நாள்

விடியும்போது ஒலிபெருக்கி எழுப்பச்

சேவல் அடித்தனர் விருந்து சமைக்க.

பூப்பு நீராடப் போனாள் சிறுமி.

காய்கறிக் கடைக்குக் கூடை சுமந்து

புடவை திருத்தி நடந்த அலிக்குச்

சோப்பு வாங்கக் கடையே திறக்கலை.

கரகக் காரனைப் பகலில் பார்த்தேன்,

நாவிதர் கடையில் ஆள்வராப் பொழுதில்

முகத்தைக் கொடுத்துத் தூங்கத் துவங்கி.

செண்டை மேளம் முழங்கும் தெருவில்

கருப்புச் சாமிகள் ஊர்வலம் வந்தனர்.

துடைக்கத் துடைக்கச் சிந்திய ரத்தம்.

நாடக அரங்கில் கூட்டம் குறைவு.

வசனம் மறந்து இருமி இறந்து

பணத்தை வாங்கி வௌியே நடந்தான்.

ஒற்றை அறையில் கூட்டத் தூக்கம்.

மனைவியை உசுப்ப அம்மா இருமினாள்.

மருந்து வாங்க மறந்து போனது.

(கணையாழி)