சாவேறு

ஆயிரம் பேர் சாவுக்கு

ஒத்தன் ஆகச் சாப்பிட்ட

ராமசுப்பனும் போனதற்கப்புறம்

சவண்டிக் கொத்தனுக்குப் பஞ்சம்.

பிரேதக்களை -

மூக்கிலே வேர்த்துடும் சாவு விழுந்தா.

பொணம் போல தூங்கறான்.

எல்லாம் சுமந்து

சாவு இல்லாத வெறும் நாளில்

பஞ்சு மெஸ்ஸுக்குத்

தண்ணி வண்டி அடித்த பேர்வழி அவன்.

நாலுநாள் தாடியோடு வக்கீல் வேதராமன்

பெண் கல்யாணத்து நாதசுரக் கச்சேரியை

மூலையில் குந்தித்

தப்புத் தாளம் போட்டு ரசித்தவனை

வைர மூக்குத்தி மின்ன மாமி எழுப்பி,

வேலை சொல்லி விலக்கினாள்,

வேதராமன் போனவாரம் போய்ச் சேர

ஆளே கிடைக்காமல் அலைந்து

மதுரையில் இருந்து ஒத்தனைக் கூட்டி வந்தது.

'நூத்து அம்பது ரூபா. பஸ் சார்ஜ் போகவர.

வென்னீர் வேணும் குளிக்க'.

சாப்பிட்டுப் போகும்போது பார்க்காமல் திரும்பி

'ஆனாலும் இது அதிகம்' என்றாள்

பிள்ளைத்தாச்சிச் சின்னவளோடு

அப்பம் வடை போட நடந்த

மூத்த பெண்.

தட்சணை இடுப்பில் முடித்த

சாஸ்திரி சொன்னார் -

'இவனும் இல்லே இனிமேலே.

டெல்லியோட போறான்.

பிள்ளைக்கு யுபிஎஸ்ஸி கெடச்சிருக்கு'.

எண்ணெய் இறங்கிய வைரமூக்குத்தி

அடகு போன மிச்சத்தில்

கழித்துக் கணக்கு எழுதிய

ஒற்றைப் பிள்ளை கேட்டான்,

'எப்ப வந்தது யுபிஎஸ்ஸி?'

(சவண்டிக்கு ஒத்தன் - சாவுச் சடங்கில் பிரேதம் சார்பில் விருந்துண்ணக் கூப்பிடப் படுகிறவன்.)

(கணையாழி)