விஜயனின் மாமா

அவர் ஒரு நாஜி வதை முகாமில்

கொல்லப் பட்டதாகச் சொன்னார்கள்.

தன்முறை வரக் காத்திருந்த பொழுது

சரளைக்கல் பாதையில் குடைபிடித்துக்

குரிசுப் பள்ளிக்குப் போன பாதிரியை,

வயதான யூதப் புரோகிதனை, கால் விந்தி நடந்த

வௌிச்சப்பாட்டை நினைத்துக் கொண்டாரா?

தூதப்புழை ஓரக் கிராமத்து அவர்

மேற்கில் எங்கோ மரித்த வினாடி,

ஆற்றில் குளித்து ஈரம் உடுத்து,

வேலுக் குட்டியும் நாணியும் வெள்ளாயி அப்பனும்

கூடவரச் சின்ன வயதில்

உற்சவம் முடிந்த அம்பலப் பரம்பருகே

அத்தப்பூத் தேடி நடந்த படிக்கா?

அந்த வருடம் ஓணத்துக்கு முன்பா

அப்புறமா அவரைக் கொன்றது?

மாவும் பலாவும் நிழல் விரிக்கும்

தோட்டம் தீட்டிய பழைய காகிதத்தில்

மழுங்கிய பென்சில் கொண்டு

யூத மனைவுக்குச் சொல்ல

நடுங்கும் விரல் வரைந்த ஓலைக் குடில்

அவர் நினைவின் முன்னறையிலா?

ஓடம் நகரும் வேம்பநாட்டுக் காயலின்

கதைகள் சொல்லி உறங்க வைத்த

'அச்சா' என்று அழைக்கத் தெரிந்த

அவரின் நான்கு வயது மகனை என்ன செய்தார்கள்?

விஜயனின் மாமா

யாராக இருந்தார்?

யாராக இறந்தார்?

(மலையாள எழுத்தாளர் ஒ.வி.விஜயனின் , 1940-களில் ஜெர்மானிய நாஜி வதை முகாமில் வதிக்கப்பட்ட தாய்மாமன் நினைவாக. விஜயன், மலையாள மனோரமா ஆண்டு மலரொன்றில் இடம்பெற்ற நீண்ட பேட்டியில் யூதப் பெண்ணை மணந்து ஜெர்மனி சென்று அங்கே நாஜிகளால் கொல்லப்பட்ட தன் மாமன் பற்றிச் சொல்லியிருந்ததைப் படித்ததின் பாதிப்பு)

(சுபமங்களா)