இன்னொரு கடிதம்
அன்புள்ள அம்மா! விடிகாலை ஐந்து மணிக்கு
இந்தக் கடிதம் எழுதுகிறேன்.
பட்டினியும் மரண பயமுமாக
என்வயது யூதக் கைதிகளைக்
கல்லுடைக்க அனுப்பி விட்டு
இப்போதுதான் உட்கார்ந்தேன்.
எல்லோரும் பாடிக்கொண்டு போனார்கள்.
அடித்து அடித்துச் சொல்லிக் கொடுத்த பாட்டு.
அடிமை சங்கீதத்தின் சுவையே அலாதிதான்.
இன்னொரு சுவாரசியம் நேற்று மதியம்.
கால் வீங்கிய ஒரு கிழட்டு யூதனை
நிற்காமல் ஓடவைத்துப் பந்தயம்.
நான் சொன்ன முப்பதாம் சுற்றில்
செத்து விழுந்தான். இரண்டு மார்க் பணம் ஜெயித்தேன்.
இத்துடன் புகைப்படம் அனுப்பியுள்ளேன்.
கைக் குழந்தையோடு யூதப் பெண்ணைச்
சுட்டுக் கொல்லும்முன் எடுத்தது.
குழந்தை கண்ணில் மிரட்சி பார்த்தாயா?
முதுகுப் பக்கமிருந்து எடுத்ததால்
அவள் முகபாவம் படத்தில் வரவில்லை.
அடுத்த தடவை இன்னும் நல்லதாக அனுப்புகிறேன்.
அப்புறம் வீட்டில் என்ன விசேஷம்?
அப்பா கால்வலி குறைந்ததா? அவர்
குளிரில் அதிகம் அலைய வேண்டாம்.
அம்மா, உன் கையால் சாப்பிட்டு
எத்தனை நாளானது? சீக்கிரம் திரும்ப வேண்டும்.
(இரண்டாம் உலகப் போரின் போது யூத வதை முகாமில் காவல் இருந்த ஒரு ஜெர்மானிய நாஜி இளைஞன் தன் அம்மாவுக்கு இப்படி ஒரு புகைப்படம் அனுப்பியதாக 'Willing executioners of Hitler' புத்தகத்தில் படித்ததின் பாதிப்பு).
(தினமணி கதிர்)

