இருபது முடியும் நேரம்

வாரும் வாரும் வளைப்போம் பிடிப்போம்

கான்க்ரீட்டும் குப்பையும் உயரும் மாநகரங்களை.

புழுதி பறக்கும் சிற்றூர்களை. மற்றும்

ஐயனார் தோளோடு ஆண்டென்னா விரியும் கிராமங்களை.

வீட்டுக்குச் சிலபேர் வீதிக்கு நூறுபேர்

வளைக்க வாகாய் எல்லா வயசிலும்.

பிரபஞ்ச அழகிகள் பிரதேச அழகிகள்

கட்டிப் போடக் கிளம்பி வருகிறார்.

வயல்களைக் கைக்கொள்வோம்.

இப்போதைய தேவை

உலகம் முழுக்க மென்று தீர்க்க

உருளைக் கிழங்கு வறுவல்.

கண்டம் தாண்டிக் கடல் தாண்டிப்

பரங்கி தேசமும் கருப்பு பூமியும்

சிகப்பு வௌிறிய தரையும் எல்லாம்

கடந்து பரவுது பரவுது புரட்சி.

உப்பு எடுப்போம் தோழரே உப்பெடுப்போம்.

பிளாஸ்டிக் உறையில் அயோடின் சிரிப்பு.

'ராசகோபாலா, வேதாரண்யம் கடைக்கு

போய்ச் சேரலேன்னு ௬போன்கால். கவனி'.

ஆட்கள் தேவை உலகச் சந்தையில்

தாதுபுஷ்டி லேகியம் விற்க.

எம்பிஏக்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

கொட்டாம்பட்டியில் நேற்றைய நிலவரம் -

நமது குளிர்பானம் மூவாயிரத்து ஏழு

அவர்கள் சரக்கு ரெண்டாயிரத்துப் பதினெட்டு.

ஆரம்பப் பள்ளி விளையாட்டுப் போட்டியில்

நம் ஆதரவு அணி வெற்றி பெற்றது.

மாற்றார் மண்ணைக் கவ்வினர்.

நிகழ்ச்சியின் இந்தப் பகுதியை வழங்கியது

யந்திரத் துடைப்பம் செய்யும்

பன்னாட்டு நிறுவனம்.

கப்பலோட்டிய தமிழன்

திரைப்படம் தொடரும்.

(கல்கி)