எரிதல்
நேற்று எரிந்த சிதைக்குப் பக்கம்
மொட்டைத் தலையும் கக்கத்தில் குடையுமாக.
'கிண்டியிலே ரயிலேறிக் காப்பி கூடக் குடிக்காமல்
மாம்பலம் மழையோடு நடந்தேன் நேரமாகும்னு'.
நான் காப்பிகுடித்துக் கிளம்பத் தாமதம்.
போனவர் போனாலும் மற்றவர் உயிர்க்கக் காப்பி.
லுங்கி தழைத்துப் பக்கத்துக்
கொட்டகை யிறங்கியவன்
சிநேகமாகச் சிரித்தான் இன்றும் கையேந்துவான்.
'அது ரெட்டியாரம்மா. நீங்க போனப்புறம் வந்தது.
எரிய வச்சுப் பிள்ளைங்க இங்கேயே சண்டை'.
மழைக் காற்றில் ரெட்டியாரம்மா மேலேசிதறி
எல்லோரும் பிள்ளையாகத் தலைதடவினாள்.
'ராத்திரி ரெண்டு மணியாச்சு. ஆட்டோ பிடிச்சு
வீடு போனா, டிவி பார்த்துட்டிருக்கா. திட்டினேன்'.
கண்ணை மூடி எடுத்ததைப்
பாலில் நனைக்க உதவினான்.
ஈரத் தரையில் குடையூன்றி மந்திரம் நீண்டது.
போதும் என்று சொல்லி மழையில் அவன் போக,
போட்டுக் கொடுங்கோ என்று குடை விரிந்தது.
(கணையாழி)

