புள்ளி
ஒரு சக்கரம் உருண்டது.
தொடங்கிய இடத்தைப் புள்ளியிடு.
இலக்கு உணரப் பட்டதா?
நாம் கற்பித்துக் கொள்வோம்.
திசைகள்? மேலிருந்து கீழா?
கீழிருந்து மேலா?
அதையும் தான்.
ஆரங்கள் உண்டா?
இல்லையென்றே சொல்லலாம்.
என்ன போயிற்று? கற்பித்துக் கொள்.
உருளும்போது ஆரங்களைத்
தனித்துப் பார்க்க இயலாதென
வாத்தியார் சொன்னது நினைவிருக்கா?
வாத்தியார் எல்லாம்தான் சொன்னார்.
சொன்னபடி குடுவையில் ஆக்ஸிஜன் தயாரித்து
முகர்ந்தோம். ஆடிகளை அமைத்து
வெய்யிலில் காயப்போட்ட கால்பந்தாட்ட
மைதானத்து ஓராமாய் அவர்
கோவணம் அவிழ்த்துக்
குந்தியிருக்க நோக்கினோம்.
அவர் சொல்லாமலே
அன்னி பெசண்டுக்கு மீசை போட்டோம்.
அப்புறம் ஒரு நாள் நினைவிருக்கா?
அவரைத் தூக்கிப் போகத் தோள் கொடுத்தோம்.
அப்புறம்? அதெல்லாம் அப்புறம்.
கற்பிதமா முக்கியம்? நமக்குப் பேச வேண்டும்.
தொடங்கிய இடத்தில் புள்ளி?
அதை அழித்துவிட்டு வந்து உட்கார்.
('ழ')

