பயம்
போகக் கூடா தென்பதை மீறி
வௌியில் நடந்து திரும்பி வந்தால்
பாதை யிருட்டில் நௌியும் வாசல்
படிக் கட்டிலும் அசுவனி உதிர்க்கும்
பந்தல் கீழும் துரத்தி வரும்.
நாற்கா லியிலும் யோகம் போலக்
கால்கள் மடித்து அமர வைக்கும்.
மின்விசை தவறிய வீட்டில் இருளில்
மெழுகின் நிழலில் பலவாய்ப் பெருகும்.
படுக்கை விரித்தால் தலைக்கு மேலே
சீறத் துவங்கித் தூக்கம் கெடுக்கும்.
தூளிக் கயிற்றில் இறங்கு மென்று
பக்கம் கிடத்திய குழந்தை சிணுங்கும்.
தூறத் துவங்கிய போது சன்னலைச்
சாத்தப் போனால் திரும்ப வைக்கும்.
விடியும் நேரம் கொஞ்சம் அயர்ந்தால்
கனவில் நீண்டு கழுத்தில் படரும்.
விடிந்த பிறகு மகுடி வைத்து
ஊதிப் பார்த்தால் ஒன்றையும் காணோம்,
நேற்றுப் பார்த்ததாய்ச் சத்தியம் செய்தவர்
இல்லையென்று புதிதாய் மறுக்கக்
கோணிப் பையில் அரிசி வாங்கிப்
போனான் பிடாரன் பயத்தைப் பிடித்து.
(கணையாழி)

