புவா

டிபன்சு காலனி மேஜர் குப்தாவின்

ஒற்றைப் பெண் ரஞ்சனா குப்தா.

ஜீன்சும் டீசர்ட்டும் குட்டை முடியுமாய்ப்

பொழுது போக ஆபீசு வருகிறாள்.

சிவகங்கையிலிருந்து சிவப்புப் பேரணிக்காகத்

தில்லி வந்த வாத்தியார் நண்பர்

விட்டுப் போன புத்தகப் பெயரைப்

பேச்சு வாக்கில் சொன்னேன். நெருங்கி விட்டாள்.

நெருலாவில் ஐஸ்கிரீமோடு விசாரித்ததில்

ரஞ்சனாவுக்குப் பிடித்த பெண் எழுத்தாளர்

சீமொன் த புவா.

அப்புறம் பிடித்தது தேராதூன் பக்கம்

எருமைப் பண்ணை வைத்திருக்கும்

லாஜ்வந்தி புவா.

அத்தை வீட்டுக்கு

வருஷம் ரெண்டு தடவை போய்

உருண்டு திரண்ட உடம்பு.

எருமைப் பால்.

போனமாதம் தேராதூன் போய் வந்ததும்

டீசர்ட்டில் எழுதிய ரெட்டைப் பனைமரங்கள்

இடைவௌி அதிகமாக இறுகிய சட்டை.

நடராஜன் மெஸ்ஸில் 'பூவா'வைக் கொட்டிக் கொண்டு

ஆரிய சமாஜ வீதியில் கண்ணாற நடந்துவிட்டு

ரஞ்சனா கொடுத்த 'ரெண்டாம் செக்ஸ்' புத்தகம் பிரிக்க

முப்பதாம் பக்கத்தில் நீளத் தலைமுடி.

நாளைக்குப் புரட்டலாம். மூடி வைத்தேன்.

ஒற்றை முடியைக் கன்னத்தில் இழைத்தேன்.

டீசர்ட்டை இறுக வைத்த தேராதுன் புவா

இன்னும் இரண்டு எருமை வாங்கட்டும்.

எருமை இல்லாது போனால்

எனக்கு எதற்கு சீமொன் த புவா?

(புவா - இந்தியில் அத்தை; சீமொன் த புவா - பிரஞ்சுப் பெண்ணிய எழுத்தாளர்; 'இரண்டாம் செக்ஸ்' - அவர் எழுதிய புத்தகம்; பூவா - பேச்சுத் தமிழில் சாப்பாடு)

(கணையாழி)