தரிசனம்
தலவரலாறு இல்லாத
கோயிலைச் சுற்றி
வழிகாட்ட வந்த கிழவர்
பிரகார வெய்யிலில் கைநீட்டிக்
காமராஜ் பேசிய இடம் என்றார்.
சிவாஜி சாயலில் தொப்பை தெறிக்கச்
சிவனார் ஆடும் சுவரில்
மஞ்சள் எழுத்து வேலு ஆர்ட்ஸ்
கையெழுத்தில் காரையைச் சுரண்டி
ராஜாகாலப் படங்கள் கீழே
இருந்ததாக விரல் தேய்த்தார்.
காக்கிக் கால்சராய்மேல் கைத்தறித் துண்டோடு
வாசலில் நிறுத்திய சைக்கிளில் கவனமாய்
வாத்தியம் பிசிறிட வாசித்தவரைக்
காருகுறிச்சி பரம்பரை என்றார்.
பாசிக் குளப்படியில்
சிகரெட் துண்டு ஒதுக்கி,
சாக்குக் கட்டியில்
'சாந்தி ஒரு தேவிடி..'யை மிதித்தபடி
கண்ணாம்பா ஷூட்டிங்க் நடந்ததென்றார்.
வியர்வையும் லைப்பாய் வாடையுமாக
பிரசாதம் நீட்டிய குருக்கள் பற்றித்
தொடங்கும் முன் யாரோ
மணியடித்ததால்
கோபுரப் புறாக்கள் கொஞ்சம் பறந்தன.
செருப்பில் கால்நுழைத்து
ஒட்டிய வயிறு பார்த்துப் பையில் கைவிட
வேண்டாம் என்று சொல்லி
விரசாக நடந்து போனார்.
கொடுத்து வைத்த கோயில்.
(அம்பலம் இணைய இதழ்)

