சற்றே வந்து

அன்புள்ள ஆசிரியருக்கு -

எழுதணும் எழுதணும் என்று

தள்ளிப் போய்விட்டது.

குளிர் காலமில்லையா? விடிய நேரமாகிறது.

இருட்டில் பால் வாங்கப் போனால்

வாசல் படிக்கட்டில் யாராரோ

போர்த்திக் கொண்டு தூங்குகிறார்கள்.

வாசல்படி வரிகட்டும் பிரஜைக்குப்

பாதுகாப்பு அவசியம் இல்லையா?

மரம் வைக்கிறோம் என்று பிரகஸ்பதிகள்

தெருவெல்லாம் பள்ளம் தோண்டிக்

கொப்பையும் கழியையும் ஊன்றி வைத்ததில்

கால் இடறிச் சுண்டுவிரல் நகம் உடைந்தது.

ஒரு லிட்டர் பாலுக்கு வரிசை போட்டுக்

காத்திருப்பது இந்த ஊரில்தான்.

அதுவும் பவுடர் வாடை அடிக்கிறது.

ஜனங்களுக்குப் பால் கிடைக்கச் செய்வது

அரசாங்கத்தின் தலையாய கடமையன்றோ?

இன்னும் நாலு பஸ் விடச்சொல்லி

எழுதி ஒரு பிரயோஜனமில்லை.

பையன் அமெரிக்கா போக

பாஸ்போர்ட்டுக்கு அலைந்து திரும்பிவர

ஆட்டோவுக்கு அழ வேண்டியிருக்கிறது.

இதெல்லாம் பரவாயில்லை.

நேற்று ராத்திரி முழுக்க விசாவுக்காக

இடம் போட்டு உட்கார்ந்து, சொல்லி வைத்து

தூதரக வாசலில் துண்டு போட்டு

வீட்டுக்கு வந்து படுக்கையில் விழுந்தால்

ஏகமாக இரைச்சல்.

எங்கிருந்து வந்தது இத்தனை குயில்?

வீட்டுச் சுவர்மேல், டெலிபோன்

கம்பத்தில், டிவி ஆண்டென்னா உச்சியில்.

விடாத தொணதொணப்பு.

வயதானவர்கள் தூங்க முடியவில்லை.

பிள்ளைகள் படிக்க முடியவில்லை.

படித்தால்தானே வௌிநாடு போகலாம்?

யாராவது ஏதாவது செய்து

சத்தத்தை நிறுத்தினால்

சௌகரியமாக இருக்கும்.

(மும்பை நாளிதழ் ஒன்றில் 'cuckoo menace in Thane' என்று குயில்களின் 'இரைச்சல்' பற்றிய ஆசிரியருக்குக் கடிதம் படித்ததைத் தொடர்ந்து ..).

(தினமணி கதிர்)