திருவாளர் சங்கப் புலவர்

ஆற்றுப் படையெழுத அச்சாரம் வாங்கி

அரண்மனைப் படிகளில் இறங்கிய புலவன்

யோசித்த படிக்குத் தெருவில் நடந்தான்.

ஆற்றங் கரையில் புதிய கூட்டம்.

ஆண்கள், பெண்கள், சின்னக் குழந்தைகள்.

துண்டு விரிப்பில் பேரியாழ் கிடந்தது.

அருகே ஒருசிசு ஒன்றுக் கிருந்தது.

பாணர்கள் குழுமிப் பல்விளக் கினார்கள்.

குந்தி யிருந்து வந்த பாணன்

அரண்மனை போக வழியைக் கேட்டான்.

புலவன் தொடங்கினான் ஆற்றுப் படுத்த.

இப்படிப் போனால் விரசாய்ப் போகலாம்.

விறலியை முன்விட்டு மெல்லநீ பின்போ.

குழந்தை இடுப்பில் கிள்ளி அழவிடு.

யாழின் நரம்பை முறுக்கிக் கட்டி

மன்னனை வாழ்த்திப் பாடணும் சத்தமாய்.

திருமகள் கேள்வன் காது மந்தம்.

ஆற்றுப் படுத்திய காரியம் முடிந்து

அருகே அமர்ந்து வெற்றிலை போட்டான்

ஊர்பேர் விவரம் உசாவிக் கொண்டு.

தொலைவில் கிழக்கே கிழக்கேயோர் நாட்டிலே

நிலம் இருந்தது உள்ளங்கை அளவு

கொஞ்சம் விளைந்தது குடும்பம் நடந்தது.

அரசன் கனவில் ஆண்டவன் வந்து

ஆற்றுப் படுகை நிலமெலாம் கேட்டதால்

பறித்துக் கொண்டனர் ஆலயம் எழுப்ப.

கோயில் குடமுழுக் காகும் போது

குடிசை பிரித்துத் துரத்தி விட்டார்கள்

குதிரை நிறுத்த இடமில்லை என்று.

சோறு தேடி அலைந்தபோது

பழைய யாழிது மலிவாய்க் கிடைத்தது.

பழகிக் கொள்கிறோம் வாசிக்க அனைவரும்.

இவள் என்மனைவி பாடத் தெரியும்

நானும் கொஞ்சம் பாட்டுக் கட்டுவேன்.

கவனப் படுத்திய பாட்டிதைக் கேட்டுத்

திருத்திக் கொடுத்தால் நன்றி உனக்கு.

எதிரி நாட்டைத் தீயிடை மடுத்தது

எல்லா வயது மங்கையர் வளையும்

நெகிழச் செய்தது, செங்கோல் சிறப்பு -

எல்லாம் கேட்டு முடித்த பின்னர்

யாழின் நரம்பை மாற்றச் சொல்லி

யோசனை தந்து புலவன் கிளம்பினான்.

ஆயிரம் ஓலை புதிதாய் வாங்கி

ஆற்றுப் படையெழுதத் தொடங்கும் முன்பு

யாப்பிலக்கணம் யாரிடம் வாங்கலாம்?