கப்பல் போன்ற கார்
கல்யாணம் தனது காரின் ஹாரனை அழுத்தினான். இஞ்சின் போட்ட கடபுடா சத்தத்துக்கும் மேலாக அது, "பாம்! பபாம்! பாம்" என்று ஒலித்தது. அப்படி அவன் ஹாரனை உற்சாகமாக முழக்கியதற்குக் காரணம், சாலையின் குறுக்கே மாட்டு மந்தையோ அல்லது அதிகமான மனித நடமாட்டமோ இருந்ததால் அல்ல, தெரு ஓரத்தில் சென்று கொண்டிருந்த விசுவின் கவனத்தைக் கவரவே.
விசு ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு அலட்சியமாக நடந்து கொண்டிருந்தான். அது கல்யாணத்தை வியப்பில் ஆழ்த்தியது. வழக்கமாகக் கல்யாணம் காரில் செல்வதைப் பார்த்தால், கை காட்டி நிறுத்தி, "மாமா! மாமா! லிஃப்ட் மாமா? பள்ளிக்கூட வாசலில் விட வேண்டாம். அந்தத் தெரு முனையில் நிறுத்திண்டால் இறங்கிக்கறேன். நீங்க நேரே கோர்ட்டுக்கோ, கிளப்புக்கோ போய் விடலாம்" என்று கெஞ்சுவான் விசு. கல்யாணம் சும்மாவாவது சற்று நேரம் பிகு பண்ணிக் கொண்டிருந்து விட்டுப் பிறகு ஏற்றிக் கொள்வான். ஆனால் இன்று விசு வண்டியை நிறுத்தாததுடன், கல்யாணம் அழைத்தும் திரும்பிப் பார்க்கவில்லை. 'என்ன திடீர் கர்வம் வந்து விட்டது இந்தப் பயலுக்கு? அல்லது யாரேனும் என்னைப் பற்றி ஏதாவது தாறுமாறாகக் கூறிப் பேசிப் பழகுவதற்குத் தடை உத்தரவு போட்டிருக்கிறார்களா?' தெரிந்து கொள்ளாமல் மேலே செல்வதற்குப் பிடிக்கவில்லை கல்யாணத்துக்கு. சிறுவன் தானே என்று அலட்சியப்படுத்த அவன் சுபாவம் இடம் தரவில்லை.
காரைச் சாலை ஓரமாகச் செலுத்தி நிறுத்தினான். இடப் பக்கத்துக் கதவைத் திறந்து விட்டு, "ஏறிக்கொள் விசு" என்றான்.
"வேண்டாம் மாமா! எனக்கு டப்பா கார் பிடிக்காது! நீங்க போங்க!" என்றான் விசு.
"ஆமாம், நீ பெரிய கோமகன் பாரு! உனக்கு முன்னால் ரோல்ஸ் ராய்ஸ் கார் வந்துநிற்கும்!"
"ரோல்ஸ் ராய்ஸ் இல்லே மாமா; பிளிமத்! பெரிய்ய்ய்ய கார்! கப்பலத்தனை பெரிசு! அதிலேதான் இனிமேல் போவேன்!"
கல்யாணம் துணுக்குற்றான். 'என்ன சொல்கிறான் இவன்? திடீரென்று அத்தனை ஐசுவரியம் இந்தக் குடும்பத்துக்கு எப்படிக்கிடைத்தது?'
"பலே! லேட்டஸ்ட் மாடலா? ஸ்டீரிங் கீரா?" விசுவிடம பேச்சை வளர்க்க அவனுக்குப் பிடிச்ச திசையிலேயே உரையாடலைத் தொடர்ந்தான் கல்யாணம்.
"ஆமாம் மாமா! மாக்ஸிமம் ஸ்பீட் மணிக்கு 120 மைல். ஆனால் இந்த ஊருக்குள் அத்தனை வேகமாகப் போக முடியாது. இங்கே எருமை மாடுகளுடனும் கழுதைகளுடனும் போட்டி போட்டுக் கொண்டு மனுஷாளும் நடு ரோட்டுக்குச் சொந்தம் கொண்டாடறாளே. மெட்ராஸ் ட்ரங்க் ரோடிலே ஓட்டி னால் நூறுமைல் வேகத்திலே பிய்ச்சுக்கும் கார்! மலை மேலே எல்லாம் 'அலாக்கா' ஏறும். உங்க டப்பாக் கார் மாதிரி இஞ்சின் ஹீட் ஆகி ரேடியேட்டர் கொதிக்காது."
