குப் பழமொழி தெரியும் இல்லையா? 'குரைக்கும் நாய் கடிக்காது' என்று. இவர்கள் வாய்ச் சொல் வீரர்கள்."

"அப்படித் தோன்றவில்லை. தீவிரமாய் இருக்கிறார்கள். இவர்கள் ரத்தம் கொதிக்கிறதாம்."

'அடடா! அது ஆபத்தாயிற்றே! ஆற வைத்துவிட வேண்டியதுதான்."

"ஆறாதாம்! இவர்கள் உடலில் ஓடுவது தமிழ் ரத்தமாம்!"

"அடேடே! அப்படியானால் மற்றவர் உடம்பில் ஓடுவது இங்கிலீஷ் ரத்தமோ?"

"இன்று மாலையே அவர்கள் பஸ்ஸில் புறப்படுகிறார்கள். விடிவதற்குமுன் திருநீர்மலை போய்ச் சேர்ந்துவிட உத்தேசம்."

"நானும் போகிறேன். பின்னோடு."

"அவர்கள் கல்யாணத்தைத் தாலி கட்டும் சமயத்தில் நிறுத்திவிடப் போவதாகச் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஊரில் இரண்டாம் பேர் அறியாமல் திருமணத்தை முடித்துக் கொள்ளத் தீர்மானித்த ரங்கநாதனை வியப்பில் ஆழ்த்தவே போவதாகப் பாவனை செய்வார்கள். போய், 'அத்தனை பேருக்கும் கல்யாண விருந்து ஏற்பாடு செய்தால்தான் ஆச்சு' என்று பிடிவாதம் பிடிக்கப் போவதாகச் சொல்வார்கள்."

"நியாயம்தானே! அவருடைய வக்கீலான எனக்கே விஷயம் தெரிவிக்கவில்லையே அவர். நானும் இவர்களோடு போய் நிற்கத்தான் போகிறேன். தாலி கட்டி முடிந்த பிறகு இரண்டு தொன்னை பாயசமாவது உறிஞ்சிக் குடிக்காமல் ஊர் திரும்பப் போவதில்லை."

பவானி புன்னகையுடன், "பெஸ்ட் ஆஃப் லக், நான் வரட்டுமா?" என்றாள்.

"சீக்கிரம் கிளம்புங்கள். கல்யாணம் வரும் போது நீங்கள் இங்கிருப்பது நல்லதில்லை."

பவானி வாசலுக்கு வந்தபோது உள்ளேசெல்லத்தின் குரல் பெரிதாக ஒலித்தது.

"அந்த ராங்கிக்காரி மினுக்கிக் கொண்டு வந்து நம்ம குழந்தையைப் பற்றி என்னென்னமோ பழி சுமத்திட்டுப் போறா. நீங்களும் பல்லை இளிச்சுக்கிட்டுக் கேட்டுக்கிட்டிருக்கீங்களே!"

"இந்தா, வாயை மூடு!" என்று அவளுக்கும் மேலே குரலை உயர்த்தி அதட்டினார் கோபாலகிருஷ்ணன். "உன் பிள்ளைக்கு ஏகமாய்ச் செல்லம் கொடுக்கப் போக இப்போ அவன், நான் வெளியே தலைகாட்டவே முடியாதபடி செய்துவிடுவான் போலிருக்கு. இங்கே பவானி வந்து போனதைப் பற்றி நீ மூச்சு விடப்படாது. மீறி வாயைத் திறந்தே உன்னைத் தள்ளி வைச்சுட்டு அந்தப் பவானி யையே இரண்டாம்தாரமாய்க் கல்யாணம் செய்து கொண்டுவிடுவேன்! தெரிந்ததா? உம்!"

பவானி காரியசித்தியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் காரில் ஏறினாள். 'இப்பத்தான் உண்மையான ஹோம்ரூல் - வீட்டை ஆளும் - கோபாலகிருஷ்ணன்!" என்று அவள் வாய் முணுமுணுத்தது.