கணக்கெடுப்பு

முகமுடி யணிந்தோம்

எனது நீலம்

பழுப்பாய்த் தாடை மயிர் துருத்த

மற்றவர் அணிந்தனர்.

கறுப்பும் இருந்தது.

காற்றில் நெடிகள் ஏறின.

வௌியே ஊர்திகள்

வேகம் கொண்டன.

வானம் சுருங்கக்

காகிதம் ஒட்டிய சுவர்கள்

உள்வளைந்து தொடமுயல

யந்திரம் ஒன்று பாடியது.

சூழ்ந்து நீரழுத்தும்

ஒழுங்கை யுள்ளே

மெல்ல நடந்தோம்.

செவ்வகமாகக் கிடந்த அறை.

வௌிர் நீல விளக்கில்

படுத்திருந்தார்கள்.

எண்ணத் தொடங்கினோம்.

எல்லாம் சரிதான்.

போகலாம்.

மணி ஒலித்தது.

சுகாதாரமான அலுவலகத்தில்

தட்டச்சுப் பொறிகள் நிறுத்திப்

பெண்கள் கேட்டனர் -

'எத்தனை இருந்தது?'

முகங்கள் கழற்றினோம்.

நாளை எனக்கு நீலம் -

நண்பன் சொன்னான்.

'எத்தனை இருந்தது'?

மறுபடி அவர்கள்.

விரித்த கோப்பில்

என்பெயர் கண்டேன்.

எண்ணத் தொடங்கினர்.

ஒன்று என்று நீண்ட விரல்கள்

என்னைச் சுட்ட.

(கணையாழி)