கல்யாணத்துக்குச் சந்தேகம் தட்டியது. 'ராமப்பட்டணத்திலே பெரிய கார் வைத்திருப்பவர்கள் எண்ணி இரண்டோ மூன்றோ பேர்கள்தாம். அவர்களில் பிளிமத் சொந்தக்காரர் ரங்கநாத முதலியார்!'
"நீலக் கலரா?"
"இல்லை, பச்சை! லைட் கிரீன்."
'சந்தேகமே யில்லை. ரங்கநாத முதலியார் காரைத்தான் குறிப்பிடுகிறான், விசு!'
"ரங்கநாதன் ஜாலி ரைட் அழைச்சுண்டு போனாரா?"
"இல்லையே. கடைத் தெருவுக்குப் போகக் கார் வேணும்னு கேட்டோம். அனுப்பிச்சார். அப்புறம் திருநீர்மலைக்குப் போகப் போகிறோம்."
'ரங்கநாதனா கார் அனுப்பினார்! அழுக்காகி விடும் என்று தாமே அதில் ஏறத் தயங்குபவ ராயிற்றே! ராமப்பட்டணத்துக்குள் முக்கால் வாசி இடங்களுக்கு நடந்தே போய் விடுவாரே! அவர் இவர்களுக்குக் கார் தருவவாவது? அதுவும் திருநீர்மலைக்குப் போக?'
"அங்கே என்னடா விசேஷம்?"
"அதை மட்டும் கேட்காதீங்க மாமா! அது டாப் ஸீக்ரெட்!"
"டேய், டேய்! நேக்கு மட்டும் சொல்லுடா!"
கல்யாணம் அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டான். அவனுக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. ஆனால் உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருந்தது.
"ஐயோ, அம்மா என் முதுகிலே தோசை வார்த்துடுவா!"
"டேய்! நான் பிராமிஸ் பண்ணறேன். சத்தியமா ஒருத்தரிடமும் கூறமாட்டேன்."
"ரகசியத்தைச் சொன்னால் எனக்கு என்ன தருவே?"
"சாக்லேட்!"
"பூ! எங்க வீட்டிலே நேற்றுதான் பெரிய டப்பா நிறையச் சாக்லேட் வாங்கி இருக்கா அம்மா!"
'ஆமாம், ஆமாம்! பிளிமத் காரிலே போகிறவனுக்கு சாக்லேட் என்ன பிரமாதம்! ரங்கநாதன் சாக்லேட் தொழிற்சாலையையே வாங்கிக் கொடுத்து விடுவாரே! அவரால் கொடுக்க முடியாத விஷயமாச் சொல்லி இவனுக்கு ஆசை காட்ட வேண்டும்.'
"உன் பள்ளிக்கூடம் இருக்கிற தெரு முனை வரையில் இந்தக் காரை நீ ஓட்டி வரலாம்" என்றான் கல்யாணம்.
விசுவின் முகம் உடனே பிரகாசமடைந்தது. "கியர் போடலாமா?"
"ஓ எஸ்! ஆனா நான் சொன்னபடி கேட்டுச் சமர்த்தா நடக்கணும். இல்லாதபோனால் ஆக்ஸிடெண்ட் ஆயிடும்."
"சேச்சே! ஐயா ஓட்டும்போது ஆக்ஸிடெண்ட் ஆகிறதாவது! எத்தனை வருஷ சர்வீஸ் எனக்கு? ஹூம்" என்று பெரிய மனித தோரணையில் பேசியவாறு காரில் ஏறிக் கல்யாணத்துக்கு மிக அருகே இடப்புறமாக மண்டியிட்டு அமர்ந்தான் விசு. "கிளட்ச்சை அழுத்துங்க மாமா! காரை ஸ்டார்ட் பண்ணி கியர் போடறேன்" என்றான், வலக்கரத்தால் ஸ்டியரிங்கைப் பற்றியபடி.
'பிள்ளையாரப்பா! ஆபத்து ஒன்றும் நேராமல் காப்பாற்று' என்று வேண்டிக் கொண்டான் கல்யாணம்.

