அப்பாவின் மரணமும் அடுக்குமாடிக் குடியிருப்பும்
காலையில் வென்னீர் போட்டுத்தரச் சொன்ன குரலிலும்
குளிகை தேடித்தரக் கொடுத்த துணிப்பை மேலும்
சாவின் ரேகைகள் இல்லை.
செம்மண் பூமியில் எண்பது வருடம் முன்னால்
மாற்றாந்தாய்ப் பாலோடு தொடங்கியது
உஸ்மான்வீதி காப்பி கிளப் சர்க்கரை ஜாஸ்தி
பிற்பகல் காப்பியோடு முடிந்தது.
மழை ராத்திரியில் ஐஸ்பாளம் இறக்கிய
ஆட்டோக்காரர் சொன்னார்
'போட்டுக் கொடு சார். பொணம் கனம்'.
எல்லா மாடியிலும் தெரிந்த முகங்கள்
பார்த்தபடி நிற்கப் பாளம் உருட்டி
மாடியேற்றி நண்பர்கள் கைகொடுக்கக்
குளிரக் குளிரப் படுக்க வைத்தோம்.
'காலையிலே தானா மற்றதெல்லாம்?
சீக்கிரம் எடுத்துடுவேளா? எனக்குப்
பசி தாளாது. அல்சர் வேறே'.
தொலைபேசியில் சேதி சொல்ல
உறவு முறையிட்டது.
காலையில் லுங்கியோடு வந்த
முதல் மனிதர் நேர்மேலே மூன்றாம் தளம் -
'இந்துவிலே இப்பத்தான் படிச்சேன்.
அனுதாபங்கள்'.
டிவியில் சொல்லியிருந்தால்
எதிர்வீட்டிலிருந்தும் வந்திருப்பார்கள்.
நெய்யை ஊற்றி ஹோமம் பண்ணனும்.
சாஸ்திரி சொல்லியபடி
ஜர்தாபான் டப்பாவில்
வனஸ்பதி வாங்க
ஆள் அனுப்பினார்.
'எண்ணூறு சதுர அடி வீடா?
எவ்வளவுக்கு வாங்கினது?'
ஈரம் மிதித்துக் கேட்டவர்
குடையை மாட்ட இடம் தேடினார்.
'எடுத்துப் போக வண்டி வரலியா?'
எல்லோரும் கேட்கச் சங்கடம் தாங்காது
'போகலாம் வா' என்றார் அப்பா.
எப்போதும் போல் மழை.
(ஆனந்த விகடன்)

