கி.பி 2099 மற்றும் ஒரு வீதி

பழைய உலோகம் மலிவு விலையில்

இவ்விடம் கிடைக்கும். இறந்து போன

விமான றக்கையில் பிய்த்து எடுத்தது.

கம்ப்யூட்டர் நாடாவையும் சானிட்டரி நாப்கினையும்

சேர்த்து வாராதே. குப்பை எல்லாம்

தொட்டியில் சேர். சுத்தம் சுகந்தரும்.

அவர்கள் எதிரகத்துப் பேராசிரியரை

நேற்றே அழைத்துப் போனார்கள்.

இவரா? வம்புக்கே போகமாட்டார்.

அரசாங்க ஊர்தி. வரிசையில் வரணும்.

அடையாள அட்டை கையில் உள்ளதா?

காடாத் துணி வழங்கப் படும்.

பிள்ளைகளே! கவச வண்டிகள் போனபிறகு

சாலையைக் கடக்கலாம். பிராணவாயுக்

கவசம் பத்திரம். போய் வாருங்கள்.

நமது வீரர்கள் இன்றும் வென்றனர்.

தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழியுங்கள்.

அடுத்த ஒலிபரப்பு நாளைக்காலை ஐந்துக்கு.

மின்சாரம் இல்லை. செய்தித்தாள் விசிறத்தா.

கரப்பு வராது ஜலதாரை அடைத்துக்

கவனமாக வந்துபடு. உறை இருக்கா?

(கணையாழி)