ஆத்தா
கடுதாசுக் கட்டெடுத்துக்
கையிலொரு குடை பிடித்து,
வேகாத வெய்யிலிலே
வீதிவழி போறவரே,
சாகாமல் கிடந்து
சன்மம் சீரழிஞ்சு
போகாதா நாளெண்ணு
பொழுதெண்ணிப் பார்த்திருந்து
புத்தி கெட்டுப் புலம்பறதைச்
சித்த நின்னு கேளுமய்யா.
பாதிரா வேளையிலே
பாவிநான் பரிதவிக்கப்
பட்டாளம் சேர என்னை
விட்டோடிப் போனபிள்ளை
எங்கேயோ இருந்து
எழுதின கடிதாசை
பிரியமுள்ள அம்மா
பிள்ளைநான் சேமமின்னு
வாசித்துக் காட்டிவிட்டுப்
போனது நினைவிருக்கா?
மாசம் பொறந்து
மணிமணியாக் கையெழுதி
மகன் சொல்லும் சங்கதிகள்
மணியார்டர் காயிதங்கள்
கொண்டு வந்தெனக்குத்
தந்ததெல்லாம் நினைவிருக்கா?
மகனையே நினைச்சு
மனசுருகிக் காத்திருந்து
பார்க்க வேணுமின்னு
பரிதவித்து நிற்கையிலே
வாரானென்னு சேதி
வந்து சொல்லிப் போனீங்க.
வெள்ளனவே எளுந்திரிச்சு
வென்னீரும் தான்வச்சுப்
பிள்ளை பசியாறப்
புட்டு அவிச்சு வச்சுச்
சீரகச் சம்பாச் சோறும் தான் சமச்சு
அயிலைமீன் குழம்பும்
ஆக்கி வச்சுக்
காத்திருந்தேன்.
நிலைவாசல் படிதாண்டி
நிழல் தட்டும் போதெல்லாம்
வந்துட்டான் மகனென்னு
வாரி எழுந்து வந்தேன்.
அக்கம் பக்கத்திலே
அம்மான்னு குரல் கேட்டா,
எனமகன் என்று சொல்லி
எழுந்து ஓடிவந்தேன்.
எதிர்பார்த்து இருந்ததெல்லாம்
ஏமாந்த கதையாக,
வரலையென்னு சேதி
வந்துசொல்லிப் போனீங்க.
தூரத்துத் தேசத்திலே
யுத்தமொண்ணு வந்திடுச்சாம்.
சண்டை முடிந்தங்கே
சமாதானம் ஆனபின்னே
வந்திடுவான் மகனென்று
வாசித்துச் சொன்னீங்க.
சண்டையெல்லாம் முடிஞ்சிடுத்து
சமாதானம் ஆயிடுச்சு
புதுசாச் தேசமொண்ணு
பெறந்துடுச்சு என்னெல்லாம்
தந்திப் பேப்பரிலே
வந்ததாகச் சொன்னாங்க
என்னத்தை நான் கண்டேன்
எழுத்தறியாப் பாவிமக
பிள்ளையையே நினைச்சுப்
பரிதவிச்சுக் காத்திருந்தேன்.
அய்யோ நான் என்ன சொல்ல
அன்னைக்கு வந்த சேதி
தேகம் நடுங்குதே
வார்த்தையுந்தான் குழறுதே
நெஞ்சிலே துக்கம்
நெரிகட்டி இறுக்குதே.
முன்வரிசைச் சிப்பாயா
முகம்சிரிச்சுப் போனபிள்ளை
தொலைஞ்சுட்டான் அவன்போன
தடங்கூடப் புலப்படலை.
ஆபீசர் கையெழுதி
அந்த லெட்டர் வந்துச்சு.
இந்த இடிவிழுந்தும்
இருக்கேனே போகாம
பித்துப் பிடித்தவளாப்
புலம்பறேனே ராப்பகலா.
அரச மரஞ் சுத்தி
ஆத்தாளைக் கும்பிட்டு
வரம் வாங்கிப் பெற்று வந்த
வயிரத்தைக் காண்பேனோ
வரும்வரையில் இருப்பேனோ.
அல்லல் துன்பப்பட்டு
அக்கரைச் சீமைக்குத்
தாயாரைக் காப்பாத்தத்
தங்க மகன் போகவேண்டாம்
எங்கேயோ உசிரோடு
இருக்கிறதா அவனெழுதிக்
கடுதாசு வந்தாலே
காலமெல்லாம் போதுமய்யா.
கடுதாசுக் கட்டெடுத்துக்
கையிலே குடைபிடிச்சு
வேகாத வெய்யிலிலே
வீதிவழி போற அய்யா
உங்க முகம் பார்த்தா என்
தங்கம் நினைவு வரும்.
இன்னைக்கும் கடுதாசு
இல்லையென்னு சொல்லாது
நாளைக்கு வருமென்னு
நம்பிக்கை சொல்லிடுங்க.
நல்லா இருப்பீங்க
நாச்சியா கிருபையிலே.
(தீபம்)

