பாங்காக் வீதியில் பொழுது புலர்கிறது
தகரக் குடுவை கோகோகோலா படையலும்
ஊதுவத்திச் சாம்பலும் சரிகைமாலையுமாக
மசாஜ் பார்லர் வாசலில் வெள்ளைக் களிமண் புத்தன்.
பறக்கச் சிறகு விரித்த பரிவார தேவதைகள்
பக்கத்தில் காத்திருக்கும் அனுமதிக்கு.
ராத்திரி முழுக்கக் கூட இருந்த
வெள்ளைக்காரன் குழறலை
அபிநயித்துச் சிரித்த இளம்பெண்கள்
டாக்சிக்குக் காத்திருக்கும்போது
உதட்டுச் சாயம் அணிகிறார்கள்.
உள்ளே உடைகளைந்த நடனம் பார்க்க
நடுராத்திரி வரை வரவேற்ற அலிப்பையன்
கண்ணோரம் மைகசியக்
கால்பரப்பித் தூங்குகிறான் விடுதி முன்னால்.
மோட்டார் வேனில் இறைச்சியோடு
இறங்கிவந்த பெண்குழந்தை
சாப்பாட்டு வண்டியில் எண்ணெய் சுடவைத்துக்
கையுறை அணிந்து மீன்செதிள் தேய்ப்பவள்
செதுக்கி எறிவதைத் தின்ன நிற்கும்
தெருப் பூனைகளைத் துரத்தி விளையாடும்.
நடந்த இடமெல்லாம் வெள்ளி பிரேம்
கண்ணாடி கடந்து கருணை சிந்தினாலும்
இன்னும் கொடுக்க மிச்சம் உள்ள புத்தபிக்கு
அடைத்த வாசல் தோறும்
ஆசிகள் சொல்லி நடக்கிறார்.
கையில் வெற்று பிளாஸ்டிக் வாளிகள்
சுமந்து தொடரும் மடத்துப் பையன்
காணிக்கை தேடிச் சலித்த கண்களோடு
கவிச்சி நுகர்ந்து நிற்க
சாலை கடந்த பிக்கு விளித்த சரணம்
சக்கர இரைச்சலில் தேய்ந்து சுருளும்.
(அம்பலம்)

