நாளை, இல்லை மறுநாள், இல்லை என்றாவது

ராத்தங்கக் கூடாத

கிட்டப்பாவை

சாயந்திரமே எரித்தபோது

வெட்டியானுக்கு விறைப்பு.

ரெண்டு பொங்கலுக்கு

வாசலிலே நின்னு

வசவுதான் கிடைத்ததாம்.

'கட்டிக்கிட்டா போனாரு?'

கொள்ளி போட பிள்ளை

தாராள மனதோடு

கொடுத்தது இருபது ரூபாய்.

பம்பாயிலிருந்து இனிமேல்

மாதாந்திர மணியார்டர் மிச்சம்.

ஊருணிக் குளியல்.

சொறிந்து கொண்டு

கோனார் கடையில் பரோட்டா.

இழுத்து நின்ற நாய்களைப்

பிரித்து விட்டு

இரண்டாம் ஆட்டம்

பழைய படம்.

இடைவேளையில்

மூத்திரப் புரையில்

ஒருத்தன் சொன்னான் -

நாளைக்கு இண்டர்வ்யூ.

கொஞ்ச நேரத் தூக்கத்தில்

பம்பாயிலிருந்து வந்து

வெட்டியானுக்கு நூறுரூபாய்

கொடுத்தேன்.

பக்கத்தில் நின்று

அப்பா சிரித்தார்.

(கணையாழி)