உல்லாச வேளை
அன்று மாலை வாங்கிய ஓர் உயர் ரக விஸ்கி பாட்டிலுடன் கோவர்த்தனனைப் பார்க்கப்போனான் கலயாணம். மல்லிகை மலர்ந்து மணம் பரப்பும் நேரம். கோவர்த்தனன் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகையுடன் நைட் குவீன் மலர்களின் மணமும் சேர்ந்து நறுமணம் கனமாகச் சூழ்ந்திருந்தது.
"எங்கேப்பா வந்தாய் மறுபடியும்?" என்றார் கோவர்த்தனன்.
"உங்கள் வெற்றியைக் கொண்டாடத்தான் ஸார்!" என்று சொல்லிக் கொண்டேதான் கொண்டு வந்திருந்த பொட்டலத்தைப் பிரித்தான் கல்யாணம்.
"எதைச் சொல்கிறாய்? என்ன வெற்றி பெற்றுவிட்டேன் நான்?" " என்ன ஸார், அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? மிஸ்டர் இன்ஃபுளூவென்ஸாவைப் பிடித்து உள்ளே தள்ளவில்லையா? இனிமேல் பவானியை நீங்கள் அடையத் தடை என்ன இருக்கிறது? முகூர்த்த நாள் பார்க்க வேண்டியதுதானே பாக்கி?" என்ற கல்யாணம் பிரித்த பெட்டிக்குள்ளிருந்து மதுப் பாட்டிலை எடுத்து மேஜையின் மீது வைத்தான்.
முழுசும் புதுசுமான ஜானிவாக்கர் புட்டியைப் பார்த்ததும் கோவர்த்தனன் முகம் மலர்ந்தது.
"அதைச் சொல்கிறாயா? பவானி அந்தத் தடியனிடமிருந்து காப்பாற்றப்பட்டதற்குச் சந்தோஷப்படவேண்டியதுதான். கம் லெட் அஸ் ஸெலிபரேட்! யூ மஸ்ட் ஜாயின் மி" என்றார் கோவர்த்தனன். தோட்டக்காரனை அழைத்து வராந்தாவிலிருந்த வசதியான நாற்காலிகள் இரண்டைத் தோட்டத்தில் எடுத்துப் போடச்சொன்னார். "இந்தாப்பா! அந்தக் காஃபி டேபிளையும் இப்படி கொண்டு வந்து போடு. அப்புறம் மணியைக் கூப்பிடு" என்றார்.
"இத்தனை மல்லி மலர்களின் வாசனையும் இனி வீண்போகாது ஸார். சரம் சரமாகத் தொடுக்கச் செய்து பவானிக்குக் கொண்டையைச் சுற்றி நீங்களே உங்கள் கரத்தால் சூட்டலாம்" என்றான் கல்யாணம்.
கோவர்த்தனன் அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்தார். உற்சாகமாக, " உன்னை என்னமோ என்று நினைத்தேன். ரொம்ப சாமர்த்தியமாகப் பேசுகிறாயே" என்றவர், சமையல் அறையிலிருந்து வந்து நின்ற மணியைப் பார்த்து," சோடா,ஐஸ் கொண்டு வா. அப்படியே கொரிக்க ஏதாவது வைச்சிருப்பியே, அதையும் எடுத்து வா" என்றார்.
"கூடவே கொஞ்சம் சர்க்கரையும் வேண்டும்" என்றான் கல்யாணம். மணி தன்னை அப்போது பார்த்த பார்வையில் ஒருவித எதிர்ப்பு குடிகொண்டிருப்பது கல்யாணத்துக்குப் புரிந்தது. ஆனால் ஏன், எதற்காக என்பதை அவனால் உணர முடியவில்லை.
"சர்க்கரை எதற்கு?" என்றார் கோவர்த்தனன்.
