புதுசு
படைப்புக் கடவுள் தாடி சொறிந்து
பக்கம் இருந்த சகாவிடம் சொன்னார்
'புதுசு ஒண்ணு. வேடிக்கை பாரும்'.
தவளை இரைச்சல் எழுந்த குளத்துத்
தண்ணீர்ப் பரப்பில் நிழல்தடம் பதித்து
இசைந்து போனது பட்டாம் பூச்சி.
சூரியச் சூடும் நுனிப்புல் தேனும்
இறகில் தங்கத் தூசியும் கொண்டு
எவ்விப் பறந்து மேற்கே போகச்
சின்னக் கீற்றாய்ப் பனியின் தூவல்.
வெள்ளை உடுத்த பூச்சி தன்னை
உன்னதமாக உணரத் தொடங்கிக்
கீழே பார்க்கச் சிறிசுகள் சிலது.
'எழுந்து வரநான் ஆணை எறிந்து
எழுபவை தவிர மற்ற எதற்கும்
போக்கு வரத்து உரிமை இல்லை'.
எம்பிக் குதித்த பூச்சி தனது
இறக்கை இரண்டும் கழற்றி உதிர்த்துத்
தவளைக் குளத்தில் ஐக்கியமாகிப்
புதிய தவளையாய், இலக்கணச் சுத்தமாய்.
பூச்சியைப் பாதியில் தவளையாக்கினால்
லாஜிக் இடிக்குதே - சகாவு கேட்டார்.
தவளைகள் சொல்படி தான்இது படைத்தேன் -
தாவிக் குதித்துக் கடவுள் நகர்ந்தார்.
(நவீன விருட்சம்)

