அடிபடாத மான்!
கமலாவின் வீட்டைப் பவானியின் கார் நெருங்க நெருங்க உள்ளே அமர்ந்திருந்த பெண்கள் இருவரும் மனத்தால் நெருங்கி நெருங்கி வந்துகொண்டிருந்தார்கள். ஒருவர் மனம் மற்றொருவருக்கு ஒளிவு மறைவு ஏதுமின்றிப் புலனாகி விட்டதால் ஏற்பட்ட புதியதொரு பந்த பாசத்துடன் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"சீக்கிரமே உமாகாந்த் சுகமடைந்து உங்கள் இருவரையும் மாலையும் கழுத்துமாகப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது அக்கா!" என்றாள் கமலா.
"அது சுலப சாத்தியமாகத் தோன்றவில்லையே?" என்று பவானி சொன்னபோது குரலில் ஏக்கத்தை விடக் கவலை அதிகமாகத் தொனித்தது. "ஸி.ஐ.டி.கள் இருவர் இவரைத் தேடிக் கொண்டே இருக்கும்போது ஊரறிய எப்படித் திருமணம் நடக்கமுடியும்?"
"அப்படியானால் ரகசியமாக ஒரு கோயிலில் விவாகம் பண்ணிக் கொள்ளுங்கள்! சுவாமி சந்நிதி முன் மாலை மாற்றிக் கொள்ளுங்கள். சாட்சிக்கு என்னை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். நாத்தனார் ஸ்தானத்திலிருந்து மூன்றாவது முடிச்சை நான் அழுத்தமாகப் போடுகிறேன்!"
"ரகசியமாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டு விடலாம். ஆனால் ரகசியமாக இல்வாழ்க்கை எத்தனை காலம் நடத்த முடியும்? வீட்டிலேயே சதா ஒளிந்திருந்து உமா காந்த் என் சம்பாத்தியத்தில் வாழ விரும்புவாரா என்பது தெரிய வேண்டும்."
"அப்படியானால் நம் இருவருக்கு மிடையில் கல்யாண விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை அக்கா. இருவருக்குமே திருமணம் நடக்கவே போகிறதில்லை!"
"ஏன் கமலா அப்படிச் சொல்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு? கல்யாணம் உன்னை மணப்பதாகக் கோர்ட்டிலேயே உறுதி கூறினாரே!"
"அவர் தயாராக இருக்கலாம். அவர் தாயார் குறுக்கே நிற்கிறாரே! ஊரார் இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அந்த அம்மாள் எங்கள் வீட்டுக்கு வந்து ரொம்பவும் அவமானப் படுத்தி ஏசிப் பேசிவிட்டார் அக்கா!"
கமலா தொடர்ந்து விவரித்ததை யெல்லாம் கேட்ட பவானி, கடைசியில், "அடி அசடே! இதற்காக நீ உயிரை விட நினைத்தது சுத்த தப்பு. கல்யாணம் உண்மையில் உன்னிடம் ரொம்ப ஆசையாக இருக்கிறார். அவர் அம்மாவை நீ கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லையே? அவள் ஏதோ உளறியதற்காக நீ ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றாள்.
"அக்கா! உங்கள் சமாதானம் கொஞ்சம் கூட அர்த்தமுள்ளதாகவோ ஏற்கக் கூடிய தாகவோ இல்லை. ஆனாலும் நீங்கள் எனக்குச் சமாதானம் சொல்கிறீர்களே, அதுவே எனக்குப் பெரிய ஆறுதல். எது எப்படிப் போனாலும் உங்கள் அன்பும் நட்பும் எனக்குக் கிடைக்குமென்றால் அதற்காகவே எத்தனை ஜன்மா வேணுமானாலும் எடுத்து அவற்றில் எத்தனை துன்பங்கள் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். அப்படிப் பார்க்கும்போது நான் உயிரை விட நினைத்தது வடிகட்டின அசட்டுத்தனம்தான்" என்றாள் கமலா.
வீட்டு வாசலில் பவானியின் கார் நின்றபோது அங்கே ஏற்கனவே கல்யாணத்தின் 'டப்பா மாடல்' கார் நின்று கொண்டிருந்தது. "அடடே! கல்யாணம் வந்திருக்கிறார் போலிருக்கிறதே" என்றாள் பவானி.
"அக்கா! தீப்பெட்டிகளுக்கு ரொம்ப நன்றி. மறக்காமல் மருந்து வாங்கிக் கொண்டு போங்கள்" என்று கூறிவிட்டு இறங்கினாள் கமலா.
ஆனால் பவானி அவளை வாசலில் இறக்கிவிட்டுப் போகத் தயாராக இல்லை. "அடி கள்ளி! காதலன் வந்தவுடன் என்னை நைஸாக அனுப்பிவிடப் பார்க்கிறாயா? முடியாது! உள்ளே வந்துவிட்டுத்தான் போவேன்" என்று கூறியபடியே இறங்கினாள் பவானி. உண்மையில் இவ்வளவு கால தாமதமாக வந்ததற்காகக் கமலாவுக்கு 'அர்ச்சனை' நடக்கப் போகிறதே என்ற கவலையில்தான் அவளைப் பின்தொடர்ந்தாள் பவானி.
* * * *
கல்யாணம் ரேழியைத் தாண்டி வந்து நின்றான்.
சாய்வு நாற்காலியில் சயனித்திருந்த மாசிலாமணி, அந்த இடத்தை விட்டு அசையாமல், "எங்கே வந்தாப்போல?" என்றார்.
"சும்மாத்தான், பார்த்து விட்டுப் போகலாம்னு..." என்றான் கல்யாணம்.