"கமலாவுக்கும் எனக்கும் கல்யாணம். பவானிக்கும் உங்களுக்கும் கல்யாணம். நீங்கள் என் வாயில் சர்க்கரை போடுங்கள். நான் பதிலுக்கு உங்கள் நாவை இனிக்கச் செய்கிறேன்"
"பேஷ், பேஷ்!" என்று தலையசைத்தார் கோவர்த்தனன்.
சில வினாடிகளில் உருளைக்கிழங்கு வறுவல்,வறுத்த முந்திரிப் பருப்பு, காரா பூந்தி, ஐஸ் சோடா, சர்க்கரை எல்லாம் வ்ந்து சேர்ந்தன.
அவற்றை வைத்துவிட்டு ஏதோ கூற விரும்பியவர் போல ஒரு கணம் தயங்கினார் மணி. அதற்குள், " நீ போகலாம்" என்று அவரை அனுப்பி விட்டார் கோவர்த்தனன்.
" இந்த சமையல்காரரை எங்கே பிடித்தீர்கள்?" என்றான் கல்யாணம்.
"ரொம்ப காலமாக எங்கள் வீட்டிலேயே இருக்கிறான். என்னைத் தூக்கி வளர்த்து எல் லாம் செய்திருக்கிறான். அதனால் அவனுக்குக் கொஞ்சம் சலுகை அதிகம். இப்போ நீ இங்கிருப்பதால் வாயை மூடிக் கொண்டு போய் விட்டான். இல்லாத போனால் நான் குடிக்கக் கூடாது, சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சண்டை பிடித்திருப்பான். அப்புறம் ஓர் அதட்டல் போட்டுத்தான் அவனை அடக்க வேண்டியிருக்கும். தினமும் இவனுடன் இது விஷயத்தில் ஒரு போராட்டம் நடத்துகிறேன். ஆனால் மனுஷன் ரொம்ப நல்ல மாதிரி. கமான் ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்" என்றார் கோவர்த்தனன்.
"எஸ், ஐ வில் ஹெல்ப் மை ஸெல்ஃப்" என்று கல்யாணம் தனது டிரிங்கைத் தானே தயாரித்துக் கொள்ள ஆரம்பித்தான். பாண்ட் பாக்கெட்டிலிருந்து இரண்டு எலுமிச்சம் பழங்கள் வெளிப்பட்டன. சாவிக்கொத்திலிருந்த பேனாக் கத்தியால் ஒரு பழத்தை வெட்டிச் சாறு பிழிந்தான், இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டுச் சோடாவைக் கலந்தான். லெமனேடைக் கரத்தில் ஏந்தி "சீர்ஸ்" என்றான்
கோவர்த்தனன் அசட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு "சீர்ஸ்" என்று கூறி விஸ்கியை விழுங்கினார்.
"பவானிக்கு விடுதலை கிடைக்கச் செய்து விட்டீர்களாமே, எப்படி ஸார் அதைச் சாதித்தீர்கள்? நீங்கள் விருமபியபடி அவள் வாக்குமூலம் எழுதிக் கொடுத்து விட்டாளா?"
" அவள் தரவில்லை, அதனால் என்ன? உமாகாந்தனே எழுதிக் கொடுத்துவிட்டான். அது போதாதா?"
"பேஷாகப்போதும். இப்போது உமாகாந்தன் நிலை என்ன?"
" பழைய பாக்கி இரண்டு வருஷங்கள். இப்போ தப்பி ஓடிய குற்றத்துக்காக மேலும் மூன்று வருஷங்கள்....."
" ஆக மொத்தம் ஐந்து வருஷங்கள்."
" அவசரப்படாதே, அப்பா! அவனைப் போலீஸார் பிடித்துச் சோதித்தபோது அவனிடம் நேதாஜியின் இயக்கம் பற்றிய பிரசாரப் பிரசுரங்கள் பல இருந்தன. நேதாஜியின் படங்களையும் ஏராளமாய் வைத்திருந்தாள்.
