நிறங்கள் - மழைக்கு அப்புறம்

ஆல்பின் சிறுவன் மட்டும்

கையில் பசையும் காகிதச் சுருளுமாக

வானவில்லை அதிசயிப்பான் கண்கள் சுருக்கி.

அங்கங்கே நீர்சுமந்து

கரும் பாம்பாய்த் தெரு நௌியும்.

பறக்க வைத்த தேவதைகள்

பாதியிலே சபித்தபடி

இறகு உதிர்த்த ஈசல்கள்

தரைநெடுகப் பரபரக்கும்.

சிறகு உலர்ந்த காக்கைகளும்

காலடியில் காற்று நீக்கி

ஊர்கின்ற பல்லிகளும்

விருந்துண்ண வெறுஞ் சுவரில்

சினிமா முகங்களைத் தடவிப் பதித்து

இறங்குமுன் உதிர்ந்தது

ஒட்டி வைத்த வானவில்.

ஆல்பின் சிறுவன் மட்டும்

காகிதச் சுருளும் பசையுமாக.

(கணையாழி)