"பார்த்தாச்சுல்ல?"
கல்யாணத்துக்கு ரோஷமாக இருந்தது. 'விருட்'டென்று திரும்பிவிட வேண்டும்போல் இருந்தது. ஆனால் சிரமப்பட்டு அந்த எண்ணத்தை அடக்கிக் கொண்டான். தன் தாயார் மீது தவறு இருக்கலாம்; தானும் அவர்களுக்கு அவமானம் தேடித் தந்தவன்தான். எனவே பல்லைக் கடித்துக் கொண்டு தன்மானத்தை மென்று விழுங்கிவிட்டுப் பேசினான்.
"இதைக் கேளுங்க, மாசிலாமணி! நீங்க வருத்தப்படறதிலே நியாயம் இருக்கு. சற்று முன்னால் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருக்கும் விசுவைச் சந்தித்தேன். என் அம்மா நேற்று இங்கு வந்துவிட்டுப் போனதாக அவன் சொன்னான். அவனுக்கு விஷயம் ஒன்றும் சரியாக விளங்கவில்லை. ஆனால் குரல் உயர்ந்து வாக்குவாதம் நடந்தது என்ற அளவுக்குப் புரிந்து கொண்டு சொன்னான். அப்புறம் நீங்க யாரும் இரவு சாப்பிடலை என்றும் கமலா அக்கா அழுதுகொண்டே தனக்கு மட்டும் சாதம் போட்டதாகவும் கூறினான். அதிலிருந்து ஏதோ விபரீதமாக நடந்திருப்பதாகப் புரிந்து கொண்டேன். நான் இப்போ இங்கே வந்ததற்கே அதுதான் காரணம். என்ன நடந்தது என்று நீங்கள் எனக்கு விவரம் ஏதும் சொல்ல வேண்டாம். எனக்கு அதைக் கேட்கப் பிடிக்கலை. என் தாயாரை நீங்க தூஷிக்க நான் கேட்டுக் கொண்டிருப்பது நாகரிகமாகாது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தீர்மானமாக வைத்துக் கொள்ளுங்கள். அன்றைக்குக் கோர்ட்டில் நான் கொடுத்த வாக்குறுதிப்படி நான் நடந்து கொள்ளத் தயார். என் தாயார் என்ன சொல்லி யிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் பெண்ணை நீங்கள் எனக்கு மணம் முடித்துக் கொடுப்பீர்களானால் நான் ஏற்கக் காத்திருக்கேன். அவளை நல்லபடியாக வைத்துக்கொள்வேன். இதனால் என் பெற்றோரிடம் நான் சண்டை போட்டுக் கொள்ள நேர்ந்தாலும் கவலைப்பட மாட்டேன். நாளடைவில் என் அம்மாவின் மனம் மாறிவிடும். அவளுக்கு நான் ஒரே பிள்ளை. கமலா தங்கமான பெண் என்பதையும் அவள் சீக்கிரமாகவே புரிந்து கொள்வாள்."
"தங்கமோ, வைரமோ இந்தப் பெண்ணையே காணோமே" என்று புலம்பினாள் சமையல் அறையிலிருந்து வெளிப்பட்ட காமாட்சி. "வேலை இங்கே எனக்கு இடுப்பு ஒடியறது. அவள் என்னடா வென்றால் பொழுது புலரும்போது 'வத்திப் பெட்டி வாங்கி வருகிறேன்' என்று போனவள்தான்.
மணி பத்தரை ஆகிறது, அவளைக் காணோம். எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது, உங்க அம்மா பேசியது பொறுக்காமல் அவள் எங்கேயாவது குளம் குட்டையைத் தேடிப் போய் விட்டாளோ என்று."
"சேச்சே! அப்படி யெல்லாம் ஒன்றும் இராது. நான் போய்த் தேடிப் பார்த்து அழைத்து வருகிறேன்" என்றான் கல்யாணம்.
இந்தச் சமயத்தில் பவானியும் கமலாவும் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள். வந்த இருவரையும் இந்த மூவரும் வியப்புடன் பார்த்தது பார்த்தபடி இருக்க, பவானி சொன்னாள்: "நல்லவேளையாகக் கல்யாணமும் இங்கே இருக்கிறார்! மூவரும் நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்தப் பெண்ணை இனிமேல் தனியாக எங்கேயும் அனுப்பாதீர்கள்! இவள் பாட்டுக்கு எதையோ குருட்டாம்போக்கில் யோசனை பண்ணிக் கொண்டு என் காரிலே வந்து முட்டிக்கொண்டு பயத்தில் மூர்ச்சையாகி விழுந்து விட்டாள். காயம் ஒன்றும் படாமல் கடவுள்தான் காப்பாற்றினார். நல்ல வேளை நான் காரை ரொம்ப மெதுவாக ஓட்டி வந்தேன். சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தினேன். இவளுக்கு பயம் பாதி, மனக் கிலேசம் பாதி. மயங்கி விழுந்து விட்டாள். காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் போய் ஆசுவாசப்படுத்தி அழைத்து வந்தேன். பெண்ணை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள். கல்யாணம்! உங்களுக்கும்தான் சொல்கிறேன், கமலா இனி உங்கள் பொறுப்பு!"
"நான் அப்பவே போக வேண்டாம்னு முட்டிண்டேன்! 'விசுவை அனுப்புடீ'ன்னேன். கேட்டாளா? இல்லையே! இனிமேல் ஒரு நிமிஷம்கூட இவளை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது!" என்றாள் காமாட்சி.
"அதற்கென்ன இனி கல்யாணம் வைச்சுச் சமாளிக்கிறார்!" என்றாள் பவானி.