அவற்றை ரகசியமாக விநியோகிக்க எண்ணியிருக்கிறான். ராஜத்துவேஷக் குறச்சாட்டும் சேர்ந்துகொள்கிறது."
"அதற்கு மேலும் இரண்டு வருஷங்கள் தீட்டிவிட வேண்டியதுதானே! ஏழு வருஷங்களுக்குக் கவலை இல்லை" என்ற கல்யாணம் திடீரென்று நினைத்துக் கொண்டவன் போலக் கேட்டான்: "ஏன் சார், நான் கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே...... உங்களுக்கும் உமாகாந்தனுக்கும் இடையில் முக ஜாடையில் நிறைய ஒற்றுமை இருக்கிறதே?"
"அது விஷயம் தெரியாதா, உனக்கு?" என்றார் கோவர்த்தனன். "அவன் என் சொந்தத் தம்பிதான்."
"அதானே பார்த்தேன். அவனைத் தேடிக் கொண்டு ஸி.ஐ.டிகள் அவன் போட்டோவை ஒரு சமயம் என்னிடம் ஏலமலைக் கிராமம் ஒன்றில் காண்பித்தார்கள். 'இவனை எங்காவது பார்த்ததுண்டா?' என்றார்கள். எனக்கு உடனே உங்கள் ஞாபகம் வந்தது. ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை. 'எதற்கு வம்பு' என்ற பேசாமல் இருந்துவிட்டேன்."
அதனால் என்ன? அவர்கள் வேறு பலரிடம் விசாரித்துக் கொண்டு கடைசியில் என்னைத் தேடியே வந்துவிட்டார்கள். அப்படி வந்ததே நல்லதாயிற்று. நான் என் அதிகாரத்தைக் காட்டியதில்தான் அவர்கள் சுறுசுறுப்படைந்தார்கள். இல்லாத போனால் அந்தச் சோம்பேறிகளாவது உமாகாந்தனைப் பிடிப்பதாவது?"
அது சரி சார், சொந்தத் தம்பியைப் பிடிப்பதில் நீங்கள் இவ்வளவு தீவிரம் காட்ட வேண்டுமா? அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்கத்தான் வேண்டுமா? தம்பியாச்சே என்று இலேசான தண்டனையுடன் விட்டுவிடக்கூடாதா?"
இப்படிக் கேட்ட கல்யாணம் கோவர்த்தனனுக்குப் பின்னால் அடர்ந்து உயர்ந்து வளர்ந்திருந்த குரோட்டன்ஸ் செடியின் மறைவில் ஏதோ அசைவது உணர்ந்து துணுக்குற்றான். அது சமையல்காரர் மணி என்பது தெரிந்ததும் அவனுக்குப் பரபரப்பு ஏற்பட்டது. 'எதற்கு அவன் இப்படி ஒளிந்திருந்து சம்பாஷணையை ஒட்டுக் கேட்கிறான்?" மணி மறைந்திருப்பதைக் கவனியாததுபோல் நடந்து கொண்டான் கல்யாணம்.
இதற்குள் இரண்டு தடவை பாட்டிலைக் கண்ணாடி டம்ளரில் கவிழ்த்த கோவர்த்தனன் கல்யாணத்தினிடம் ஏற்பட்டிருந்த மாறுதல் எதையும் கவனிக்கவில்லை. அவனுக்குப் பதில் கூறும் முகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
"மிஸ்டர் கல்யாணம்! சட்டம் என்று வரும்போது அங்கே அண்ணன் தம்பி உறவுக்கு இடமேதும் இல்லை. முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் வக்கீலாகிய உனக்கு இது தெரிய வேண்டாமா?"
" வாஸ்தவம்தான் ஸார்" என்றான் கல்யாணம். அதே சமயம் மறைவிலிருந்த மணி தன் கைகளைப் பிசைவதையும் கவனித்துவிட்டான்.
(தொடரும்)

