பென்சில்வேனியா

ஸ்டியரிங் ஒடித்துத் தெரு திரும்பும்போது

பின்னாலிருந்து தினமும் அவர்களைப் பார்க்கிறேன்.

காலை வெய்யிலுக்கு முதுகு காட்டிக்

கைத்தடி ஊன்றிப் போகும் தம்பதி.

பக்கத்தில் கடக்கும் போதெல்லாம்

இருமலோடு காதில் விழுவது பென்சில்வேனியா.

பென்சில்வேனியா?

பிழைக்கப் போன மகன்.

கூட்டிப்போன மருமகள்.

பார்க்காது போன குழந்தைகள்.

வாரம் ஒருமுறை டெலிபோனில்

நல்லாயிருக்கீங்களா?

உடம்பைக் கவனிச்சுக்குங்க.

இன்னும்,

மூட்டுவலி மருந்து.

பேங்க் புத்தகம்.

ஆவின் அட்டை. மின்வாரியக் கார்டு.

தடவி அலுக்காத புகைப்பட ஆல்பம்.

பூங்கா பெஞ்ச் ஒட்டுப் புல்.

பத்திரிகை பிரிக்க,

வேண்டப்பட்டவர்கள்

வரிசையாக உதிரும் 'காலமானார்'.

முகம் பார்க்காது வண்டி நகரப்

பக்கத்தில் பையன் கேட்கிறான்.

யாருப்பா?

நானில்லை. கூட

உங்கம்மாவும் இல்லை.

இப்போதைக்குச் சொல்கிறேன்.

(அம்பலம்)