வீடு விற்பனைக்கு

என்ன கேட்டீர் வண்டிக் காரரே?

ஊருக்கு நானொன்றும் புதுசு இல்லை.

மாறிப் போச்சுங்க ஊர் முச்சூடும்.

மாறாதது நானும் என் குதிரையும்.

பூட்டிய வீட்டு வாசலில் நிறுத்தும்.

போட்டுக் கொடுங்க முதல் சவாரி.

கதவைத் திறக்கப் புழுதி படிந்த

வாசல் திண்ணை. ('சுதந்திரச் சங்கு'

வீசிப் போவார் சுதேசி நாயக்கர்.)

(தீபாவளிக்குக் காந்தி சொற்படி

கதர்தான் வாங்கணும். சிந்தாமணியில்

பாகவதர் டாக்கி. சீட்டுக் கிடைச்சுதா?)

சவுக்கிய மெல்லாம் எப்படீங்க?

வெங்கடா சலமா? தவறிப் போய்

வருசம் நிறைய ஆகிப் போனதே.

'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து'

சுக்கலாய் உடைந்து கிடந்தது.

ராட்டைப் பெட்டியில் வண்டுகள்.

ரிஜிஸ்தர் ஆப்பீசில்

பத்திரம் பதிந்தேன்.

வழக்கம் போல் ரயிலடிப் பலகை

விசாரிக்கிறது -

'இந்த வாரம் விகடன் படித்தீர்களா?'

மாதுங்காவில் போய்த்தான் வாங்கணும்.

நல்ல வரனாய்ப் பெண்ணுக்கு அமையணும்.

தெரிஞ்சால் சொல்லும் பம்பாய்க் குள்ளே.

('அன்னம் விடுதூது')